இஸ்லாத்தின் நடுநிலையைப் புரிந்துகொள்வது எவ்வாறு..?

இஸ்லாத்தின் நடுநிலையைப் புரிந்துகொள்வது எவ்வாறு..?

தொகுப்பு: மு. அ. அப்துல் முஸவ்விர்

இஸ்லாத்தின் நடுநிலையைப் புரிந்துகொள்வது எவ்வாறு..?
இஸ்லாத்தின் நடுநிலையைப் புரிந்துகொள்வது எவ்வாறு..?

வர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் எவ்வாறு திரும்பி வர வேண்டுமோ அவ்வாறு திரும்பி வருகின்றார். (25:71)

அல்லாஹ் தனது தூதருக்கு இறக்கியருளியது போன்று இஸ்லாத்தை முழுமையாகவும் நடுநிலையாகவும் புரிந்து கொள்வதன் மூலம் அதன் இரு சிறப்பம்சங்கள் வெளிப்படுகின்றன.

– இஸ்லாம் பூரணமும் முழுமையும் கொண்டதொரு கொள்கை.

அகீதா, ஷரீஆ, அறிவு, அமல்; இபாதத், முஆமலாத்,கல்வி, பண்பாடு, சத்தியம், பலம், தஃவா, அரசு, மார்க்கம், உலகம், நாகரிகம், உம்மத் இவை அனைத்தையும் அது கொண்டிருக்கிறது. இபாதத்கள் இன்றி பண்பாடுகளோடு மாத்திரம் சுருங்கிக் கொள்ளல், பண்பாடுகளை புறக்கணித்து இபாதத்களில் மூழ்கிப் போதல், ஷரீஆவை மறுத்து அகீதாவை மாத்திரம் ஏற்றுக்கொள்ளல், பலம் பிரயோகிக்கப்படாமல் சத்தியத்தை அடைந்து கொள்ளல், தலாக்கை மறுக்கும் திருமண முறைமையை அங்கீகரித்தல், ஜிஹாதை மறுத்து சமாதானத்தை மாத்திரம் கருப்பொருளாக்கல், உலகை புறக்கணித்து மார்க்கத்தை பின்பற்றல், அரசியலை ஒதுக்கிவிட்டு தஃவா செய்தல்…  இவ்வாறு மார்க்கத்தை கூறுபோடுவதை இஸ்லாமிய போதனைகள் ஏற்றுக்கொள்வதில்லை.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

‘அல்லாஹ் இறக்கியவற்றைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு கூறுங்கள். அவர்களுடைய மனோ இச்சைகளை பின்பற்றாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு இறக்கியவற்றில் சிலதை விட்டும் அவர்கள் உங்களை திசைதிருப்பி விடாமல் எச்சரிக்கையாக இருங்கள்’ (5:49)

இஸ்லாம் முழு மனித சமூகத்திற்கும் வழிகாட்டக் கூடிய சர்வதேசத் தூது. அது அனைத்து காலத்துக்கும் பொருத்தமானது. வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் வழிகாட்டும் தூதும் கூட.

– இரு விடயங்களுக்கு மத்தியில் நடுநிலைமையை கைக்கொள்ளல்.

ஒன்றோடொன்று இணைய முடியாத, முரண்பட்ட பண்புகள் கொண்டவை என பலராலும் ஊகிக்கப்படும் அம்சங்களை நடுநிலையாக அணுகுவதை இது குறிக்கிறது.

ஆன்மீகம், சடவாதம், இறைவன் சார்ந்தவை, மனிதன் சார்ந்தவை,  சிந்தனை, உணர்வு, முன்னுதாரணங்கள், நடைமுறை சாத்தியமானவைகள், தனிமனிதன், சமூகம், அறிவு, வஹி, உலகம், மறுமை, தனிமனித சுதந்திரம், இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பொருளாதார பௌதீக முன்னேற்றம், ஆன்மீக பண்பாட்டு வளர்ச்சி… இவை ஒவ்வொன்றுக்கும் அதற்குறிய பங்கு கொடுக்கப்பட வேண்டும். ஒன்று இன்னொன்றின் மீது அல்லது பலதின் மீது அத்துமீற முடியாது.

‘அளவை நிறுவையில் நீங்கள் அத்துமீற வேண்டாம். நிறுவையை நீதியாக மேற்கொள்ளுங்கள். நிறுவையில் குழப்பம் செய்யாதீர்கள்’ (55: 8-9)

வணக்க வழிபாடுகள், கல்வி, உடற்பயிற்சி, அழகியற் கலைகள், விஞ்ஞானம் என்பன இஸ்லாத்தின் மிக முக்கிய பகுதிகள். வணக்க வழிபாடுகள் ஆன்மீகத்தை மேம்படுத்துகின்றன. கல்வி அறிவை வளர்க்கின்றது. உடற்பயிற்சி உடலுக்கு தேகாரோக்கியத்தை அளிக்கிறது. அழகியற் கலைகள் மனித உணர்வுகளை எழுப்பிவிடுகின்றன. விஞ்ஞானம் வாழ்வொழுங்கை செம்மைப்படுத்துகின்றது.

கலை, இலக்கியங்களை வளர்த்தெடுத்தலும் தூதை பலப்படுத்துவதற்காக அவற்றை பயன்படுத்தலும்

அவனே அனைத்து படைப்புகளையும் மிக கவர்ச்சியாக படைத்தான்
அவனே அனைத்து படைப்புகளையும் மிக கவர்ச்சியாக படைத்தான்

இவ்வடிப்படையைப் பார்த்து சிலர் ஆச்சரியப்படலாம். மார்க்கம் கலைகளின் எதிரி எனும் மனோநிலையிலேயே அவர்கள் தொடர்ந்துமிருக்கின்றனர். இது பிழையானதொரு மனப்பதிவு. கலையின் அடிநாதம் அழகை உணர்ந்து ரசிப்பதும் அவற்றை கவர்ச்சியாக வெளிப்படுத்துவதும்தான். இஸ்லாம் முஸ்லிமின் உள்ளத்தில் இக்கலையுணர்வை விதைக்கிறது. பிரபஞ்சம் முழுக்க பரவிக் காணப்படும் படைப்பாளனது பிரமிக்கக் கூடிய அழகான இறை ஆக்கங்களை பார்த்து ரசிக்கும் படி அது முஃமினுக்கு கற்றுக் கொடுக்கிறது:

‘அவனே அனைத்து படைப்புகளையும் மிக கவர்ச்சியாக படைத்தான்’ (ஸஜதா 07),

‘அனைத்தையும் மிக நேர்த்தியாக செய்த அல்லாஹ்வின் படைப்பு’ (நம்ல் 88),

‘அருளாளனின் படைப்பில் எவ்வித கோளாறுகளையும் கண்டுகொள்ள மாட்டாய்’ (முல்க் 03)

அல்குர்ஆனை படித்துப் பார்ப்பவர் அது மனித பார்வைகளை பிரபஞ்சம், அதன் ஒவ்வொரு பகுதிகளை நோக்கி திருப்புவதையும் அதனூடாக மனித அறிவு மற்றும் உள்ளத்தை விழிப்பூட்டுவதையும் இலகுவாக கண்டுகொள்வார்:

வானம்

‘அவர்களுக்கு மேல் இருக்கும் வானத்தை நம் அதனை எவ்வாறு கட்டினோம், எவ்வாறு அலங்கரித்தோம் என்று அவர்கள் பார்க்கவில்லையா?’ (காப் 06).

பூமி

‘அழகான வகை வகையானவற்றை நாம் அவற்றில் முளைக்கச் செய்தோம்’ (காப் 07),

‘வானத்திலிருந்து அவன் உங்களுக்காக நீரை இறக்கி வைத்தான். அதனைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்தோம்’ (நம்ல் 60).

விலங்குகள்- கால்நடைகளையும் அதன் பயன்களையும் குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு கூறுகிறான்

‘நீங்கள் அவற்றை காலையில் ஓட்டிச் செல்லும் போதும் மாலையில் ஓட்டி வரும் போதும் அவற்றில் உங்களுக்கு அழகிருக்கிறது’ (நஹ்ல் 06). மனிதன்- ‘அவனே உங்களை உங்களது உருவங்களை அழகாகப் படைத்தான்’ (தகாபுன் 03),

‘மனிதனை நாம் மிக நேர்த்தியாக அழகாகப் படைத்தோம்’ (தீன் 04).

நபியவர்கள் குறிப்பிட்டார்கள்: நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அழகை விரும்புகிறான் முஸ்லிம்

அல்குர்ஆன் தன்னளவில் அற்புதமானதோர் இலக்கிய நடையைக் கொண்டிருக்கிறது. இணைவைப்பில் ஈடுபட்டிருந்த அரபிகள் கூட மிக ஆவலுடன் அதற்கு செவிசாய்த்தனர். சிலர் கூறினர் : அதற்கென்றொரு சுவை இருக்கிறது. அதில் ஓர் ஈர்ப்பிருக்கிறது. அது மிக அழகிய குரல் கொண்டு ஓதப்படும் போது அழகோடு இன்னோர் அழகும் சேர்ந்து கொள்கிறது.

நபியவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் : உங்களது குரல்களைக் கொண்டு அல்குர்ஆனை அழகுபடுத்துங்கள். அழகிய குரல் குர்ஆனின் அழகை மென்மேலும் அதிகரிக்கிறது. (அஹ்மத்)

ஒலி, ஒளி முப்பரிமாண உயர்ரக கலைகளை இஸ்லாம் வரவேற்கிறது. கூடவே சில நிபந்தனைகளையும் அது முன்வைக்கிறது. இஸ்லாத்திற்கு முன் இருந்த நாகரீகங்களில் பவலாகப் பின்பற்றப்பட்டு வந்த சிலை வணக்கத்திற்கு அழைப்புவிடுக்கும் அல்லது அதற்கு பலம் சேர்க்கும் வகையில் அமையும் கலைகளை விட்டும் இஸ்லாம் தூரமாகிக் கொள்கிறது. கலை, இலக்கியம் அதன் ஒவ்வொரு பகுதிகளும் ஏகத்துவத்தை ஏதோவொரு வகையில் விளக்குவதாகவும் அதன் பக்கம் அழைப்பதாகவும் இருக்க வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டக் கூடிய மற்றும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ மானக்கேடான விடயங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடிய கலைகளையும் இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாற்றமாக உள்ளத்தை தூய்மைப்படுத்தல், மனித கண்ணியத்தை உயர்த்தல், படைப்பாளனுடனான நெருக்கத்தை ஏற்படுத்தல், படைப்பினங்களுக்கு நன்மை செயதல் போன்றவற்றுக்கான தூண்டுதலாக அக்கலைகள் அமைய வேண்டும் என அது வழிகாட்டல் வழங்குகிறது:

‘நிச்சயமாக அல்லாஹ் பயந்து நடப்பவர்களோடும் நல்லது செய்பவர்களோடும் இருக்கிறான்’ (நஹ்ல் 128)

இஸ்லாம் கலைகளை பலப்படுத்துவதுடன் அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது
இஸ்லாம் கலைகளை பலப்படுத்துவதுடன் அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது

இஸ்லாம் கலைகளை பலப்படுத்துவதுடன் அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது என்பதை இப்பின்னணியில் புரிந்து கொள்ள முடியும். இஸ்லாமிய வரலாற்றின் செழிப்புமிகு காலப்பகுதிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். கட்டிட நிர்மாணக் கலைகள் மலிந்து காணப்பட்டன. அலங்காரம், அரபு எழுத்தணி போன்ற கலைகள் தனிச்சிறப்பு பெற்று மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தன. இக்கலைகளின் வெளிப்பாடுகளை மாளிகைகள், மஸ்ஜித்ள், நூதனசாலைகள் போன்றவற்றில் மிகத் தெளிவாகவே கண்டுகொள்ள முடியுமாக உள்ளது.

இஸ்லாமிய வாழ்வமைப்பு என்பது இருக்கமானதொரு வாழ்வமைப்பு, அதில் சிரிக்கக் கூடிய உதடுகள், இன்பமனுபவிக்கக் கூடிய உள்ளங்கள், ஆறுதலளிக்கக் கூடிய நகைச்சுவைகள், திருமண விழாக்களில் மேளம் அடித்து பாட்டு பாடுகின்ற குடும்பங்களை கண்டுகொள்வது சாத்தியமற்றது போன்ற கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை.

முகம் சுழித்த கடும் போக்காளரின் புறதோற்றப்பாடோடு இஸ்லாத்தை அடையாளப் படுத்துவது இஸ்லாத்திற்கு செய்யும் மிகப்பெரும் அநீதி. கலைப்பகுதியில் இஸ்லாமிய சட்டங்களை தெளிவுபடுத்தும் சில புத்தகங்களை நாம் வெளியிட்டிருக்கிறோம். தீவிர நிலைகளுக்கு அப்பால் நின்று இஸ்லாத்தின் நடுநிலைமையான நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக இப்புத்தகங்களை வாசிப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

அறபு : ஷெய்க் அல்கர்ளாவி
தமிழ் : ஷெய்க் ரிஷாட் நஜிமுடீன் (நளீமி)

Related Post