மஸ்ஜிதுக்கான தொழுகை-தஹிய்யதுல் மஸ்ஜித்
மஸ்ஜிதுக்குள் நுழைபவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) தொழுவது சுன்னத்தாகும்.
‘உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழும் வரை அமர வேண்டாம்’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: கதாதா இப்னு ரபீஃ(வ)
ஆதாரம்: புஹாரி (444), இப்னு குஸைமா(1827), இப்னுமாஜா (1012)
பள்ளிக்குள் நுழைந்தவர் அதில் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது.
ஒருவர் குத்பாவுடைய நேரத்தில் பள்ளிக்குள் நுழைந்தாலும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டே அமர வேண்டும்.
கத்பானி கோத்திரத்தைச் சேர்ந்த ஸுலைக் என்பவர் நபி(ச) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது பள்ளியினுள் வந்து அமர்ந்தார். இரண்டு ரக்அத்துக்கள் தொழுதீரா? என நபியவர்கள் கேட்ட போது அவர் இல்லை என்றார். எனவே, நபி(ச) அவர்கள் அவரை எழுந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுமாறு ஏவினார்கள். (பார்க்க: முஸ்லிம் (58-875), இப்னுமாஜா (1114), அபூதாவூத் (1116)
எனவே, குத்பா உரை நடக்கும் போது பள்ளிக்குள் வந்தாலும் சின்னதாக இரண்டு ரக்அத்துக்கள் தொழாமல் அமரக் கூடாது.
மறதியாக தெரியாமல் ஒருவர் அமர்ந்துவிட்டால் கூட உடனே எழுந்து தொழுதுவிட வேண்டும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது.
வாஜிபா? சுன்னத்தா?
நபி(ச) அவர்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையை இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து ஏவியிருப்பதால் இது வாஜிபான தொழுகையா அல்லது சுன்னத்தான தொழுகையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
பிரபலமான ஒரு ஹதீஸில் ஒரு நபித் தோழரிடம் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழ வேண்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அந்த நபித்தோழர் வேறு தொழுகை என்மீது கடமையா? என நபியவர்களிடம் கேட்ட போது இல்லை, சுன்னத்தான தொழுகைதான் உண்டு என்று கூறினார்கள்.
இது போன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை சுன்னத்தானது என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
மற்றும் சிலர் தொழாமல் அமர வேண்டாம் என்ற கட்டளை தொழுவதை வாஜிபாக (கட்டாயமாக) ஆக்குவதுடன் தொழாமல் அமருவதை ஹராம் (தடையாக) ஆக்குகின்றது.
இந்த அடிப்படையில் இந்த ஏவல் என்பது வாஜிபைக் காட்டுகின்றது என்று கூறுகின்றனர்.
இருப்பினும் தொழாமல் அமர வேண்டாம் என்ற இந்த ஏவல் கட்டாயம் என்பதைக் குறிக்காது என எடுப்பதே பொருத்தமானதாகும்.
”நபி(ச) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ச) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார்.
அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள்.
அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ வெட்கப்பட்டு சபையின் பின்னால் அமர்ந்து விட்டார்.
நபி(ச) அவர்கள் உபதேசத்தை முடித்ததும் ‘அந்த மூன்று நபர்களையும் பற்றிக் கூறட்டுமா?’ என்று கேட்டுவிட்டு முதலாவது நபரோ அல்லாஹ்வின் பால் ஒதுங்கிக் கொண்டார்.
அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். அடுத்தவரோ வெட்கப்பட்டார்.
எனவே, அல்லாஹ்வும் வெட்கப் பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப் படுத்தினான்’ என அபூ வாக்கித் அல் லைஸீ(வ) அறிவித்தார்.’ (புஹாரி: 66-474)
இந்த ஹதீஸைப் பார்க்கும் போது தொழாமல் அமருவது ஹராம் அல்ல என்பதைப் புரியலாம். ஏனெனில், வந்த இருவரும் பள்ளியில் அமர்ந்துள்ளனர்.
அவர்கள் தொழுதது பற்றி எதுவும் கூறப்படவில்லை. எனவே, தொழாமல் அமர்வது ஹராம் அல்ல. எனினும், தஹிய்யதுல் மஸ்ஜித் என்பது வலியுறுத்தப்பட்ட சுன்னா என்று கூறலாம்.
ஒருவர் பள்ளிக்குள் நுழையும் நேரம் தொழுவது தடுக்கப்பட்ட நேரமாக இருந்தாலும் அவர் பள்ளியில் அமர விரும்பினால் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுதுவிட்டு அமரலாம். இது குறித்து முன்னரே விபரிக்கப்பட்டுள்ளது.