தொழுகையை விடுவதனால் ஏற்படும் விளைவுகள்: –
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: –
அல்லாஹ் கூறுகிறான்: –
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். ஆதாரம்: முஸ்லிம்.
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி
தொழுகையை விடுவோர் நரகில் நுழைவார்: –
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)
தொழாதவர்கள் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான்: –
யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
சடைந்தவர்களாக தொழுவோரின் தான தர்மங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: –
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை. (அல்குர்ஆன் 9:54)
ஜமாஅத்தாக தொழ வராதோரின் வீடுகளை நபி (ஸல்) அவர்கள் தீயிலிட்டுக் கொளுத்த விரும்பினார்கள்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எடுத்துக்கொள்பவர் அறிவில்லாத மக்கள்: –
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். (அல்குர்ஆன் 5:58)
எனதருமை சகோதர சகோதரிகளே, அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்ட தொழுகையை விடுவதன் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்க கடமைப்பட்டடுள்ளோம். ஷைத்தானின் சோம்பல் என்னும் வலையில் சிக்க விடாமல் அல்லாஹ் என்னையும், உங்களையும் மற்றும் முஸ்லிமான நம் அனைவரையும் பாதுகாத்து தொழுகையை முறைப்படி தொழுவோரின் கூட்டத்தாருடன் சேர்த்துவைத்து நம்மை சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali

