ஹஜ்-எப்படி..??

makka____by_Tuba_photo

httpv://youtu.be/ID9fTXRrvmo

ஜ் செய்வதற்கு முதலில் இஹ்ராம் கட்டவேண்டும்.
இஹ்ராம் என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் வெள்ளை ஆடை அணிந்திருக்க வேண்டும். ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும், உம்ராவையும் செய்ய நாடினால் லப்பைக ஹஜ்ஜன் வ உம்ரதன்’ என்று கூற வேண்டும்.
ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் லப்பைக ஹஜ்ஜன்’ என்று கூற வேண்டும். உம்ராவைச் செய்ய நாடினால் லப்பைக உம்ரதன்’ என்று கூற வேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா கூற வேண்டும். (முஸ்லிம் 2194)
லப்பை(க்)க அல்லாஹும்ம லப்பை(க்)க லப்பை(க்)க லா ஷரீ(க்)க ல(க்)க லப்பை(க்)க இன்னல் ஹம்த வந்நிஃம(த்)த ல(க்)க வல்முல்க லா ஷரீ(க்)க ல(க்)க.
இஹ்ராம் கட்டியவர்கள் அதிகமாக தல்பியாவை கூறிக் கொண்டு இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும் வரை தல்பியாவைக் கூற வேண்டும். கல்லை எறிந்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும். (புகாரி 1544)
இஹ்ராமின் போது என்ன ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டி தந்துள்ளார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்),  (சாயம் எடுக்கப் பயன்படும்) வர்ஸ் எனும் செடியினால் சாயம் தோய்த்த ஆடை, அல்லது குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை
(இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது.
makka____by_Tuba_photoகாலணிகள் கிடைக்கவிட்டால் (தோலினாலான உயரமான) காலுறைகளை அணிந்துகொள்ளலாம். (ஆனால்) காலுறைகள் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி (செய்ய அதற்கு மேலிருப்பவற்றை) வெட்டி விடவேண்டும்” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (134)
“அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியிருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று ஒரு மனிதர் எழுந்து கேட்டார்.  அதற்கு நபி (ஸல்)  அவர்கள் “நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும்,  (முக்காடுள்ள) நீள் அங்கிகளையும் (அல்லது தொப்பிகளையும்) அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப்பூச் சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! அணியக்கூடாது; அவள் கையுறைகளையும் அணியக்கூடாது!” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (1838)
இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை
திருமணம் செய்யக்கூடாது. (புகாரி 2552)
தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது. (அல் குர்ஆன் 2:197)
தலையை மறைக்க கூடாது. (புகாரி 1265)
நறுமணம் பூசக்கடாது.
மயிர்களை நீக்க கூடாது. (புகாரி 1814)
இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்
இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம் என்ற இடத்தில் இஹ்ராம் அணிய வேண்டும். (புகாரி 1524)
இஹ்ராம் எப்போது கட்டுவது?
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன என்றாலும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே இஹ்ராம் கட்டலாம்.
தவாப் அல் குதூம்
யலம்லம்மிலிருந்து இஹ்ராம் அணிந்து மக்காவினுள் நுழைந்து விட்டால் தவாப் செய்து விட வேண்டும். இதற்குப் பெயர் தவாப் அல் குதூம் என்று பெயர்.
தவாப் அல் குதூம் செய்யும் முறை
கஃபாவின் மூலையில் ஹஜருல் அஸ்வத் கல் பதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் செய்யும் போது ஹிஜ்ர் (வலையம்) பகுதியைச் சேர்த்து சுற்ற வேண்டும்.
மேலும் ருக்னுல் யமானியையும் முத்தமிட வேண்டும். (புகாரி 166)
நபி (ஸல்) அவர்கள், முதல் தவாஃப் செய்யும் போது மூன்று சுற்றுகளில் வேகமாக ஓடுவார்கள்; நான்கு சுற்றுகளில் நடப்பார்கள்.  மேலும் ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி வரும் போது (பத்னுல் மஸீல்) ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள். (புகாரி 1644)
தவாப் செய்யும் போது ஆண்கள் மட்டும் தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் மட்டும் திறந்திருக்கும் வகையில்  போட்டுக் கொள்ள வேண்டும். (திர்மிதி 787)
ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை அடையும் போது வாயால் அல்லது கையால் சைகை செய்தோ அதை முத்தம் இடவேண்டும். (புகாரி 1611, 1606)
தவாப் செய்யும் போது கூற வேண்டியவை
ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதன் வபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்.
இதை ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்குமிடையே சொல்ல வேண்டும். (அஹ்மத் 14851)
தவாப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்த போது தவாஃப் செய்துவிட்டு மகாமே இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (புகாரி 1600)
மகாமே இப்ராஹிமில் தொழ முடியவில்லையெனில் வேறு இடத்தில் தொழுது கொள்ளலாம்.
ஸபா, மர்வா இடையே தொங்கோட்டம் (ஸயீ) ஓடுவது
பின்பு ஸபா, மர்வா இடையே ஏழு தடவை ஓட வேண்டும். (புகாரி 1616)
இதை ஸபாவில் தொடங்கி மர்வாவில் முடிக்க வேண்டும். (முஸ்லிம் 2137)
மினாவுக்குச் செல்லுதல்
துல் ஹஜ் ஏழாம் நாள் லுஹருக்குப் பின் இமாம் குத்பா நிகழ்த்துவார். பின்பு எட்டாம் நாள் மினாவுக்குச் செல்ல வேண்டும்.
அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ர் தொழுகைகளையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். (முஸ்லிம் 2137)
அரபாவுக்குச் செல்லுதல்
மினாவில் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டு அரபாவுக்குப் புறப்பட வேண்டும். (முஸ்லிம் 2137)
மினாவிலிருந்து அரபாவிற்குச் செல்லும் வழியே தல்பியா சொல்ல வேண்டும் (புகாரி 970)
அரபாவில் கட்டாயமாகத் தங்க வேண்டும். இல்லையெனில் ஹஜ் கூடாது. (நஸயீ 2966)
அரபாவில் செய்ய வேண்டியவை
அரபாவில் லுஹரையும், அஸரையும் ஜம்வு சேர்த்து தொழ வேண்டும். இதற்குப் பிறகு நடைபெறும் குத்பாவைக் கேட்க வேண்டும். (முஸ்லிம் 2137)
முஸ்தலிபாவுக்குச் செல்வது
அரபாவில் சூரியன் மறையும் வரை தங்கி விட்டு, சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல் முஸ்தலிபாவுக்குச் செல்ல வேண்டும். அங்கு மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழ வேண்டும். இரவு தங்கி சுபுஹ் தொழ வேண்டும். (முஸ்லிம் 2137)
மீண்டும் மினாவுக்குச் செல்வது
முஸ்தலிபாவில் பஜ்ரைத் தொழுது விட்டு மஷ்அருல் ஹராம் என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் அல்லாஹ்வைப் புகழ வேண்டும். நன்கு வெளிச்சம் வந்ததும் மினாவை நோக்கிப் புறப்பட வேண்டும். (முஸ்லிம் 2137)
மினாவில் செய்ய வேண்டியவை
துல்ஹஜ் 10ல் ஜமரதுல் அகபா என்ற இடத்தில் கல்லெறிய வேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். பின்பு துஆ செய்ய வேண்டும். (புகாரி 1753)
தலை மழித்தல்
பத்தாம் நாள் குர்பானி கொடுத்து விட்டுத் தலையை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இஹ்ராமில் எது தடுக்கப்பட்டதோ அவை அனைத்தையும் செய்து கொள்ளலாம். ஆனால் இல்லற வாழ்வில் மட்டும் ஈடுபடக்கூடாது. (அபூதாவூத் 1708)
தவாப் அல் இபாழா
தலை முடியை மழித்த பின் மீண்டும் மக்காவிற்குப் புறப்பட்டுச் சென்று தவாபில் ஈடுபட வேண்டும். இதற்குப் பெயர் தவாபே இபாழா என்று சொல்லப்படும். பின்பு மினாவுக்குச் செல்ல வேண்டும். (முஸ்லிம் 2307)
தவாப் இபாழா செய்யும் முறை
இந்த தவாப் செய்யும் போது நடந்தே தவாப் செய்ய வேண்டும். (அபூதாவூத் 1710)
எந்த தவாப் செய்தாலும், உபரியாகச் செய்தாலும் ஒவ்வொரு தடவையும் இரண்டு ரக்அத் தொழ வேண்டும். (புகாரி 396)
பின்பு ஸபா, மர்வா இடையே தொங்கோட்டம் ஓட வேண்டும். இந்த தவாபை முடிக்கும் போது உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகி விடும். (புகாரி 319)
கல்லெறியும் நாட்களும் இடங்களும்
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் ஏழு கற்களை எறிய வேண்டும். இது தவிர கல்லெறிய வேண்டிய மற்ற இடங்களும் இருக்கின்றன.
துல் ஹஜ் 11, 12, 13 ஆகிய நாட்களில் கல்லெறிய வேண்டிய நாட்களாகும். ஒருவர் விரும்பினால் 11, 12 ஆகிய நாட்களில் கல்லெறிந்து விட்டுத் திரும்பி விடலாம்.
ஜமரதுல் அகபா, ஜம்ரதுல் உஸ்தா, ஜம்ரதுல் ஊலா ஆகிய இடங்களில் கல்லெறிய வேண்டும்.
தவாபுல் விதாஃ
மினாவில் கல்லெறிந்து முடித்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் முடிந்தன. ஆயினும் இறுதியாக தவாபுல் விதாஃ என்னும் தவாபைச் செய்ய வேண்டும். (முஸ்லிம் 2350)
இதுதான் ஹஜ்ஜின் சுருக்கமான சட்டங்கள்.——–தீன் டைம்ஸ்

Related Post