மு.அ.அப்துல் முஸவ்விர்
வானமே கூரையாய்.., பூமியே விரிப்பாய்!
இவரை அனுதினமும் ஆடுகின்றனர் பல்லாங்குழி
அவர்தம் நிரந்தர நிம்மதிக்கு இல்லை வழி!
நீயும் நானும் சகோதரனே என்பார் ஏட்டினிலே..!
அடைக்கலம் கேட்டு வந்தால் ஓடிஒளிவார் வீட்டினிலே..!
அகதி எனும் சொல் கொண்டு.வேற்று கிரகத்தார்போல்
அறுத்தெறிப்பார் அவர்களையே!
நாடுவிட்டு நாடு புலம்பெயர்ந்தோர் ஒருபுறம்!
சொந்த நாட்டிலேயே முகாம்களில் பலர் மறுபுறம்!!
வந்தாரை வாழ வைக்கும் வாமரமாய்,
வையகம் வார்த்தெடுக்கட்டும் அவர்களை!!
ஆதரவற்ற அனாதைகளாய்..,
உயிருடன்கூடிய பிணங்களாய்..,
தம்விதி எண்ணி தவிக்கின்றனர்,
மூச்சடைக்கப்பட்ட மூடிய அரங்கினுள்!
வாழவிடுங்களேன் இவர்களை., இவர்தம் பரப்புக்களில்..!
சிறிது நிம்மதியாக..!
நிர்க்கதியாகவேனும் சரி..,நிராயுதபாணியாகவேனும் சரி!
தத்தம் மண்ணில் இவர்களை வாழவிடுங்கள்..!