-அஹமத் யஹ்யா
கூறுவீராக: “நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்குக் கீழ்ப்படிவோரில் (முஸ்லிம்களில்) முதன்மையானவனாக உள்ளேன்.” மேலும் கூறுவீராக: “அல்லாஹ்வே அனைத்திற்கும் அதிபதியாக இருக்க, அவனை விடுத்து வேறொரு அதிபதியை நான் தேடுவேனா? மேலும், எவரெவர் எதைச் சம்பாதிக்கின்றார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும், ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்ப வேண்டியுள்ளது. அச்சமயம் நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதன் உண்மை நிலையை அவன் உங்களுக்கு வெளிப்படுத்திவிடுவான். உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கியவனும் அவனே! உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்ந்த படித்தரங்களை அவன் வழங்கியிருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக! நிச்சயமாக உம் அதிபதி தண்டனை வழங்குவதில் விரைவானவன்; மேலும் நிச்சயமாக அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங் கருணையாளனாகவும் இருக்கின்றான்.6:162 -165
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது.
இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.
நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் புதல்வரை அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் ஒரு ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பகரமாக குர்பானீ கொடுக்க செய்ததுடன், இனி மறுமை நாள் வரை வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானீ கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.
இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள்.
அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான்.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” (37:100-111)என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
அல்குர்ஆன் (37 : 100)
குர்பானியின் நோக்கம்
இந்த மாபெரும் தியாகத்திலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
குர்பானியின் நோக்கத்தைப் புரியாத பலர் புகழுக்காக இந்த வணக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். ஒரு வருடம் கொடுத்து அடுத்த வருடம் கொடுக்காவிட்டால் மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள். படைத்தவனின் திருப்தியை விட மனிதர்களின் திருப்திக்கே முன்னுரிமை தருகிறார்கள். நம்மிடம் இறைவன் எதை மிக முக்கியமாக எதிர்பார்க்கிறானோ அதில் தவறிழைத்து விடுகிறார்கள்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் (22 : 37)
(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (969)
குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால்
ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (5546)
குர்பானி கொடுக்கும் நேரம்.
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.
அறிவிவப்ப்வர் பரா (ரலி)
நுல் புகாரி
இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
குர்பானி கொடுக்கும் பிராணி .
கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்.
(அல்குர்ஆன் 22 : 28)
மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் {ஹதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.
அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (2323)
பிராணிமை அறுக்கும் முறை
குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லா{ஹ அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.
கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
நுல் முஸ்லிம் (3637)
விநியோகம் செய்தல்
குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)
பிராணிகளின் தன்மைகள்
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)
நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)
அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் பரா (ரலி)
நுல் நஸயீ (4293)
நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3637)
பிராணியின் வயது
நீங்கள் மு
ஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (3631)
குர்பானி கொடுப்பவர் தவிர்க்க வேண்டியவை.
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)
நுல் நஸயீ (4285)
பாலூட்டும் பிராணி
குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்து விட்டால் குட்டி பாசத்திற்கும் பாலிற்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும்.
(ஒரு அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ{ஹரைரா (ரலி)
முஸ்லிம் : (3799
எத்தனை பிராணிகள் கொடுக்க வேண்டும்?
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாக கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.
அறிவிப்பவர் : அதா இப்னு யஸார்
நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)
குர்பானி மாமிசத்தை உண்பது.
நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பை பருகினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (2137)
மாமிசத்தில் நமக்குத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது மதீனாவிற்கு வரும் வரை அளவில்லாமல் குர்பானிப் பிராணியின் இறைச்சியை உண்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு சவ்பானே இதன் இறைச்சியை பக்குவப்படுத்துவீராக என்று கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக்கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
அறிவிப்பவர் : சவ்பான் (ரலி)
நூல் : முஸ்லிம் (3649)
இறந்துவிட்டவர்கள் சார்பாகக் குர்பானி
ஆதமின் மகன் இறந்த உ
டன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பலன் தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ{ஹரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3084)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார்.
நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138)
அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி)
மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
நபி (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப்பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம் மகள் ஜைனப் மனைவி கதீஜா ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி (ஸல்) அவர்கள் முதலில் இவர்களுக்குக் குர்பானி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததால் இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் குர்பானி கொடுக்கக்க கூடாது.
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக!