துஆ-வின் ஒழுங்குகள்- பிரார்த்தனை 1.அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான். இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
1.அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்
1. பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.
இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!
அறிவிப்பாளர் கூறுகிறார்:
பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் ரளியல்லா அன்ஹு, நூல்: திர்மிதீ