– அபூ அப்துல்லலாஹ்
இறைநம்பிக்கையின் தாத்பர்யம்..!
ஈமானுக்கு மரியாதை
மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளித்துக்கொண்டிருக்கின்றேன்; திண்ணமாக என்னுடைய சூழ்ச்சியை யாராலும் முறியடித்துவிட முடியாது.
இந்த உலகத்தில் உள்ள மனித சமுதாயம் ஒவ்வொன்றும் ஒரு வித உணர்வுகளை மதிக்கும் வண்ணம் தங்கள் குலத்திற்கோ, கோத்திரத்திற்கோ, நாகரீகத்திற்கோ மரியாதை செலுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் எந்த விஷயத்தில் யாருக்கு ஏன் எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்பதை சிந்தித்துணர கடமைப்பட்டிருக்கிறோம்.
பக்தியே கதி என அதிலேயே முக்தி அடையச்சொல்லி இஸ்லாம் கூறவில்லை. அதே சமயம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இறை நம்பிக்கை இரண்டற கலந்து விட்டால் நம்முடைய பாவக் கொடூரங்கள், குற்றச் சிந்தனையிலிருந்து விடுபட ஏதுவாய் அமையும். நம்முடையது என்று கூறிக்கொள்ள இந்த உலகத்தில் நிரந்தரமானது நாம் இருக்கும் வரை நம் உயிர் மட்டுமே. அப்படி நம்முடனேயே நமக்கே நமக்கான உயிர் கூட அது பிரியும்போது நம்மிடம் சொல்லிப்போவதில்லை. அது நமக்கே தெரியாமல் போய்விடுகிறது. இந்த வாழ்வாதாரத்தின் ஜீவ நாடியாக கருதப்படும் உயிர்நாடியை நமக்குத்தந்த இறைவன் மீது நாம் வைத்திருக்க வேண்டிய நம்பிக்கையே ஈமான் என்பதை இறையடிமைகளாய் திகழ வேண்டிய முஸ்லிம்கள் விளங்க வேண்டும். விளங்காதவர்களுக்கு விளக்கவும் வேண்டும். இது நமது கடமையுங்கூட.
இறை நம்பிக்கை மனிதனிடத்தில் அறவே நீங்கிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஷைத்தானின் மாய வலைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம்! தாராளம்!! நம்மை அவன் வலையில் வீழ்த்த பெரும் யுக்தியெல்லாம் வகுப்பதில்லல. மாறாக ஒரு மனிதனிடம் சோம்பேறித்தனம் இருக்கிறதென்றால் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறான். அதன் மூலம் இறைவனை சிந்திப்பதற்கு அவன் அவசரம் காட்டாமல் ஆக்கி விடுகிறான். ஒருவனிடம் ஆணவம் இருக்கிறதென்றால் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி நாமெல்லாம் ஏன் தொழுதுகிட்டு என்ற நினைப்பை அவனுக்கு ஊட்டுகின்றான். அதே போல் ஒருவன் கஞ்சனாக இருக்கிறானென்றால் அவனை இறை வழியான நல்வழியில் அவனது பணம் செலவழியா வண்ணம் பார்த்துக் கொள்கிறான். ஆகவே ஷைத்தான் ஒரு நிராயுதபாணி; நம்முடைய குறைகளை நிறைகளாக்குவதில் வல்லவன்.
இன்றைய சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்னைகள் இல்லாமலில்லை. பிரச்னைகளே இல்லாவிட்டாலும் அந்த வாழ்க்கையில் திருப்பு முனைகள் ஏற்படுவது சாத்தியமில்லை. அதே போல் நம் ஒவ்வொருவருக்கும் சுகம் துக்கம் இரண்டும் உண்டு. அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். வெற்றியாயினும் தோல்வியாயினும் அது இறைவன் புறத்திலிருந்தே வந்ததாக கருத வேண்டும். வெற்றி வந்தால் அது தன்னால் வந்ததென்றும், தோல்வி வந்தால் அது இறைவனால் வந்தது என்று கருதினால் அதுதான் மமதை. இறைவனுடைய உதவியை நாட வேண்டிய நாம் அந்த உதவியை எப்படி நாட வேண்டும் என்று இறைவன் அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.
பொறுமையோடும் தொழுகையோடும் என்னிடம் உதவி தேடுங்கள் என்று. இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது பொறுமையோடும், தொழுகையோடும் தான் அவனது உதவி கிடைக்கும். அந்த தொழுகை பொறுமையுடையதாக இருக்க வேண்டும். ஓதும் திக்ருகள் பொறுமையுடையதாக இருக்க வேண்டும். ஏதோ வந்தோம் நாமும் தொழுதோம் திக்ரு துஆ ஓத அவகாசமில்லை. பரபரப்பான சூழ்நிலையில் வெளியேறினோம். இதுவல்ல உள்ளச்சம். முறையான உள்ளச்சத்தை எனக்கு தந்தருள்வாயாக என்பதை முதற்கண் பிரார்த்தனையாக நமது துஆ அமையப்பட வேண்டும். பிறகு கல்வி வீடு மனைவி மக்கள் பொருளாதாரம் என்று சகல வித பிரார்த்தனைகளையும் அடுக்கடுக்காக அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே போகலாம். இவ்வளவையும் கேட்டால் நம்மை பேராசைக்காரன் என்று இறைவன் எண்ணிக்கொள்ள மாட்டான்; மனித குணமே அப்படி நினைக்கும். இறைவனது அருள் அளவிற்கரியது. அந்த ஒப்பில்லா இறைவனின் அன்பை என்னென்பது? ஒரு தாய் தான் பெற்ற குழந்தைமீது எவ்வளவு அன்பை பொழிகிறாள். அந்த தாயன்பை வார்த்தையால் வடிக்க முடியுமா? இதைவிட இறைவனின் அன்பு அளவிட முடியாதது.
தன்னுடைய தூதர்களிடம் காட்டிய அன்பு ஒரு விதம் என்றால், மானிடர்களிடம் காட்டும அன்பு ஒருவிதம். இறைவனே இல்லை என்று சொல்லுகிறவனுக்கு கூடல்லவா அவனது அருட்கொட எல்லையில்லாமல் விரிந்துள்ளது. இறைவனே இல்லை என்பவன் மண்ணைத் தின்ற சரித்திரம் கிடையாது. மண்ணோ நெருப்போ தான் அவனைத் தின்கிறது. ஆனால் முஸ்லிம்களாய் இருந்து கொண்டு எனக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பது போலல்லவா பலரது நிலை உள்ளது. தொழுகைக்கான அழைப்பு பள்ளிவாசலில் பாங்கு ஒலிக்கிறது. வெற்றியின் பக்கம் வாருங்கள் என்றும், பஜ்ர் தொழுகையின் போது சொல்லப்படுகின்ற தூக்கத்தைவிட தொழுகையே மேலானது என்றால் யாரும் திருப்பி தொழுகையை விட தூக்கமே மேலானது என்றோ, வெற்றி தொழுகையினால் இல்லை, நாங்கள் வரமாட்டோம் என்று வாயால் பதில் சொல்வதில்லை. அதே சமயம் நமது செயலால் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். என்னே நமது ஈமான்? ஈமானுக்கு நாம் செலுத்தும் மரியாதை? சிந்திக்க வேண்டாமா?
நபி அவர்கள் தினமும் 70 முறை பாவமன்னிப்பு கேட்பவர்களாக இருந்தாந்தார்கள். இறைவன் நபி அவர்களின் முன்பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டதாக கூறிய பின்னரும் அவர்களூடைய நடைமுறையில் மாற்றமில்லை. காரணம் வினவப்பட்டபோது இறைவனுக்கு நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்ற பதில்தான் நபி அவர்களிடமிருந்து வந்தது. அவர்களுடைய உள்ளச்சம் எங்கே, நம்முடைய உள்ளச்சம் எங்கே? நான் என்ன பாவம் செய்தேன் தொழுவதற்கு? இதுவல்லவா இன்றைய முஸ்லிம்களின் சவடாலாக உள்ளது. மேலும் தொழுகிறவன் என்னத்த வாரி இறைச்சிட்டான்? என்னத்த சாதிச்சுட்டான்? என வாய் சவடால் நீள்கிறது. சிந்திக்க பல பூகம்பங்களும் சுனாமிகளும் போதவில்லையா? அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லையா? சிந்திக்க மறுக்கிறதா உள்ளம்?
நபி கற்றுக்கொடுத்த பிரார்த்தனையில் ஒன்று யா அல்லாஹ் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ எவ்வளவு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறாயோ அதுபோல் எனக்கும் என் பாவங்களுக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக. இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதில் தான் என்ன ஒரு பாங்கு, என்ன ஒரு பணிவு. நம்மிடம் பணிவு இருக்கிறதா? பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று கேட்குமளவிற்கு தான் நம்முடைய ஈமான் உள்ளது. ஆம் சில பொருட்கள் இருக்கின்றன. அரிசி, பருப்பு, உப்பு, புளி போன்றவற்றை கிலோ என்ன விலை என்று விசாரிப்போம். விறகு எடை என்ன விலை என்று விசாரிப்போம் ஆனால் தங்கம் வெள்ளி போன்ற ஆபரனங்களை கிராம் என்ன விலை என்று விசாரிப்போம். காரணம் அதை கிராம் கணக்கில்தான் வாங்கப் போகிறோம். ஆனால் நாம் தங்கம் அளவிற்கு ஈமானை மதித்தால்கூட பரவாயில்லை. ஆனால் தங்கத்திற்கு மாற்றமாக கவரிங்கை மாட்டிக்கொண்டு அலைவதுபோல் இறைவனுக்கு மாற்றாக அவனுக்கு மட்டுமே சொந்தமான வணக்க வழிபாடுகளை இறையடியார்கள் என கருதப்படும் தர்காக்களில் அடக்கப்பட்டிருக்கும் மஹான்களுக்கும் பங்கிட்டு தந்தால் அது கவரிங்கை தங்கம் என்று பொய் சொல்வது போல் தான் என்பதை சிந்திக்க வேண்டும். கவிரிங்கை அடகு கடையில் வைக்க இயலாதது போல் இணை வைத்து விட்டு ஈமானைப் பெற இயலாது என்பதையும் சிந்திக்க வேண்டும்.
ஆகவே சகோதரர்களே தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை தவறு என்று எண்ணி வருந்துவதோடு அதற்காக உளப்பூர்வமாக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடி மீண்டும் அத்தவறுகளை ஈமானிய விஷயத்திலாவது செய்யாமல் இருக்க முயற்சி செய்து பயன் பெறுவோமாக. இதோ நம் இறைவன் கூறுகிறான்,
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் – அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார். எவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 4:110,111