அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 16
– மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்
– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்
சாந்தி வழி சமர்ப்பிக்க ஸஃபா-வில் ஏறி..!
இதே காலகட்டத்தில், அல்லாஹ் தனது தூதருக்கு இவ்வாறு கட்டளையிட்டான்: எனவே, (நபியே!) உமக்குக் கட்டளையிடப்படுகின்றவற்றை வெளிப்படையாகக் கூறிவிடும்; மேலும், இணைவைப்போரைச் சிறிதும் பொருட்படுத்தாதீர்! (திருக் குர்ஆன் 15:94)
ஏகஇறைவனின் இந்த ஏவுரைக்கு
செவிசாய்க்கும் பொருட்டு, ஸஃபா குன்றின் உச்சியில் ஏறி, “ஓ, ஸஃபாவே!” என்று அழுதார்கள். காத்திருக்கும் ஆபத்து குறித்து குடிமக்களை எச்சரிக்க, இப்படி அழுவது அரபிய வழமை!
பின்னர், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், ஒவ்வொரு குடும்பத்தாரையும், குலத்தாரையும் அவர்தம் பெயர் கூறி அழைத்தார்கள்.
அவர்கள் அனைவரும் குழுமிய பின்ர், “ இந்த பள்ளத்தாக்கின் இன்னொரு புறத்திலிருந்து, குதிரைப்படையினர் உங்களைத் தாக்க வருகின்றனர் என நான் உங்களை எச்சரித்தால், நீங்கள் அதனை நம்புவீர்களா..?” என்று வினவினார்கள்.
பதிலளிக்கப்பட்டது: “ஆம்! ஏனெனில், அசத்தியத்தை உரைப்பவராக உம்மை நாங்கள் கண்டதில்லை!”
பின்னர், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், கூறினார்கள், “அவ்வாறெனில், ஒரு பெரும் பேரழிவின் வருகை குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன்!”
பின்னர், அவர்களை நோக்கி, “அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அவன் ஒருவன் மட்டுமே! முஹம்மத் (ஸல்) அவருடைய திருத் தூதர் என்று ஏற்று பிரகடனப்படுத்துங்கள்!” என்று கூறி, “இம்மை-மறுமையில் வெற்றி பெற இந்த பிரகடனம் ஒன்றே சாட்சியாக இருக்கும்!” என்று விளக்கினார்கள்!
அபூ லஹப் உடனே பதிலளித்தான்: “ஒவ்வொரு நாளும் உமக்கு அழிவு உண்டாகட்டுமாக! இதனை செவியேற்கவா எங்களை இங்கு அழைத்தீர்..?”
அப்போது, உடனடியாக இந்த வசனம் இறங்கிற்று:
அபூலஹபின் கைகள் முறிந்துவிட்டன. மேலும், அவன் நாசமாகி விட்டான். (திருக் குர்ஆன் 111:1)
பெரும்பாலான குறைஷியர், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் இத்தகைய வெளிப்படையான செயல் குறித்து வியப்படைந்தனர். அன்னாருடைய எச்சரிக்கையை உதாசீனப்படுத்தினர்.
குறைஷியரின் வளர்ந்து வரும் விரோதப் போக்கை அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் பொருட்படுத்தவில்லை.
தமது பணியில் நிலையாக இருந்ததுடன் மட்டுமல்லாது, வெளிப்படையாகவே மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுக்கத் துவங்கினார்கள்.
ஆம்! அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அழைப்புப்பணி, தன் களம் காண ஆரம்பித்து, மெதுவாக வளரச் செய்தது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் இஸ்லாத்தில் நுழைய ஆரம்பித்தனர்.
இப்போது, சிலைவணக்கத்தின் மீதிருந்து செல்வாக்கை செல்லாக்காசாக்கி, சிலைகளின் உண்மை நிலையான இயலமைத்தனத்தை தோலுரித்துக் காட்டுவதில் கவனம் செலுத்தினார் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள்..!
அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..!–16.
நன்மை புரியவோ, தீங்கிழைக்கவோ ஆற்றல் பெற்றவை அல்ல, இந்த சிலைகள் என்பதை, மக்கத்து மாந்தர்க்கு புரிய வைத்தார்.
வறட்டுக் கர்வத்தையும், வீண்பெருமையையும் விட்டொழிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார். எனவே, இஸ்லாத்துக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்கத் தலைப்பட்டனர் குறைஷியர்.
ஆபூ தாலிப் அவர்களிடம் வந்த அவர்கள், இந்த பிரச்னையில் தலையிட்டு, இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறு அவருடைய சகோதரர் மகனை அறிவுறுத்தக் கேட்டுக் கொண்டனர்.
ஆவர்களின் இந்த கோபக்கனலைத் தனது நாகரிகமான பதிலால் தணிக்க முயன்றார் அபூதாலிப்.
ஆனால், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களோ, அவர்களின் இத்தகைய அவநம்பிக்கையான மற்றும் தீமையான எண்ணத்தைப் பொருட்படுத்தாமல், அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்பும் தனது வழிமுறையிலிருந்து கிஞ்சிற்றும் பின்வாங்கவில்லை.