சர்வதேச அரபிமொழி தினம்!

சர்வதேச அரபிமொழி தினம்!

– புதுமடம் ஜாபர் அலி

வழிபாட்டு மொழி மட்டும்தானா?

சுமார் 25 நாடுகளில் ஆட்சிமொழியாக இருக்கும் அரபு மொழி, 19 கோடி மக்களின் தாய்மொழி ஆகும். 25 கோடி

சர்வதேச அரபிமொழி தினம்!

சர்வதேச அரபிமொழி தினம்!

மக்களால் பேசப்படும், எழுதப்படும் மொழி.

ஐநா சபையின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒரு மொழி. இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி.

கி.பி.650 முதல் தமிழகத்தில் கடல் வழியாகவும் துருக்கி, ஆப்கானிஸ்தான் வழியாகவும் அரேபிய வணிகர்கள் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்கள்.

முதலில் வணிகம், பின் ஆட்சி என அவர்களின் வரலாறு தொடர்ந்தது. இதனால் இந்திய மொழிகள் பலவற்றில் அரபு மொழியின் தாக்கம் அதிகமானது. தமிழில் கூட இன்று நாம் பயன்படுத்தும் நிர்வாகரீதியான சொற்களில் கணிசமாக அரபு மொழியின் தாக்கம் உண்டு.

வாரிசு, தாக்கல், வசூல், ரசீது, மராமத்து, மகஜர், மசோதா என நாம் பயன்படுத்தும் பல வார்த்தை கள் அரபு மொழி நமக்குக் கொடுத்தவைதான்.

ஆனாலும், தமிழக முஸ்லிம்கள் அரபு மொழியை வழிபாட்டு மொழியாகவே அதாவது, மார்க்க மொழியாக மட்டுமே கருதி அதைப் பள்ளிவாசலுக்குள்ளேயே சுருக்கிவிட்டார்கள்.

கி.பி.1851-க்கு முன்புவரை அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் குஜராத், டெல்லி, மக்கா, மதீனா போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

காரணம், அங்கேதான் அரபு மொழி தெரிந்தவர்கள் கற்றுக்கொடுக்கும் அளவுக்குத் தெளிவோடு இருந்தார்கள். இந்த நிலையை உடைத்து, 1851-ல் சென்னை அண்ணா சாலையில் ‘மதரஸா அஃஸம்’ எனும் அரபி பாடசாலை தொடங்கப்பட்டது. அதாவது, 175 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் அரபி மொழி போதிப்பதற்கான பாடசாலை தொடங்கப்பட்டுவிட்டது.

1869-ல் லால்பேட்டை ஜாமி ஆ மன்பா உல் அன்ஸார், வேலூர் ஜாமி ஆ பாக்கியா துல் ஸாலிஹாதில் அரபிய்யதில் என மதரஸாக்கள் தொடங்கப்பட்டன. அவைதான் இன்று பல நூற்றுக் கணக்கான மதரஸாக்களாக வளர்ந்து நிற்கின்றன. 1927-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் அரபி மொழித் துறை என்ற தனித் துறை உருவாக்கப் பட்டது.

தமிழில் குரான்

இஸ்லாமிய மதக் கோட்பாடுகள், குரான் போன்ற எல்லாமே அரபு மொழியில்தான் இருக்கின்றன. அதனால், அரபு மொழி அறிந்த மார்க்க அறிஞர்கள் மட்டுமே இதனை விளக்கிப் பொருள் கூறிவந்தனர்.

மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமதின் தந்தை ஆ.கா.அப்துல் ஹமீது 1929-ல் திருக்குரானைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது அவருக்கு இஸ்லாம் மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இஸ்லாத்தின் மார்க்க மொழியான அரபு மொழியிலேயே திருக்குரான் இருக்க வேண்டும். அதைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தால் அதன் புனிதத்தை இழந்துவிடும் என்றனர்.

இது அரபு மொழியை மார்க்க சிறைக்குள்ளும், குரானை அரபு சிறைக்குள்ளும் அடைக்கும் முயற்சி என்பது அப்போது உணரப்படவில்லை.

எனினும், அப்துல் ஹமீதின் பெருமுயற்சியால் 1943-ல் திருக்குரான் தமிழ் மொழியாக்கம் வெளியானது. இப்படியாகத் தமிழகத்தில் அரபு மொழியின் உண்மையான விஸ்வரூபம் தெரியாமல் அதை மார்க்க மொழியாக மட்டுமே சுருக்கிவைத்திருந்தார்கள். மெல்ல மெல்ல இந்த நிலையைப் பல இஸ்லாமிய தமிழறிஞர்கள் மாற்ற முயற்சித்தனர்.

இந்நிலையில்தான், 2011-ல் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நடந்த முதல் சட்டசபைக் கூட்டத்தில் திருக்குறளை அரபு மற்றும் சீன மொழி யில் மொழிபெயர்க்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்து, அதற்கான நிதியும் ஒதுக்கினார்.

இப்பணியை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு மொழித் துறை உதவிப் பேராசிரியர் ஜாஹிர் உசேன் பணியமர்த்தப்பட்டார். 2012-ல் திருக்குறளை அரபு மொழியில் மொழிபெயர்க்கும் பணி தொடங்கப்பட்டது.

1,330 குறள்களும் தமிழில் அமைந்திருக்கும் அதே வகையில், இரண்டு வரிகளில் புதுக்கவிதை வடிவத்தில் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இப்போது உலகத் தமிழராய்ச்சி மையத்தின் சார்பில் அரபு மொழியில் திருக்குறள் அழகிய பதிப்பாக வெளியிடப்பட்டு அரபி, மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கையில் தவழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழுக்கும் அரபு மொழிக்குமான உறவு இன்னும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதியார், பாரதிதாசனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், ஆத்திசூடி ஆகியவற்றையும் அரபு மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறது உலகத் தமிழாராய்ச்சி மையம். தமிழும் அரபு மொழியும் தனித்தன்மை மிக்க செம்மொழிகள்.

இவ்விரு மொழிகளும் பரஸ்பரம் ஆக்கபூர்வமான புரிந்துணர்வோடு இணைந்து செயல்படும் பட்சத்தில் இந்த இரண்டு மொழிகள் மட்டுமல்ல, இரு மொழி பேசும் மக்களும் பயனடைவார்கள்.

தமிழ், அரபு மொழிகள் இடையிலான மொழிபெயர்ப்பு, கலாச்சார விழாக்கள் ஒருங்கிணைப்புகள் மேலும் வலுப்பெற வேண்டும்!

Related Post