இறைவனின் திருப்பெயரால்…
அத்தியாயம் 1
அல்ஃபாத்திஹா
முன்னுரை
பெயர்: இந்த அத்தியாயத்தின் கருத்தைக் கவனித்து இதற்கு அல்ஃபாத்திஹா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு கருத்துரைக்கோ, நூலுக்கோ, வேறு ஏதேனும் ஒன்றுக்கோ ஆரம்பமாக அமைந்து இருப்பதற்கு ‘அல்ஃபாத்திஹா’ என்பர். வேறு வார்த்தையில் சொல்வதானால் ‘அல்ஃபாத்திஹா’ எனும் இந்தப் பெயர் முன்னுரை, முகவுரை போன்ற சொற்களின் கருத்தை ஒத்திருக்கிறது எனலாம்.
அருளப்பட்ட காலம்: முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட ஆரம்ப காலத்தில் இறக்கியருளப்பட்ட அத்தியாயம் இது!
இதுவே, முஹம்மத் (ஸல்) அவர்களின் மீது முதன்முதலில் முழுமையாக இறக்கியருளப்பட்ட அத்தியாயம் என நம்பத்தகுந்த சில அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது. இதற்கு முன் தனித்தனியாகச் சில வசனங்கள் இறங்கியிருந்தன; அவை ‘அல்அலக்’ (96), ‘அல்முஸம்மில்’ (73), ‘அல்முத்தஸ்ஸிர்’ (74) ஆகிய அத்தியாயங்களில் இடம் பெற்றுள்ளன.
கருப்பொருள்: உண்மையில் இந்த அத்தியாயம் இறைவேதத்தை ஓதத் தொடங்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் கற்றுத் தந்திருக்கும் ஒர் இறைஞ்சுதலே ஆகும். திருமறையின் ஆரம்பத்திலேயே இந்த அத்தியாயம் வைக்கப்பட்டிருப்பதன் நோக்கம், இந்த வேதத்தின் மூலம் நீங்கள் உண்மையிலேயே பயன்பெற விரும்புவீர்களாயின் முதலில் இறைவனிடம் இந்த இறைஞ்சுதலைப் புரியுங்கள் என்று அறிவுறுத்துவதாகும்.
மனிதன் இயல்பாக யாரிடம் எந்தப் பொருளை வேண்டிப் பிரார்த்திக்கின்றான்? தான் எந்தப் பொருளை விரும்பி ஆசைப்படுகின்றானோ அந்தப் பொருளுக்காகவும், ஆற்றல் மிக்க எந்த சக்தியிடம் அந்தப் பொருள் இருப்பதாக உணர்கின்றானோ அந்தச் சக்தியிடமும்தான் பிரார்த்திக்கின்றான்! குர்ஆனின் தொடக்கத்தில் இந்தப் பிரார்த்தனையைக் கற்றுக் கொடுத்திருப்பது, மனிதன் சத்தியத்தைத் தேடும் மனநிலையுடன் இந்த வேதத்தை ஓத வேண்டும் என்றும், ஞானத்தின் ஊற்றாய்த் திகழ்பவன் இறைவன் ஒருவனே; எனவே அவனிடமே நேர்வழி காட்டும்படி கோரியவண்ணம் இதனை ஓதத் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவதைப் போலுள்ளது!
இந்தக் கருத்தைப் புரிந்து கொண்ட பின்பு குர்ஆனுக்கும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்துக்கும் இடையே உள்ள உண்மையான தொடர்பு ஒரு நூலுக்கும் அதன் முன்னுரைக்கும் உள்ள தொடர்பைப் போன்றதன்று! மாறாக, வேண்டுதலுக்கும், அதற்குக் கிடைக்கும் பதிலுக்கும் இடையேயுள்ள தொடர்பு போல் இது அமைந்திருக்கிறது என்ற உண்மை தெளிவாகிறது. ‘அல்ஃபாத்திஹா’ அடியானிடமிருந்து எழுகின்ற வேண்டுதல் ஆகும். அதற்கு இறைவனிடமிருந்து அளிக்கப்படும் பதிலே திருக்குர்ஆன்!
அடியான், “என் இறைவனே! எனக்கு நேர்வழி காட்டு…!” என இறைஞ்சுகின்றான். அதற்குப் பதிலளிக்கும் வகையில், “நீ என்னிடத்தில் வேண்டிய நேர்வழி இதுதான்” என்று குர்ஆன் முழுவதையும் அவன் முன் இறைவன் வைத்து விடுகிறான்.