வசந்தத்தின் வேர் இஸ்லாம்..!-3

– வலம்புரி ஜான்

சந்தத்தின் வேர் இஸ்லாம்..!-3

(அந்த வேதத்தைப் போன்றே) இதுவும் ஒரு வேதமாகும். இதனை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம். இது அருள்வள மிக்கதாகவும், தனக்கு முன்னால் வந்த வேதத்தை மெய்ப்படுத்துவதாகவும் இருக்கின்றது. மேலும், இத்தலைநகரத்திலும் (மக்காவிலும்) அதன் சுற்றுப்புறங்களிலும் வசிப்பவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் இது அருளப்பட்டுள்ளது. மேலும், எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் நம்புவார்கள்; தமது தொழுகையிலும் பேணுதலாக இருப்பார்கள்.

வசந்தத்தின் வேர் இஸ்லாம்

வசந்தத்தின் வேர் இஸ்லாம்

அவன் இறைவன் அல்லவா? அந்த இறைவன் நாட்டுக்கொரு கதிரவனைப் படைத்தானா? நதிகள் ஏன் நாடுகளைக் கடந்து, ஊடறுத்துப் பாய்கின்றன.?

மழைத்துளிகளில் இது இந்த நாட்டைச் சார்ந்தது- அது அந்த நாட்டைச் சார்ந்தது என்று எங்காவது முத்திரை குத்தப்பட்டிருக்கிறதா? ஒருவர், சுவாசித்துவிட்ட காற்றையல்லவா நாம் சுவாசிக்கிறோம்: நமது காற்றை வேறொருவர் சுவாசிக்கிறார்.

காற்றுக்கு மொழி உண்டா?
இனம் உண்டா?
சாதி உண்டா?
நாடு உண்டா?
நேற்று, இன்று, நாளை என்கிற காலப் பிரிவினை உண்டா?

நாம் சுவாசிக்கிற காற்றில் இது இந்தியக் காற்று – இது பாகிஸ்தான் காற்று என்று எங்காவது முத்திரை குத்தப்பட்டிருக்கிறதா? பிறகு ஏன் பிரிவினைகள்? பேதங்கள்? இறைவன் ஒரே உலகத்தைத்தானே படைத்தான். இதில் ஏன் இத்தனை பிளவுகள்? மனிதனே இந்தச் செயற்கையான பிரிவினைகளுக்கெல்லாம் காரணம். இவ்வாறு பிரிவது, பிரிப்பது மனிதனின் மாற்றமுடியாத இயற்கை. அவன் தன்னைத் திருத்திக் கொள்ள இயலுமா? இயலும்: மனிதன் தனது ஆறாவது அறிவை முழுக்கப் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நாம் அனைவரும் ஒரே இறைவனின் படைப்பு(அடிமை)கள் என்பதை அவன் அறிய இயலும். அவன் படைத்த ஒரே உலகத்தைச் செயற்கைச் சுவர்களால் மனிதன் பிரித்துப் பேதப்படுத்திப் பின்னப்படுத்தலாமா?

இறைவனின் வழிகாட்டுதலைப் பற்றியே இஸ்லாம் மீண்டும் மீண்டும் பேசுகிறது. இறைவனின் வழிகாட்டுதல் எங்கே இருக்கிறது? திருகுர்ஆனில் கண்கள் படைத்தோருக்கெல்லாம் காணக்கிடக்கிறது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே – முஸ்லிம்கள் பிரகடனப்படுத்துகிறார்கள்.

நமது புகழ் மொழிகள் எந்த அளவிற்கு மனிதர்களை நோக்கி மையம் கொண்டுள்ளன? வேறு வழி இல்லாமல், உடைந்து போன நட்சத் திரங்களையும், ஊளையிடுகிற நரிகளையும் மனிதன் புகழ்ந்து பேசித் திரிகிறான்.

இந்த அற்பமான மனிதர்கள் இந்தப் புகழுக்கு எள்ளவும் உகந்தவர்கள் அல்லர் என்பதனை அவன் அறியமாட்டானா…? நாம் நம்மைச் சோதித்தாக வேண்டும். இறைவன் ஒருவனே என்று இஸ்லாம் அறிவிக்கிற போது, இறை அடிமைகளான மனித குலத்தவர் அனைவரும் ஒருவரே என்றுதானே பொருள்?

இறைவனே நமது பேரரசன்; உலகத்தில் நம்மை ஆள வந்துள்ள மற்றோர் அவனது சின்னச் சின்ன பிரதிநிதிகள்;  அதை அவர்கள் மறந்தால் வல்ல இறைவனே அவர்களுக்கு அதை நினைவு படுத்துவான்.

மதீனாவில் நபிநாதர்(ஸல்) அவர்கள் உருவாக்கிய முதல் சமுதாயத்தை உற்று நோக்குங்கள். போரிடுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்த, குழுக்களாகப் பிரிந்து கிடந்த அரேபியர்களை ஒரு குடையின் கீழ் தம் வாழ்நாளிலே அவர் கொண்டு வந்தது வரலாற்று அதிசயம் அல்லவா?  இறை அச்சத்தில் மக்களை ஒன்றி ணைத்து ஒழுக்கக் கேடுகளிலிருந்தும், தப்பறைகளிலிருந்தும், நபிநாதர்(ஸல்) அவர்களை விடுதலை செய்யவில்லையா?

அந்த மக்களை நபிநாதர்(ஸல்) ஒன்று சேர்த்தது-
மொழியை வைத்தா?
நாட்டை வைத்தா?
இனத்தை வைத்தா?
எதை வைத்து…?
இறைவனை வைத்து

அவனது திருவெளிப்பாடான திருகுர்ஆன் என்ற நெறிநூலை வைத்து.

Related Post