Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

எய்ட்ஸ் இஸ்லாமிய தீர்வு!

எய்ட்ஸ் இஸ்லாமிய தீர்வு!

எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி நோய் . அதனை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இஸ்லாம் அழகிய தீர்வை முன் வைக்கின்றது.

எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி நோய் .

Acquired Immune Deficiency Syndrome (Aids)

Acquired Immune Deficiency Syndrome (Aids) – என்பதே இதன் விரிவாக்கம். அதாவது மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை குறைத்துவிடும் வைரஸ் தாக்குதலே எய்ட்ஸ் எனப்படும்.

மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் வைரஸ் ஆன HIV + (Human Immunodeficiency Virus) மனிதனின் இரத்தத்தில் கலந்துவிடுவதனால் எய்ட்ஸ் மனிதனைத் தாக்கிவிடுகிறது.

இரத்தத்தில் கலந்த ஹெச்.ஐ.வி வைரஸின் முதல் வேலையாக மனித இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்திச் செல்களான வெள்ளை அணுக்களை அழிக்கிறது.

அச் செல்களை அழிப்பதோடல்லாமல் ஹெச்.ஐ.வி வைரஸும் பல்கிப் பெருகிக் கொண்டே செல்கிறது.

இவ்வாறாக மனித உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் (Anti Body) குறைத்து விடுவதால் பிறகு அம்மனிதனுக்குத் தாக்கும் பாக்டீரியாக்கள் மூலமாக காய்ச்சல், தலைவலி போன்ற எந்தவிதமான நோய் ஏற்பட்டாலும் அது குணமாவதற்கு நெடுங்காலம் எடுத்துக் கொள்கிறது.

பிறகு தாக்கப்படும் நோயினால் அவர் மரணத்தை அடைந்து விடுகிறார். சில சமயம் அதிக பட்சமாக 6முதல் 10வருடங்கள் கூட இந்த பாதிப்புக்கு எடுத்துக் கொள்கிறது.

எனினும் எய்ட்ஸ் பாதித்த மனிதன் மிக விரைவிலேயே அவர் தன் நோய் எதிர்ப்புச் சக்திக்கேற்ப மரணத்தைச் சந்தித்து விடுகிறான்.

எய்ட்ஸின் துவக்கம்
1983-ல் மருத்துவ வல்லுனர்களான லுக் மான்டாக்னெர் மற்றும் நேஷனல் கேன்சர் இன்ஸ்ட்டியூட்டை சேர்ந்த ராபர்ட் கேலோ குழுவும் மனிதர்களுக்குத் தாக்கும் புதுவகையான வைரஸ்ஸைக் கண்டறிந்தனர்.

அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக இந்த வைரஸ் ஆனது முறையற்ற பாலியல் தொடர்புகளின் போது உருவாகி இரத்தத்தில் கலந்து விடுவதை கண்டறிந்தனர்.

ஆரம்ப அறிகுறிகள்
ஹெச்.ஐ.வி தாக்கிய முதல் மூன்று வாரங்களிலேயே அம்மனிதனுக்கு தொடர் காய்ச்சல், தலைவலி, தோல் வியாதிகள், உடல் வேதனை போன்றவைகள் அதிகமாகிவிடுகின்றன.

இச்சமயத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் ஆனது பிளவுபட்டு பிளவுபட்டு அதிகரித்துக் கொண்டே சென்றுவிடுகிறது. இதன் காரணமாக பசியின்மை, உடல் முற்றிலும் இளைத்துவிடுதல் ஆகியவைகளுக்கு ஆளாகின்றான்.

இந்த வைரஸ் ஆனது நேரடியாக மனித இரத்தத்தில் பாய்ந்து வெள்ளை அணுக்களை அழிப்பதாலும்,

அதே சமயம் இதன் உற்பத்தியையும் பெருக்கிக் கொண்டிருப்பதாலும் இதற்கு மருந்து கண்டுபிடிப்பது மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாகவே திகழ்ந்து வருகிறது.

பரவும் முறை
மக்கள் அனைவரும் இதன் பாதிப்பை அறிந்து அச்சமுற்றே இருக்கிறார்கள். ஹெச்.ஐ.வி தாக்கிய நோயாளியை சமுதாயத்திலிருந்தே தனிமைப்படுத்தி வைத்துவிடுகிறார்கள்.

இந்நோயானது பலமுறைகளில் பரவுகிறது. எய்ட்ஸ் பாதிப்படைந்த நாயிடமிருந்து அதன் சிறு குழந்தைக்கும்,

எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் ஒட்டிய ஊசிகள், பிளேடுகள் போன்ற இரத்த சம்மந்தமான பரவல் முறைகளில் தொற்றிக் கொள்கிறது.

எய்ட்ஸ் நோயாளியை தொடுவதாலோ, அவருக்குக் கடித்த கொசு பிறருக்குக் கடிப்பதாலோ, அவர் இருமல், தும்மல் மூலமாகவோ அல்லது எந்த விதமான காற்றின் மூலமாகவோ பரவுவதில்லை.

எனவே எய்ட்ஸ் நோயாளிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்காமல் அவருடன் பழகுங்கள். எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரை சமுதாயம் ஒதுக்கித் தள்ளுவதால் அவர்கள் மனதளவில் பெரும் அவதியடைகிறார்கள்.

பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே இந்த ஆட்கொல்லி நோயிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

புள்ளி விபரங்கள்
1999 ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் எடுக்கப்பட்ட ஹெச்.ஐ.வி சோதனைகளின் புள்ளி விவரப்படி வட அமெரிக்காவில் 920,000 பேர்களும், மத்திய மற்றும்

தென் அமெரிக்காவில் 1,300,000 பேர்களும், கரீபியனில் 360,00 பேர்களும், மேற்கு ஐரோப்பாவில் 520,000 பேர்களும், தென் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 220,000 பேர்களும்,

சப்-செஹரானில் 23,300,000 பேர்களும், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 6,000,000 பேர்களும்

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் 12,000 பேர்களும் இந்தக் கொடூர வைரஸ் பாதிப்பால் எய்ட்ஸ் நோயோடு மரணத்தை எதிர்நோக்கி வாழ்ந்து வருகிறார்கள் என்ற திகிலூட்டும் உண்மை தெரியவருகிறது.

சப்-செரானில் மட்டும் 4 பேர்களுக்கு ஒருவர் என்ற நிலையில் இருக்கிறார்கள். 2000 ஆவது ஆண்டு இறுதியில் உலகம் முழுமையும் மேற்கொண்ட ஆய்வில் 31.1 மில்லியன் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்துள்ளதை கண்டறிந்தனர்.

உலகில் வாழும் அனைவருக்கும் இச் சோதனை மேற்கொண்டால் இதன் அளவு பல மடங்கு கூடும்.

2004-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உலகம் முழுவதிலும் 40 மில்லியன் மக்களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும், இது அல்லாமல் 20 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோய் தாக்கி பலியாகியுமுள்ளார்கள்.

எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாக உள்ள நாடாக உலகிலேயே இரண்டாம் இடத்தை இந்தியா வகிக்கிறது. இந்தியாவிலேயே மஹாராஷ்டிரா மாநிலத்தில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

எய்ட்ஸ் பற்றி அல்-மதீனா பத்திரிக்கையில் கடந்த 18-10-1425ஹிஜ்ரி அன்று வெளிவந்த செய்தி… 2003ம் ஆண்டு வரை உலகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 60 மில்லியன் பேர்.

அதில் 20 மில்லியன் பேர்கள் மரணித்து விட்டார்கள். 2003ம் ஆண்டு மட்டும் எய்ட்ஸ் பாதித்தவர்கள் 5 மில்லியன் பேர். அதில் மரணித்தவர்கள் 3 மில்லியன் பேர்.

இவர்களில் 48 சதவீதமானவர்கள் பெண்களே. 2003ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி 1734 பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், 6064 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் அதிகமானவர்கள் ஜித்தா, ரியாத் மற்றும் கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2003ம் ஆண்டு மட்டும் சவூதியில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி பாதிக்கப்பட்டவர்கள் 626 இதில் 388 பேர் வெளிநாட்டவர்கள். (நன்றி: அல்-மதீனா)

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் உலகம் முழுவதிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று எய்ட்ஸ் தினம் என்று அறிவித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் 2,53,000 பேர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனைதான் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் சமய சந்தர்ப்பத்தில் சபலத்தில் வீழ்ந்த மனிதன் சுலபமாக எய்ட்ஸை விலைக்கு வாங்கிக் கொள்கிறான்.

இதற்குத் தீர்வாக இஸ்லாம் கூறும் உண்மையோ அனைவரும் ஏற்கும் வண்ணமாகவே இருக்கிறது.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32)

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்.

தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் 24:30)

Related Post