ஹஜ் எப்படி?

எம். ஜே. எம். ரிஸ்வான் (மதனி).

ஹஜ் எப்படி?

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற இருக்கும் சகோதரர்களே!

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற இருக்கும் சகோதரர்களே!

மனிதர்களே! ஓர் உவமை கூறப்படுகின்றது; அதனை மிகக் கவனத்துடன் கேளுங்கள்: அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எந்தக் கடவுள்களை அழைக்கின்றீர்களோ, அக்கடவுள்கள் அனைவரும் சேர்ந்து ஓர் ஈயைப் படைக்க விரும்பினாலும் படைக்க முடியாது! ஏன் ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டு போனாலும்கூட அதனிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவர்களால் முடியாது. உதவி தேடுகின்றவர்களும் பலவீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே!

முன்னுரை:

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும் சாந்தியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிநடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாகுவதோடு, மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற இருக்கும் சகோதரர்களே!

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் விடுத்த அழைப்பிற்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து, உலகிலேயே முதல் இறை இல்லமான புனித கஃபாவிற்கு ஹஜ்ஜுக்காக செல்லும் உங்கள் ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இருக்கவும், அப்புனித இல்லத்தில் நீங்கள் எமக்காக பிரார்த்திக்கவும் முடியுமான அளவு முயற்சிகள் செய்து, அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இருந்து ஹஜ், உம்ரா, ஸியாரத் பற்றிய விளக்கக் குறிப்பேட்டை எடுத்தெழுதியுள்ளோம்.

இங்கு எந்த மத்ஹபையும் சாராது முன்வைக்கப்படும் செய்திகளால் சில வேளை அது சார்ந்தோருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் அதில் உண்மைக்குப் புறம்பானவைகளோ, அல்லது இஸ்லாத்திற்கு முரணான செய்திகளோ கிடையாது.  நமது இக்குறிப்பேட்டில் காணப்படும் செய்திகள் நாமறிந்தவரை அல்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் உடன்பட்டவையாகவே காண்கின்றோம்.

ஆகவே, இதில் உள்ளவற்றை நீங்கள் மிகக்கவனமாகவும், நிதானமாகவும் படியுங்கள், ஆதாரமற்றவை என உங்களால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்படுபவை -இன்ஷா அல்லாஹ்- திருத்திக் கொள்ளப்படும்.

ஹஜ் முகவர்கள் பலர் பிரசுரிக்கும் பெரிய நூல்களில் காணப்படும் ஆதாரமற்ற, மற்றும் மார்க்கத்திற்கு நேர்முரணான மாபெரும் தவறுகள் அல்லாஹ்வின் உதவியால் இதில் இருக்கவே முடியாது . உங்களின் ‘ஹஜ்’ அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக மாறவேண்டும் என்பதே எமது ஆழ்மனதில் வேரூன்றிய எண்ணமாகும்.

பல அறிஞர்களின் நூல்களின் துணை கொண்டே இது தொகுக்கப்பட்டுள்ளது. உங்கள் மனங்களைப் புண்படுத்தும் நோக்குடன் மத்ஹப், மௌலவி என்ற சொற்பிரயோகங்கள் ஆளப்படவில்லை.

இதைப்படித்து அமல் செய்யும் பாக்கியம் பெறும் நீங்கள் ஹஜ்ஜின் இறுதியில் இதன் நன்மைகள் பற்றி பேசுவீர்கள்.  அல்லாஹ்விடம் எமக்காக நிச்சயம் பிரார்த்தனையும் செய்வீர்கள்.  அதையே நாம் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.  அல்லாஹ் நம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக! மார்க்கத்தில் அனைவருக்கும் அல்லாஹ் விளக்கத்தை தருவானாக!

ஹஜ் பயணத்திற்கு முன் :

பணம் தூயவழியில் பெறப்பட்டதா? என பரிசோதனை செய்தல்.

தூய முறையில் பெறப்பட்ட பணத்திலே ஹஜ் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் அருட்பாக்கியம் பெற்ற மக்களைத்தவிர ஏனையோர் இந்த விஷயத்தில் தமது பொருளீட்டல் முறைபற்றி பரிசோதிக்க வேண்டியர்களே! பிற மனிதர்களிடம் சுரண்டப்பட்ட பணங்கள் மீட்டப்படல் வேண்டும்.  அநீதி இழைக்கப்பட்டோரிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இனியும் இவ்வாறான பாவங்கள் பக்கம் மீள்வதில்லை என உறுதிபூண வேண்டும்.

அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுதல்.

அல்லாஹ்வுக்காக அல்லாது பிறருக்காக செய்யப்படும் வணக்கங்களின் முதல் நிலையில் புனித ஹஜ் ஆகிவிட்டதோ என எண்ணத்தோன்றுகின்றது.  ஹாஜியார், ஹாஜி, ஹாஜிம்மா, ஹாஜியானி, அல்ஹாஜ் போன்ற நாமங்கள் சமுதாயத்தில் பவணி வருவதைப்பார்த்தால் ஹாஜிகளின் முகஸ்துதியின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளலாம்.  ஹாஜிகள் வீடுவீடாகச் சென்று மன்னிப்புக்கோரும் போதும், பள்ளிகளில் ஹஜ்ஜுக்கான முஸாபஹா செய்கின்ற போதும் தற்பெருமை அற்றவர்களாக இருப்பார்களா?

‘ஹஜ்’ மற்றும் ‘உம்ரா’ பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன், وأَتِمُّواْ الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّهِ ‘ஹஜ்ஜையும், உம்ராவையும், அல்லாஹ்வுக்காக முழுமைப்படுத்துங்கள்’ என்று குறிப்பிடுகிறது. ஒருவர் இக்கடமையினை அல்லாஹ்வுக்காகவே நிறைவு செய்ய வேண்டும் என்பதை இது உணர்த்தவில்லையா?

நபி வழிமுறை பற்றி அறிந்து செயற்படுதல்.

நபி வழிமுறை பற்றி அறிந்து செயற்படுதல்

நபி வழிமுறை பற்றி அறிந்து செயற்படுதல்

இதில்தான் ஒரு ஹாஜியின் ஹஜ்ஜின் திருப்தி தங்கியுள்ளது.  இதில் அதிகமானோர் குறைவு செய்வதையே அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொருவரும் தான் கொண்ட கொள்கை, அல்லது மத்ஹபு அடிப்படையில் மக்களை ஹஜ் செய்ய பயிற்றுவிக்கிறார்களே அன்றி மாநபியின் வழியில் பயிற்றுவிக்கப்படுவதாக அறியோம்.

நபி (ஸல்) அவர்கள் செய்தது ஒரேயொரு ஹஜ்ஜுதான்.  ஆனால் அதில் நூற்றுக்கணக்கான வழிமுறைகள் பதிவு செய்யப்படடிருப்பதை பார்க்கின்ற போது நமது ஹாஜிகளை வழி நடத்தும் முகவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ( صحيح مسلم )

இறுதி ஹஜ்ஜின் போது மக்களிடம், ‘நீங்கள் உங்கள் ஹஜ்ஜுக்கான வணக்க முறைகளை (என்னில் இருந்து) எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

நபியைப் போன்று ‘ஹஜ்’ செய்ய வேண்டியதன் அவசியத்தை நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த பின்வரும் நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.

…أَخْبِرْنِي عَنْ حَجَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بِيَدِهِ فَعَقَدَ تِسْعًا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَثَ تِسْعَ سِنِينَ لَمْ يَحُجَّ ثُمَّ أَذَّنَ فِي النَّاسِ فِي الْعَاشِرَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجٌّ فَقَدِمَ الْمَدِينَةَ بَشَرٌ كَثِيرٌ كُلُّهُمْ يَلْتَمِسُ أَنْ يَأْتَمَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَعْمَلَ مِثْلَ عَمَلِهِ (مسلم)

முஹம்மத் பின் அலி பின் ஹஸன் என்பவர் ஜாபிர் (ரழி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கேட்டார்.  அதற்கு அவர்கள், (ஹிஜ்ரத்தின் பின் நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் ஹஜ் செய்திருக்கவில்லை என்பதை உணர்த்துவதற்காக) ஒன்பது முறை தனது கையை (விரல்களை) மடக்கிக் காட்டி, ஒன்பது ஆண்டுகள் நபி (ச) அவர்கள் ‘ஹஜ்’ செய்யாது இருந்தார்கள்.  (ஹிஜ்ரி) பத்தாவது வருடம்தான் ‘ஹஜ்’ செய்யப்போவதாக மக்களுக்கு அறிவிப்பு செய்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிடவும், அவர்கள் அமல் செய்வது போன்று அமல் செய்யவும் (மதீனாவை நோக்கி) பெரும்திரளான மக்கள் வந்து சேர்ந்தனர் … (முஸ்லிம்).

எனக் குறிப்பிடும் ஜாபிர் (ரழி) அவர்களின் மேற்படி செய்தியை அவதானித்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எவ்வாறு ஹஜ் செய்தார்களோ அதே போன்று ஹஜ் செய்வதாலேயே அதன் பரிபூரண நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம். என்பதை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் விளங்கிய காரணத்தினால்தான் பெரும் திரளான மக்கள் ‘ஹஜ்’ செய்வதற்காக மதீனாவில் நபியுடன் ஒன்று சேர்ந்திருக்கின்றனர் என்பதை விளங்கலாம்.

இதை விடுத்து, ‘நமது மத்ஹபே நமக்குப் புகலிடம்’ என்ற நிலையில் ‘மத்ஹப்’ சார்ந்த மௌலவிகள் தமது ஹாஜிகளுக்கு குழப்பமான கருத்துக்களை போதிப்பதால் நபி வழிக்கு முரணான பல வழிமுறைகள் அப்புனித பூமியில் அரங்கேற்றப்படுவதை பார்க்கிறோம்.  அந்த நிலை மாறுவதற்காக ஹஜ்ஜில் நபியின் வழிமுறை பற்றியும் நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.

ஹஜ்ஜின் அவசியம்.

ஹஜ் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.  மக்காவில் இருக்கும் புனித கஃபா ஆலயத்தையும், அங்குள்ள புனித இஸ்லாமியசின்னங்களை பிரதானப்படுத்தியும் மேற்கொள்ளப்படும் இவ்வணக்கத்தை, அவ்வில்லம் சென்று நிறைவேற்ற சக்தியும், வசதியும் பெற்ற, வயது வந்த ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் அவசியம் ஒரு தடவை மிகவிரைவாக நிறைவேற்றுவது கடமையாகும்.

وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ آل عمران : 97

மனிதர்களில் அல்லாஹ்வின் (இல்லத்திற்கு சென்றுவர) வசதி பெற்றோர் அவ்வில்லத்தை ஹஜ் செய்வது அவர்கள் மீது கடமையாகும். (அத்: ஆலுஇம்ரான். வச: 97)

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ (متفق عليه)

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. (அவை) உண்மையாக வணங்கப்படுவதற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு லயாரும் இல்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும்,  தூதருமவார்கள், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகியனவாகும். (புகாரி, முஸ்லிம்).

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ الْحَجَّ فَحُجُّوا ( مسلم)

எமக்கு பிரசங்கம் நிகழ்;த்திய நபி (ஸல்) அவர்கள் ‘மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான்.  ஆகவே விரைந்து ஹஜ் செய்யுங்கள்’ என கட்டளையிட்டார்கள் என அபூ{ஹரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

மேற்படி கடமையினை ஒருவர் திடகாத்திரமாகவும்,  உடல்வலிமையோடும் இருக்கின்ற போது செய்கையில் அலாதியான திருப்தி அடைவார். காலம் தாழ்த்தி, வயதான பின்னர் செய்கின்ற போது ஏதோ கடமை முடிந்து விட்டதுதானே என பெருமூச்சு விடுவார் அவ்வளவுதான்.  அதனால் விரைந்து இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.

Related Post