-அபூ
மார்க்கத்தில் கட்டாயம் இல்லை..!
மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக! பின்னர், குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்புகின்ற மேலும், அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி, அதனால் புழுதியினைக் கிளப்பி மேலும், ஏதேனும் கூட்டத்தின் நடுவில் நுழைந்துவிடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக! உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்
இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை (freedom-of-Religion): –
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’ (அல்-குர்ஆன் 109:6)
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர். (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: ‘நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று (அவர்களிடம்) கூறுவீராக. ‘நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.’ (அல்-குர்ஆன் 22:67-69)
எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் – அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது’ என்றும் கூறுவீராக. (அல்-குர்ஆன் 42:15)
உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (அல்-குர்ஆன் 10:41)
அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்’ என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 2:139)
அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர். (அல்-குர்ஆன் 42:6)
இஸ்லாம் கூறும் மத சுதந்திரம் (freedom-of-Faith): –
(நபியே!) நீர் கூறுவீராக: ‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.’ (அல்-குர்ஆன் 10:108 )
நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் ‘நான் உங்களைக் காப்பவன் அல்ல’ (என்று நபியே! நீர் கூறும்). (அல்-குர்ஆன் 6:104)
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (அல்-குர்ஆன் 10:99)
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (அல்-குர்ஆன் 39:41)
நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக: ‘நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்.’ (அல்-குர்ஆன் 11:121)
நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக. (அல்-குர்ஆன் 73:19)
‘என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்’ என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்). ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து ‘ஸலாமுன்’ என்று கூறிவிடும். (அல்-குர்ஆன் 43:88-89)
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக. (அல்-குர்ஆன் 76:29)
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: ‘இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;’ ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் . அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (அல்-குர்ஆன் 18:29)