– நாதியா
– தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்
தூய்மையும் தொழுகையும் – 6
இதே பூமியிலிருந்துதான் நாம் உங்களைப் படைத்தோம். இதிலேயே நாம் உங்களைத் திருப்பிச் சேர்த்து விடுவோம். மேலும், இதிலிருந்தே உங்களை நாம் மறு தடவையும் வெளிக்கொணர்வோம். 20:56 நாம் ஃபிர்அவ்னுக்கு நம் சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். ஆயினும், அவன் அவற்றைப் பொய்யென்று தூற்றிக்கொண்டே இருந்தான்; ஏற்க மறுத்தான். 20:57 மேலும், கேட்டான்: “மூஸாவே! நீ உன்னுடைய சூனிய வலிமையால் எங்களுடைய நாட்டை விட்டு எங்களை வெளியேற்றவா வந்திருக்கிறாய்? 20:58 நாமும் அதே போன்ற சூனியத்தை உனக்கு எதிராகக் கொண்டு வருவோம். எப்போது எங்கே போட்டி போடலாம் என்று முடிவு செய்துகொள்! அதிலிருந்து நாங்களும் பின்வாங்க மாட்டோம். நீயும் பின் வாங்கக் கூடாது. ஒரு திறந்தவெளியில் நேரில் வா!” 20:59 அதற்கு மூஸா கூறினார்: “பண்டிகை நாளில் வைத்துக்கொள்ளலாம். மேலும் அன்று மக்கள் அனைவரும் முற்பகலில் ஒன்று சேர்க்கப்படட்டும்.” 20:60 ஃபிர்அவ்ன் திரும்பி வந்து தன்னுடைய (மந்திரச்) சூழ்ச்சிகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு (போட்டிக்கு) வந்தான். 20:61 மூஸா (உரிய நேரத்தில் எதிர்த்தரப்பினரை நோக்கி) கூறினார்: “துர்ப்பாக்கியவான்களே! அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்காதீர்கள். அவ்வாறு செய்வீர்களாயின் ஒரு கடுமையான வேதனையின் மூலம் உங்களை அவன் அழித்து நாசமாக்கிவிடுவான். பொய்யை எவர்கள் புனைந்துரைத்தார்களோ அவர்கள் நிச்சயம் தோல்வியைத்தான் அடைந்தார்கள்.” 20:62 அவர்கள் (இதனைக் கேட்டு) தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டார்கள். மேலும் இரகசிய ஆலோசனை செய்யலானார்கள். 20:63 இறுதியில், சிலர் கூறினர்: “இவர்கள் இருவரும் சூனியக்காரர்களே ஆவர். தம் சூனிய வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்றும் உங்களின் முன்மாதிரியான வாழ்க்கை முறையை ஒழித்துவிட வேண்டும் என்றும் இவர்கள் கருதுகிறார்கள். 20:64 எனவே (இன்று) உங்களின் அனைத்து சூழ்ச்சிகளையும் ஒன்றுதிரட்டி ஒருசேர (களத்திற்கு) வாருங்கள். இன்று எவருடைய கை மேலோங்குகிறதோ அவர்தான் வெற்றியடைந்தவராவார் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.)” 20:65 சூனியக்காரர்கள் கூறினர்: “மூஸாவே, நீர் எறிகின்றீரா? அல்லது நாங்கள் முதலில் எறியட்டுமா?” 20:66 (அதற்கு மூஸா கூறினார்:) “இல்லை, நீங்களே எறியுங்கள்.” உடனே அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூனிய வலிமையால் ஓடுவதுபோல் மூஸாவிற்குத் தென்படலாயின. 20:67 மூஸா தம் மனத்திற்குள் அஞ்சினார். 20:68 நாம் கூறினோம்: “அஞ்சாதீர்! நீர்தான் வெற்றியாளராவீர். 20:69 உம்முடைய கையில் உள்ளதை எறியும்! அவர்கள் உருவாக்கியவை அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் போலியாக உருவாக்கிக் கொண்டு வந்திருப்பவை சூனியக்காரர்களின் சூழ்ச்சியே ஆகும். சூனியக்காரன் ஒருபோதும் வெற்றியடைவதில்லை. அவன் எத்தனை ஆரவாரத்தோடு வந்தாலும் சரியே!” 20:70 இறுதியில் சூனியக்காரர்கள் அனைவரும் ஸஜ்தாவிற்குத் தள்ளப்பட்டார்கள். மேலும், “நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை ஏற்றுக் கொண்டோம்” என்று உரக்கக் கூறினார்கள். 20:71 அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர்தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் குரு என்பது தெரிந்துவிட்டது. இப்பொழுது நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்துவிடுவேன்; மேலும் பேரீச்ச மரத்தின் கம்பங்களில் உங்களை அறைந்து கொல்லப்போகின்றேன். அப்போது, எங்களில் யாருடைய வேதனை மிகக்கடுமையானது; நீடித்து நிற்கக்கூடியது (அதாவது, என்னால் உங்களுக்கு அதிக தண்டனை கொடுக்க முடியுமா? அல்லது மூஸாவினாலா) என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்.”20:72 அதற்கு சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரே வந்த பின்னரும் நாங்கள் (சத்தியத்தை விட) உனக்கு ஒருபோதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்துகொள். (அதிகபட்சம்) இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். 20:73 திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன்மீது நம்பிக்கை கொண்டுவிட்டோம், எங்களின் குற்றங்களையும் எந்த சூனியத்தைக் கையாளுமாறு எங்களை நீ நிர்பந்தித்தாயோ அந்த சூனியச் செயலையும் அவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக! அல்லாஹ்தான் சிறந்தவனும் நிலைத்திருப்பவனுமாவான்” 20:74 எவன் குற்றம் புரிந்தவனாய் தன் இறைவனிடம் வருவானோ அவனுக்குத் திண்ணமாக நரகம் உண்டு. அதில் அவன் வாழவும் மாட்டான். சாகவும் மாட்டான். 20:75 மேலும், எவர்கள் நம்பிக்கையாளராய் நற்செயல்கள் புரிந்த வண்ணம் அவன் திருமுன் வருகின்றார்களோ அத்தகைய அனைவருக்கும் உயர்பதவிகள் உள்ளன. 20:76 நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள். நற்கூலியாகும் இது, தூய வாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்காக!
‘எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.’ பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.’ (ஸஹீஹ் முஸ்லிம்)
உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், ‘நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!’ என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: ‘நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்’ என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!’ என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரை விட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ‘இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.’ (ஸஹீஹ் முஸ்லிம்)
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)