– E.M.அப்துர் ரஹ்மான்
وَالْعَصْرِ ﴿١﴾إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ﴿٣
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!
மனிதன் வயதையெல்லாம் அழிந்துபோகும் பொருளைத் தேடுவதிலும், தன்னை விட்டுப்பிரியும் மனைவி, மக்கள், சுற்றத்தார், சிநேகிதரோடு உல்லாசமாக இருந்து கொண்டு சந்தோச வாழ்க்கை நடத்துவதிலுமே செலவு செய்கிறான். விலை மதிக்க முடியாத ஒவ்வொரு மூச்சையும் இந்த முறையில்தான் வீணாக்குகின்றானே தவிர தான் பிறந்ததின் உண்மை நோக்கத்தைப் பற்றிக் சிறிதுகூட சிந்திப்பது கிடையாது. அவனது நோக்கம் தவறானது என்பதைக் காட்டுவதற்காகவே தான் இந்த சிறிய அத்தியாயம் இறக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அவனுடைய தவறான நோக்கமானது முடிவில் பெரும் நஸ்டத்தைத்தான் உண்டாக்கும் என இந்த சிறிய அத்தியாயத்தில் இறைவன் தெளிவுபட கூறுகிறான்.
இறக்கப்பட்ட வரலாறு
கல்தாபின் உஸைத் என்ற நபர் அபூபக்கர் ஸித்தீக் (ரலி)அவர்களின் பழைய நண்பராக இருந்தார். இஸ்லாம் தோன்றிய பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். கல்தா என்பவர் நிராகரிப்பவராகவே இருந்தார்.
ஒருநாள் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை கண்ட கல்தாபின் உஸைத் ஸித்தீக்கை நோக்கி, அபூபக்கரே! உமது அறிவின் திறமையாலும் சுறுசுறுப்பாலும் வர்த்தகத்தில் பெருத்த லாபத்தைப் பெற்று வந்தீரே! இப்பொழுது உமக்கு என்ன நேர்ந்துவிட்டது? நஷ்டத்தில் வீழ்ந்து விட்டீர்: மேலும் உமது மூதாதையரின் மார்க்கத்தையும் புறக்கணித்து விட்டீர்; லாத், உஜ்ஜா வை வணங்குவதையும் விட்டொழித்து விட்டீர். எனவே, அவற்றின் அன்பையும் இழந்து விட்டீர் எனக் கூறினார்.
கல்தாவின் கடுஞ்சொற்களைச் கேட்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் சத்தியத்தை ஏற்று நற்கிரியைகள் புரிந்து வரும் ஒருவன் எப்பொழுதும் நஷ்டத்தில் விழமாட்டான் என பதிலளித்தார்கள். இதை உறுதிப்படுத்தவே இவ்வத்தியாயத்தை அல்லாஹ் அருளினான்.
அஸ்ரு என்னும் பதத்திற்கு காலம் என்பது பொருள். இவ்விடத்தில் ஒரு மனிதன் இருக்கும் காலம் அதாவது வாழ்நாளைக் குறிக்கிறது. மனிதனுடைய வாழ்நாள் அதிலுள்ள ஒவ்வொரு மூச்சும் விலை மதிக்க முடியாதது . சென்று போன காலத்தை என்ன ஈடு கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாது.வாழ்நாள் மிக அருமையானது என்பதை காட்டவே அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்து கூறியிருக்கிறான். ஒரு மனிதன் என்ன நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றானோ அந்த நோக்கத்தை நிறைவேற்றினால் தான் ஈடேற்றம் உண்டு. அவ்வாறு இல்லாதவரை அவன் நஷ்டமடைந்தவன் தான். இந்த நஷ்டத்தை விட்டுத் தப்பவேண்டுமானால், ஈமான் (நம்பிக்கை) கொண்டு நற்கருமங்களை செய்து பிறரும் நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டவேண்டும்.
ஈமான்: அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய உண்மையான இலட்சணங்களைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் அவன் அனுப்பிய நபிமார்களைப் பற்றியும் பூரணமாக நம்பிக்கை கொள்வதே ஈமானாகும். நற்கருமங்கள்: என்ற பதம் விரிவான பொருள் தரக்கூடியது. அல்லாஹ்வை மனதால் தியானிப்பது, நாவல் துதிப்பது, சரீரத்தால் வணங்குவது, பொருளினால் அவன் கட்டளைப்படி தருமம் செய்வது, பிறருக்கு உபகாரம் செய்வது, படைப்புகளின்மீது இரக்கம் காட்டுவது பெற்றோருக்கு பணிவிடை செய்வது, நீதியும் நேர்மையும் நிலைக்க பாடுபடுவது, ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உழைப்பது ஆகிய இவையெல்லாம் நற்கருமங்களில் சேர்ந்தவையாகும்.
தான் எதை நன்மையென்றும் உண்மையென்றும் உணர்ந்திருக்கின்றானோ அதை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் போதித்து அந்த உண்மையின் பக்கம் கொண்டு வர பாடு படவேண்டும். அதற்கு எதிர்ப்பிருந்த போதிலும் பொருமையுடன் சகித்துக் கொண்டு லட்சியத்தை கைவிடாமல் அது மக்களின் மத்தியில் பரவ முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் அந்த உண்மையானது பிறருக்கு கசப்பாக தோன்றலாம். அதனால் மனம் குன்றிவிடக் கூடாது. “உண்மை கசப்பாயினும் அதைச் சொல்லிக் கொண்டே யிரு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் உள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாக்குப்படி ஒருவன் நடந்து கொண்டால் நாளடைவில் அந்தச் சத்திய கொள்கையானது மக்களின் மத்தியில் வேறூன்றித் தழைக்க ஆரம்பித்துவிடும்.
நபி (ஸல்)அவர்கள் “ஒருவன் மற்றொருவனை நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டினால் நற்கருமங்கள் செய்தவனுக்கு எவ்வளவு நற்கூலி கிடைக்கிமோ அவ்வளவு நற்கூலி தூண்டியவனுக்கும் கிடைக்கும். ஒருவனைக் மற்றொருவன் கெட்ட காரியம் செய்யும்படி தூண்டினால் கெட்ட கரியம் செய்தவனுக்கு எவ்வளவு தண்டனை உண்டோ அவ்வளவு தூண்டியவனுக்கும் உண்டு. அதில் கொஞ்சமும் குறையாது. (முஸ்லிம்)
சத்தியத்தை போதித்தல்: ஹக் என்ற பதத்திற்கு உண்மை, உரிமை என்பது பொருளாகும். இவ்விடத்தில் உண்மையான மார்க்கத்தையும் உண்மை பேசுவதையும் பிறருடைய உரிமயைப் பாதுகாப்பதையும் குறிக்கும். ஒருவருக்கொருவர் பொருமையைப் போத்தித்தல்: ஸப்ரு என்ற பதத்திற்கு பொருமை என்பது பொருள். ஒருவருக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள், பிறரால் உண்டாகும் வசைகள் துன்பங்கள் முதலியவற்றைப் பொருத்துக் கொள்வதே பொறுமையாகும். முதலில் மனிதன் தன்னைச் சீர்திருத்திக்கொண்டு மற்றவர்களைச் சீர்திருத்த முயற்சிக்க வேண்டும். ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்து பிறரையும் நன்மை செய்யும்படியும் கெட்ட காரியங்களை விட்டு விலகும்படியும் தூண்டவேண்டுமென்று இதில் கூறப்படுகிறது.