தண்ணீரிலிருந்து..!

– அபூ

ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்

ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்

தண்ணீரிலிருந்து..!

(நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா? திருக் குர்ஆன் 21:30

மேலும், அல்லாஹ் ஒவ்வோர் உயிர்பிராணியையும் ஒரேவிதமான நீரிலிருந்து படைத்தான். அவற்றில் சில தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. வேறு சில இரு கால்களால் நடந்து செல்கின்றன; இன்னும் சில நான்கு கால்களால் நடந்து திரிகின்றன. தான் நாடுகின்றவற்றை அல்லாஹ் படைக்கின்றான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான். திருக் குர்ஆன்  24:45

நம் உயிர்வாழத் தேவையான பொருட்களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

முகப் பளபளப்பு

அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம்.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.

திரும்பிய இளமை

செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.

சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

தண்ணீரின் அவசியம்

உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.

நான்கு லிட்டர் தண்ணீர்

நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,

சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post