-ரிம்ஸி
ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் வெகு தூரமான இடங்களில் இருந்தெல்லாம் நடந்தும் ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்;அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும் மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளை சில குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயர் கூறி(அறுத்தி)ட வேண்டும்; அவற்றிலிருந்து அவர்களும் உண்ண வேண்டும்; வறியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும்; பிறகு தங்களுடைய அழுக்குகளை நீக்க வேண்டும்; இன்னும் தங்களுடைய நேர்ச்சைகளை நிறைவேற்ற வேண்டும்! மேலும், தொன்மையான ஆலயத்தைச் சுற்றி வரவேண்டும்!இதுதான் (கஅபா ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கமாகும்!) மேலும், எவரேனும் அல்லாஹ்வினால் ‘புனித மானவை’ என்று நிர்ணயிக்கப்பட்டவைக்கு கண்ணியம் அளித்தால், அது அவருடைய அதிபதியிடத்தில் அவருக்கே பலனளிக்கத் தக்கதாகும். மேலும், உங்களுக்கு (கூடாதெனச்) சொல்லப்பட்டவற்றைத் தவிர, இதர கால்நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனவே, விக்கிரஹங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சுகளிலிருந்து விலகியிருங்கள்.அல்லாஹ்வுக்கு ஒருமனப்பட்ட அடிமைகளாகத் திகழுங்கள். அவனோடு எதனையும் இணை வைக்காதீர்கள்! யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி அ
வரைப் பறவைகள் இறாஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்துவிடும்; அங்கு அவர் சின்னாபின்னமாகி விடுவார்.உண்மை நிலவரம் இதுதான். (இதனைப் புரிந்து கொள்ளுங்கள்) மேலும், யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும்.(பலிப் பிராணிகளாகிய) அவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் பயன் பெற உங்களுக்கு அனுமதியுண்டு. பின்னர், அவற்றி(னைப் பலியிடுவத)ற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகிலாகும்! மேலும், ஒவ்வொரு சமூகத்தார்க்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம் அந்த(ந்தச் சமூக) மக்கள் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரி(த்து அறு)க்க வேண்டும் என்பதற்காக! (பல்வேறுபட்ட இவ்வழிமுறைகளின் நோக்கம் ஒன்றுதான்:) எனவே, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்! அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். மேலும் (நபியே!) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக!அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால், அவர்களின் இதயங்கள் நடுநடுங்கி விடுகின்றன. அவர்களுக்கு எவ்விதத் துன்பம் நேரிடினும் அதனைப் பொறுத்துக் கொள்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றார்கள். நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து செலவு செய்கின்றார்கள். 22:36 மேலும் (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களுள் ஒன்றாக நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்குப் பெரும் நன்மை இருக்கின்றது. எனவே, நிற்க வைத்து அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரியுங்கள். (குர்பானி கொடுத்த பின்) அவற்றின் விலாப்புறங்கள் பூமியில் சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து நீங்களும் புசியுங்கள்; இருப்பதைக் கொண்டு திருப்தி அடைபவர்க்கும் மற்றும் தங்களுடைய தேவையை வெளிப்படுத்துகின்றவர்களுக்கும் புசிக்கக் கொடுங்கள். இவ்வாறே இப்பிராணிகளை நாம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளோம்; நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு!அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக!எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு திண்ணமாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கின்றான். நம்பிக்கைத்துரோகம் செய்யக்கூடிய, நன்றி கொல்லக் கூடிய எவரையும் நிச்சயம் அல்லாஹ் நேசிப்பதில்லை!(22:27-38)
ஹஜ் செய்யும் முறைகள் மூன்று வகைகளாகும்
1-தமத்து
2-கிரான்
3-இஃப்ராத்
1-தமத்து: என்பது உம்ரா செய்துவிட்டு பின் துல்ஹஜ் பிறை 8 அன்று ஹஜ்ஜீக்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது
2-கிரான் : என்பது உம்ரா செய்து அந்த இஹ்ராமிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது
3-இஃப்ராத் : என்பது ஹஜ்ஜீக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவது
தல்பியா (வாசகம்) கூறும் முறை:
அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக’ .
இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).
பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.
தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்
இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)(புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.)
ஹஜ் தமத்து செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல் ஹஜ் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்
2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்
3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)
4-தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும்
5-இஹ்ராமிலிருந்து விடுபட்டு துல்ஹஜ் 8 ம் நாள் வரை காத்திருக்க வேண்டும் 8ஆம் நாள் அன்று ஹஜ்ஜீக்காக இஹ்ராம் அணியவேண்டும்.
ஹஜ் கிரான் செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று கூறி நிய்யத் செய்யவேண்டும்
2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்
3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)
4-தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்
ஹஜ் இஃப்ராத் செய்யும் முறையும் நிய்யத்தும்
1- மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்
2- மக்காவாசிகளும் (மக்காவில்) அங்கு தங்கியிருப்போரும் மீக்காத்திற்கு வரவேண்டியதில்லை தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம்
3- தவாஃபுல் குதூம் செய்யவேண்டும்
4- ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)
5- தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்;