அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 15
– மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்
– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்
அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 15
உன்னத பணி உவகையான ஆரம்பம்
அல்லாஹ்-வின் இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர், அவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகக் கொள்ளும்படி, முதலில் தனது குடும்பத்தாருக்கு அழைப்பு விடுத்தார் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள். இதன் மூலம், தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்கு பதிலளித்தார்கள். அந்தோ! அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகமோ அராஜகர்களாகவும், தமக்கிடையேயான ஒவ்வொரு பிரச்னைக்கும் வாள் மூலமே தீர்வு காணும் வன்மை கொண்டவர்களாகவும் இருந்தனர். தங்களது மூதாதையர்களின் வழிமுறையாக இருந்த காரணத்தினாலேயே, அவர்கள் உருவ வழிபாட்டில் மூழ்கியிருந்தனர். ஆதலால், அண்ணலார் முஹம்மத் (ஸல்) முதலில் தமக்கு மிக நெருக்கமானவர்களிடமிருந்து மட்டுமே, தமது பணியைத் துவக்கினார்கள்.
ஆரத் தழுவிய ஆரம்ப நம்பிக்கையாளர்கள்
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் துணைவியார், அன்னை கதீஜா (ரலி) அவர்களே முதன் முதலில், தனது கணவரின் தூதுத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்.அதன் பிறகு இந்தப் பட்டியல், அவரால் விடுதலை வழங்கப்பட்ட அடிமையான ஸைத் பின் ஹாரிஸா (ரலி), குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே அவருடன் வாழ்ந்து வந்த அலீ இப்னு அபூ தாலிப் (ரலி), அதற்கடுத்து அன்னாருடைய நெருங்கிய தோழர் அபூபக்கர் அஸ் ஸித்தீக் (ரலி) என்று தொடர்ந்தது. இவர்கள் அனைவரும், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய முதல் நாள் அழைப்பிலேயே, இஸ்லாமிய பூஞ்சோலைக்குள் அடுத்தடுத்து ஐக்கியமானவர்கள்.
இஸ்லாத்தை ஏற்ற நொடி முதலே, இஸ்லாமிய வாழ்க்கை நெறியை பின்பற்றுவதில் தன்னை மிக்க சுறுசுறுப்பும் துடிப்பும் மிக்கவராக நிரூத்துக் காட்டினார். அவர் செல்வந்தராகவும், அடக்கத்தின் திருவுருவமாகவும் திகழ்ந்தார். மென்மையான போக்கும் நேர்மையான நடத்தையும் கொண்டவர் அவர். தனது சுயமுயற்சியால், தான் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரையும் இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார். அவருடைய சுயமுயற்சி பெரும் எண்ணிக்கையிலான மக்களை இஸ்லாமிய குடையின் கீழ் கொண்டு வந்தது. உஸ்மான் பின் அஃப்வான் அல்-உமவி, அஸ்-ஜூபைர் பின்-அவ்வாம், அப்துர் ரஹ்மான் பின்-அவ்ஃப், ஸ’அத் பின் அபீவக்காஸ் மற்றும் தல்ஹா பின் ரபா ஆகியோர் அவர்களில் சிலர்! (பத்தியின் ஆரம்பத்திலிருந்து நாம் குறிப்பிட்ட) இந்த எண்மரும் அரபிய தீபகற்பம் கண்ட புதிய நம்பிக்கையின் முன்னோடிகளாகவும், முன்ணணி விடிவெள்ளிகளாகவும் இருந்தனர் என சொல்வது மிகையாகாது. ஆதன் பின்னர், (அபீசீனியரான) பிலால் பின் ரபா, அபூ உபைதா பின் அல்-ஜர்ரா அர்கம் பின் அபில்-அர்கம் மற்றும் கபாப் பின் அரத் ஆகியோர் ஆரம்பகால முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்கவர்கள்!
அதன் பின்னர், இஸ்லாமிய நெறி எனும் வசந்த தோட்டத்தில் இளைப்பாறி வெற்றி காண, மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.இதனால், இனிமேலும் அந்த சத்திய அழைப்பு இரகசியமான ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போனது.
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவியவர்களுக்கு அறிவுரைகளையும், உபதேசங்களையும் தனிமையில் வழங்கி வந்தார்கள். அப்போது வரை இஸ்லாமிய நெறி, இரகசியமாக மற்றும் தனிப்பட்ட ரீதியில் நடைபயின்று வந்ததே அதற்குக் காரணம்.
இறைவேத வெளிப்பாடு தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் அருளப்பட்ட வசனங்களும் சிறுசிறு அத்தியாயங்களும், எண்ணிவிடக்கூடிய வகையில் இரத்தினச் சுருக்கமானவையாகவும், அதேவேளை ஆணித்தரமான அழகையும் கொண்டிருந்தன. மேலும் அவற்றின் மையக்கருத்து பெரும்பாலும் ஏகத்துவம், ஆன்மத் தூய்மை, நல்லொழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகிய அம்சங்களை வலியுறுத்துவதாகவே அமைந்திருந்தன. சுவனம்-நரகம் பற்றி விஷயங்களும் அவற்றில் அடங்கியிருந்தன.
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய இயக்கப் பணியின் தலையாயக் கட்டாயக் கடமையாக இருந்தது தொழுகையே! ஜிப்ரீல் (அலை) தொழுகை முறை மற்றும் தொழுகைக்கு முன்பாக தேகசுத்தியான ஒளு செய்யும் முறை ஆகியவற்றைக் கற்றுத் தந்தார். பின்ர், காலை மாலை வேளைகளில் இரணடு ரக்அத் (தொழுகையின் அலகு) தொழுமாறு கூறினார்.
பள்ளத்தாக்குகள் மற்றும் தடங்களின் தனிமையான பகுதிகளில் இறைநம்பிக்கையாளர்கள் தொழுகை நடத்திp வந்தனர்.
சுருங்கக் கூறின், இறைத்தூதுத்துவப் பணியின் ஆரம்ப மூன்று ஆண்டுகள், இஸ்லாத்தின் தூது தனிப்பட்ட மனிதர்களை நோக்கியே இருந்ததே அன்றி, பொதுப்படையாக அல்ல..!
நெருங்கிய உறவினர்களுக்கு நேர்த்தியான அழைப்பு
“உம்முடைய மிக நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள்;!” (திருக் குர்ஆன் 26:214)
அல்லாஹ்-வின் இந்தக்கட்டளைப்படி, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தனது குடும்ப உறவினர்களான, பனீ ஹிஷாம் கோத்திரக் குழுவினருடன், பனூ அல்-முதத்தலிப் கோத்திரக் குழவினரையும் ஒன்றுகூட்டி, ஒரு சிற்றுரை நிகழ்த்தினார்கள்: “அல்லாஹ்-வின் மீது ஆiணாயக! அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை! பொதுவாக அனைவருக்காகவும் குறிப்பாக, உங்களிடையேயும் நான் அவனுடைய தூதராக அனுப்பப்பட்டுள்ளேன், என்று உறுதி கூறுகின்றேன். (தினமும்) நீங்கள் உறங்குவதைப் போன்றே, (ஒருநாள்) மரணிக்கவும் செய்வீர்கள்! நீங்கள் விழித்தெழுவது போன்றே, மீண்டும் உயிரோடு எழுப்பப்படுவீர். உங்களின் செயல்களுக்கான கணக்கை பெறுவீர். அதன் பின்னர், உங்களுக்கு நிரந்தர நரகம் அல்லது நிரந்தர தோட்டம் (சுவனம்) கிடைக்கும்.
இதனைக் கேட்டு வெகுண்டெழுந்து, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் தந்தை சகோதரனாகிய அபூ லஹப் ஆவேசத்துடன் கூறினான்: “ தடுத்து நிறுத்துங்கள், இவரை, முழு அரபிய தேசமும், இவருக்கு எதிராகக், கிளர்ந்தெழும் முன்..!
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் இன்னொரு சிறிய தந்தையான அபூ தாலிப் முன்வந்து கூறினார்: “ என் இறுதி மூச்சு உள்ளவரை அவரை நான் காப்பேன்!” பின்ர், தனது சகோதரர் மகனை நோக்கி, “உமக்குக் கட்டளையிடப்பட்டதை நீ நிறைவேற்றும் வரை உன் முயற்சியைத் தொடருவாயாக..! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை அரணாக நின்று காப்பேன்.., தனது மார்க்கத்தை விட்டு விலகிச் செல்ல, இந்த அபூ தாலிப் விரும்பாவிடினும் சரியே..!