பாதகங்களை சாதகமாக்க முடியுமா?

பாதகங்களை சாதகமாக்க முடியுமா?

கல்வி விழிப்புணர்வில் உண்டான பாதகங்களை சாதகமாக்க முடியுமா?

கல்விக்கான தேடலில்..,மாற்றத்திற்கான அடிப்படைக் காரணங்கள்.!

கல்விக்கான தேடலில்..,மாற்றத்திற்கான அடிப்படைக் காரணங்கள்.!

ஓவ்வொரு வருடமும் பெரும்பாலான ஊர்களில் கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் நம்மிடம் உண்டான இந்த விழிப்புணர்வு நமது கல்விச் சரிவை சரிகட்டும் அளவிற்கு இன்னும் வளரவில்லை என்பது தான் இன்றைய நிலை. அதற்கு என்ன தான் செய்ய முடியும்?

நமது இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் நின்று கல்வி விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கலாமா …?  என்ன…!

நம்ம தமிழக சமுதாய இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்வதா?

ம.;.ம்…ம். அது கனவிலும் நடக்காத ஒன்று…

இறைவன் நினைத்தால் தவிர சாத்தியமில்லை என்று நீங்கள் நினைப்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். இருந்தாலும், ஓவ்வொரு இஸ்லாமிய இயக்கங்களும, அமைப்புகளும், அறக்கட்டளைகளும், வெளிநாட்டு கல்வி ஆர்வலர்களும் தனித்தனி பாதைகளில் சென்றாலும், அவரவர்கள் கல்விப் பணிகளை தடுமாற்றமில்லாமல் செய்வதற்கு…

•           தங்களின் சுயவிளம்பரம் தவிர்த்து வீரியம் மிக்க கல்வி விழிப்புணர்வு செயல்பாடுகளை தொடரலாம். ஆற்றல் மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு தத்தெடுத்துக் கொள்ளலாம். ஓவ்வொரு அமைப்பும் ஊருக்கு சில மாணவர்களை முழுமையாக தத்தெடுத்துக் கொள்ளலாம். உயர்நிலை கல்வியிலிருந்து உட்சபட்ச கல்வி வரை பொருளாதாரத்திற்கு பொறுப்பேற்றுக்கொள்ளலாம்.

•           கல்வி உதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் மாணவர்களுடைய முழு படிப்பு செலவையும் ஏற்கும் பொழுது, ஒரே மாணவர் பலரிடம் கேட்கும் வாய்ப்பு குறைகிறது. தத்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை வெளியிடலாம்.  வெளியிட விரும்பாவிட்டால், கொடுக்கப்படும் உதவித் தொகை அந்தந்த கல்வி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த முயற்சி செய்யலாம்.

•           தமிழக அளவில் உள்ள பல்கலைக் கழகங்களிலும் பல்வேறு கல்லூரிகளிலும் அனுபவமிக்க பேராசிரியர்களும், ஆற்றல் மிகுந்த விஞ்ஞானிகளும் வெளி உலகத்தின் கவனத்திற்கு வராமல் அமைதியாக அதே வேளையில் சமுதாய பணி செய்ய சரியான தொடர்பு கிடைக்காமல் ஒரு பெரிய அறிவுஜீவ கூட்டங்களே மறைந்திருக்கிறது. இவர்களை ஒருங்கிணைத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாய கல்வி வளர்ச்சிக்கு எளிய வழி காணலாம்.

•           இஸ்லாமிய கல்லூரிகளின் எண்ணிக்கை பெருக வேண்டும். தங்களுடைய பொருளாதாரங்களை கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்ய முன் வர வற்புறுத்தலாம். குறைந்த பொருளாதார வசதி இருந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலர் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை உருவாக்கி கல்வி நிலையங்களை புதிதாக உருவாக்குவதற்கு உகந்த காலகட்டம் இது. ஓரளவு சேவை நோக்கோடும் அதிக அளவு வியாபார நோக்கோடும் கல்வி நிலையங்கள் தொடங்க இது உகந்த சூழல். காரணம், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்திய அளவில் பல ஆயிரக்கணக்கான புதிய உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. அதை நமது இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

•           இன்றைய சூழலில் பட்டப்படிப்பு முடித்து விட்டாலும் மாத்திரம் அரசு பதவிகளில் அமர்ந்துவிடும் வாய்ப்புகள் சிறிதளவிலும் கிடையாது. காரணம், அரசு பதவிகளுக்கு அந்தந்த துறை சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்று உயர்கல்வியில் காட்டும் ஓரளவு ஆர்வத்தை பல்வேறு துறைகள் சார்பாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதிலும் காட்ட வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் முயற்சிகளில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் போட்டி போட வேண்டும்.

•           அரசுப்பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சமுதாய ஆர்வலர்களை     ஒன்றினைப்பதன் மூலம் சமுதாயக் கல்விப்பாதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.

•           சமுதாயத்தின் மிகப்பெரும் வரப்பிரசாதம் ஜும்மாமேடைகள். இங்கு மார்க்க விசயங்களோடு கல்வி விசயங்களையும் பேச அனைத்து பள்ளிகளிலும் அனுமதித்தால் அது சமுதாய மறுமலர்சிக்கு நிச்சயம் வழிதரும்.  

இது போன்று ஒருசில முயற்சிகளில் இந்த சமுதாயம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்பொழுது தான் நிச்சயமாக இந்த விழிப்புணர்வு பலன் உள்ளதாக இருக்கும். சமீபத்தில் சினிமா கயவர்களால் சித்தரிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான துப்பாக்கி சத்தம் வெளியேறுவதற்கு முன்பாகவே அதன் தோட்டாக்கள் பிடுங்கப்பட்டது நமக்கு தெரியும். இந்த சினிமா கயவர்களின் சித்தரிப்பு நாடகங்கள் நம்முடைய சமுதாய இயக்கங்கள் ஓரளவு ஒன்று கூடியதனால் முறியடிக்கப்பட்டது.

அறிவைப் பெறுங்கள் . அது தன்னை நல்லது இது, தீயது இது எனப் பகுத்தறியச் செய்யும். மேலும் மேலுலகத்திற்கு வழிகாட்டும். காட்டில் தோழனாகவும் ஏகாந்தத்தில் சமூகமாகவும், தோழன் இல்லாத சமயத்தில் தோழனாக இருக்கும். சந்தோசமான வாழ்விற்கு வழிகாட்டும். தோழர்களின் மத்தியில் ஒரு ஆபரணமாகவும் இருக்கும். பகைவர்களிடையே ஒரு ஆயுதமாகவும் இருக்கும்.    என்ற நபிமொழியின் அடிப்படையில்…

இறைவனின் அருட்பெரும் கொடையான கல்வியை நமது சமுதாயம் பெற்று நம்மையும் நம்முடைய சமுதாயத்தையும் உலகாளச் செய்யும் தகுதியை வளர்ப்பதற்கு கல்வி எனும் இந்த ஒன்றுக்காக வேண்டியாவது நாம் ஒன்றிணைய வேண்டும் என்று ஒவ்வொருவரும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்.

முடிவாக…

உண்மையான மனநிலையில் சரியான இலக்கோடு ஆக்கப்பூர்வமான வழியில் உயர் கல்விக்கான தேடலில் தமிழக இஸ்லாமிய சமுதாயம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. தற்போது இருக்கும் கானல்நீர் போன்ற விழிப்புணர்வை முழுமையாக நம்பினால் வாழ்நாள் முழுவதும் விழித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  விடியலை நோக்கி…

இன்ஷா அல்லாஹ், எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் மிக விரைவில் வெளிச்சத்தில் வைக்க வேண்டும் . ஆமீன் … ஆமீன்..

தொடர்புடைய ஆக்கங்கள்:கல்விக்கான தேடலில்..!  கல்விக்கான தேடலில்..,மாற்றத்திற்கான அடிப்படைக் காரணங்கள்.!

 

Related Post