-அரபி மூலம்: அப்துல் மலிக் அல் காஸிம்
வெள்ளிக் கிழமை என்பது ஒரு மாபெரும் சிறப்பு நாள்..! முஸ்லிம்களின் வணக்கத்துக்குரிய நாள்..!ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
மனிதர்கள் தங்களின் திருநாட்கள் மீண்டும் மீண்டும் வருவதிலும், அதை கொண்டாடுவதிலும், அந்த நாட்களை நினைவு கூர்வதிலும் சந்தோஷமடைகின்றனர். அதே போன்று தான் இஸ்லாமிய சமூகத்துக்கு அல்லாஹ்வை வணங்கக்கூடிய திருநாளாக வெள்ளிக்கிழமைதினம் இருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை வாராந்திர திருநாளாக ஆக்கி இஸ்லாமிய சமூகத்தை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கட்டளைகளுக்கு மாற்றம் செய்ததினால் வழிதவறியவர்களாகவும் ஆக்கினான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யூதர்களுக்கு வணக்கத்துகுரிய தினமாக சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்களுக்கு வணக்கத்துக்குரிய தினமாக ஞாயிற்றுக்கிழமையையும் ஆக்கினான். நமக்கு முன் சென்ற சமுதாயமாகிய இவர்கள் வெள்ளிக்கிழமையை விட்டும் வழிதவற செய்து விட்டான். நமக்கு இத்தினத்தை தந்து நேர்வழியையும் காட்டினான். இதனால் வெள்ளிக்கிழமையை தொடர்ந்து வரக்கூடிய நாட்களாக சனி, ஞாயிற்றுக்கிழமையை ஆக்கினான். உலகத்துக்கு கடைசியாக அனுப்பப்பட்டவர்கள் நாமே! மறுமையில் படைப்பினங்களுக்கு மத்தியில் முதலில் விசாரணை செய்யப்படுபவர்களும் நாமே!’ (ஆதாரம் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகின்ற பொழுது, ‘சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்’ (ஆதாரம்: முஸ்லிம்)
புனிதம் மிக்க இந்த நாளை சிலர் தூக்கத்திலும், பிரயாணத்திலும், விளையாட்டிலும் கழிப்பதோடு பெண்கள் கடைத்தெருக்களிலும், வீடு வாசல் சுத்தம் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இந்த நாளின் மகத்துவத்தையும், சிறப்பையும் அறியாதவர்களாக கவனமின்மையாக இருக்கின்றார்கள். இவற்றை விட்டுவிட்டு இந்த நாளின் சிறப்பையும், நன்மையையும், மகத்துவத்தையும் அறிந்து இறைவனை வழிபடுவதிலும், அதிகம் திக்ர் செய்வதிலும் அதிகமதிகம் பிரார்திப்பதிலும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதிலும் ஈடுபட முயல வேண்டும்.
இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இந்த நாளில் செய்யவேண்டிய சில வழிமுறைகளை காட்டித் தந்துள்ளார்கள். ஏனைய நாட்களை விடவும் குறிப்பாக இந்த நாளில் சில வணக்க வழிபாடுகளை குறிப்பிட்டு சிறப்பித்து மகத்துவப்படுத்தியுள்ளார்கள். மார்க்க அறிஞர்கள் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையா? அல்லது அரபா உடைய நாளா? என்பதில் கூட கருத்து வேறுபாடுபட்டுள்ளார்கள்.
இமாம் இப்னு கையிம் (ரஹ்) அவர்கள் வெள்ளிக்கிழமையின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும் பொழுது, 30 க்கு மேற்பட்ட சிறப்புக்களை கூறியுள்ளார்கள்.
அவற்றில் சிலவை பின்வருமாறு:
1) மாறி மாறி வரக்கூடிய திருநாள்:
வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்நாளில் தனித்து நோன்பு நேற்பது தடுக்கப்பட்டுள்ளது, யூதர்களுக்கும், கிறிஸதவர்களுக்கும் மாற்றமாக நடப்பதற்காக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை, குறிப்பாக ஒரு அடியான் இந்த நாளில் தொழுவதிலும், பிரார்த்திப்பதிலும், இவை அல்லாத வணக்கங்களிலும் ஈடுபட்டு இறைவனை வழிப்பட வேண்டும்.
2) நன்மைகள் அதிகமாக உள்ள நாள்:
சுவர்க்கத்தில் இருக்கின்ற இறைவிசுவாசிகளை (முஃமின்களை) இத்தினத்தில் இறைவன் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: ‘அவர்கள் விரும்புவது அதில் அவர்களுக்கிருக்கிறது. மேலும் (அதைவிட) அதிகமானதும் நம்மிடம் இருக்கிறது’ அனஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் ‘ஒவ்வொரு வெள்ளியன்றும் இறைவன் அவ்ர்களை (முஃமின்களை) பார்வையிடுகின்றான்’ (ஆதாரம்: இப்னு பத்தா, அபூ நயீம்)
3) நாட்களிலே சிறந்த நாள்:
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: ‘சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்’ (ஆதாரம்: முஸ்லிம்)
4) பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:’வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது; அதில் எவரொருவர் இறைவனை தொழுது அவனிடம் பிரார்த்திக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு, அது செற்பமான நேரம் என்று தனது கையினால் சுட்டிக்காட்டினார்கள்.’ (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
5) அந்த நாளில் செய்யக்கூடிய நற்செயல்களின் சிறப்பு:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எவரொருவர் ஜந்து நற்செயல்களை அந்த நாளில் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவர்க்கவாசி என்று கருதுகின்றான். நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவில் கலந்து கொள்வது, வெள்ளியன்று நோன்பு நோற்பது, ஜும்-ஆவுக்கு செல்வது, ஒரு அடிமையை விடுதலை செய்வது போன்றனவாகும்’ (அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: இலக்கம் 1033)
இங்கு வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பது என்பது தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்கக்கூடிய ஒருவர் அந்த நாளில் நோன்பை அடைந்தால் தனியாக நோற்கலாம் என்பதனையே குறிக்கின்றது.
-அர்ஷத் ஸாலிஹ் மதனி