– அபூ ஸாலிஹா
மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருப்பார்களோ அவர்களை நாம் திண்ணமாக, சான்றோர்களுடன் சேர்த்துவிடுவோம்.
புன்னகை – சில மருத்துவ உண்மைகள்:
புன்னகையைத் தம் முகத்தில் எப்போதும் இழையோடச் செய்பவர்கள் உடல் அளவிலும் மன அளவிலும் புத்துணர்வோடு வலம் வருகிறார்கள்.
புன்னகைப்பதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்கிறது என்பதைUniversity of Maryland Medical Center in Baltimore பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. ஒரே வயதையும் உடற்கூறுகளையும் ஒத்த (சிரித்த முகமாய் பழகுவர்களும், கடுகடுத்த குணம் கொண்டவர்களுமான) இரு வகைப்பட்ட மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 40% க்கும் மேற்பட்ட புன்னகைப்பிரியர்களுக்கு இதய நோய் அண்டும் வாய்ப்பே இல்லை என்று நிரூபணமாகியுள்ளது.
இதற்கான காரணங்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும் மன அழுத்தத்தை உருவாக்கக் கூடிய endothelium எனும் உயிரணுப் படலம் பாதிப்படைவதாலேயே இதய நோய் உருவாகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். சந்தோஷமான சமயங்களிலும் இப்படிப்பட்டவர்கள் மனம் விட்டு சிரிப்பதில்லை பிறரையும் சந்தோஷப்படுத்துவதில்லை என்ற விஷயங்கள் ஆய்வில் வெளிவந்துள்ளன.
உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமை, கொழுப்புச் சத்து குறைந்த நல்ல உணவுப்பழக்கம், ஆகிய மருத்துவப் பரிந்துரைகளில் இப்போது புன்னகை முதலிடம் பெறுகிறது.
Internal Aerobics என்று மருத்துவர்கள் செல்லமாக அழைக்கும் இந்தப் புன்னகை முகத்தில் துவங்கி 400க்கும் மேற்பட்ட உடல் தசை நார்களை இயக்கி புத்துணர்வூட்டுவதால் இப்பெயர் வழங்கப்பட்டது. அத்தோடு பெயருக்கு சிரிக்கும் சிரிப்பு வெறும் 2 தசை நார்களை மட்டுமே இயக்குகிறது என்ற கொசுறுச் செய்தியையும் அறிய முடிகிறது. சிரிப்பவர்களின் உள்ளம் சும்மா இருக்கிறது என்பதை அவர்கள் கண்கள் சிரிக்காமல் வெறுமையைக் காட்டுவதைக் கண்டு உணரமுடியும் என்கின்றனர் மனவியல் நிபுணர்கள்.
இதைப் பற்றி மேலும் ஆராய்ந்தோமானால் பல அற்புதங்கள் கிடைக்கின்றன. மூளைக்கும், நோய் எதிர்ப்புச்சக்திக்கும் இடையே உள்ள உறவை ஆராயும் psycho-neuroimmunology சமீபத்தில் புகழ் பெற்ற ஒரு மருத்துவ நிபுணத்துவமாகும். உணர்வுகளுக்கும் உடலுக்கும் இடைப்பட்ட தொடர்பிலான இந்த ஆய்வில் புன்னகை என்பது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு செய்யும் சுரப்பிகளைத் தூண்டுகிறது என்பதை அறியமுடிகிறது.