உண்மையாக,அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சுவனத்திற்குப் பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள்; கொல்கின்றார்கள்; கொல்லப்படுகின்றார்கள் அவர்களுக்கு (சுவனம் கிடைக்கும் எனும் இந்த வாக்குறுதி) அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒரு திடமான வாக்குறுதியாகும். இதுவோ தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றிலும் உள்ளது. மேலும், அல்லாஹ்வைவிட தனது வாக்குறுதியை சிறப்பாக நிறைவேற்றுபவன் யார்? எனவே, நீங்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உங்களுடைய இந்த வியாபாரம் குறித்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்! இதுவே மாபெரும் வெற்றியாகும். அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் திரும்புபவர்கள். அவனுக்கு அடிபணிந்து வாழ்பவர்கள், அவன் புகழ்பாடுபவர்கள், அவனுக்காகச் சுற்றித்திரிபவர்கள், அவன் முன்னால் குனிந்தும் சிரம் பணிந்தும் வணங்குபவர்கள், நன்மை புரியுமாறு ஏவுபவர்கள், மேலும் தீமையிலிருந்து தடுப்பவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைக் காப்பவர்கள் (இத்தகைய மாண்புடைய இறை நம்பிக்கையாளர்கள் தாம் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் ஆவர்). மேலும் (நபியே!) நீர் இந்நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவிப்பீராக!