அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்…இஸ்லாம் கடமையாக்கிய
ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. இந்தச் சிறிய தொகுப்பில் ஒரு முஸ்லிம் எதற்காகத் தொழ வேண்டும், அதனால் ஏற்படும் பயன்கள் என்ன மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறுவதைப் பார்ப்போம்.
1. தொழுகையின் அவசியம்: –
மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது: –
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்
எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழ வேண்டும்:-
எல்லாத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகளையும் பேணித் தொழுது கொள்ளுங்கள். தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்தோடு நில்லுங்கள். (அல்குர்ஆன் 2 : 238)
போர்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்த வேண்டும்: –
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும். (அல்குர்ஆன் 4:102)
தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்!
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)
ஜமாத்அத்தோடு தொழவேண்டிய அவசியம்: –
நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)
அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்:-
அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது; ஆதாரம் : புகாரி