– மு.அ. அப்துல் முஸவ்விர்
இன்றைய உலகின் தேவைகள் அழகிய நடத்தைகள்..!அவை கிடைக்கும் தளமோ ஒழுக்க தளங்கள்..!!ஒழுக்கத் தளங்களில் கிடைப்பதோ மாபெரும் நன்மைகள்..!நன்மைகளின் விளைவோ பூத்துக் குலுங்கும் நற்சமூகங்கள்..!!
இன்றைய உலகின்; போக்கும் சமூகங்களின் செயற்பாடுகளும் பெரும் கவலைக்குரியதாக அமைகின்றன.தளபயன்பாட்டு வித்தியாசமின்றி அனைத்துத் தளங்களிலும் பொய் புரட்டுக்கள்,ஏமாற்றுக்கள்,துரோகங்கள்,வெட்க-மான-சூடு-சொரணையற்ற செயற்பாடுகள் பல்கிப் பெருகி வருகின்றன.
வண்டியில் இடம் பிடிக்க கைக்குட்டை போடுவதிலிருந்து ஆரம்பித்து, அடுத்து ஒருவர் லிஃப்டில் ஏறிவிடுவாரோ அதனால் நாம் செல்லும் தளத்துக்கு தாமதமாக செல்வோமோ எனும் அவசரத்தில் பிறர் அதில் நுழையும் முன்னர் அதன் பொத்தான்களை பலமுறை அழுத்துவது வரை அவசர அவசரமாக ஒவ்வொருவரும் தன் சுயநல பயன்பாட்டுக்காவே அன்றி எந்தவொரு அடியையும் எடுத்து வைக்கத் தயங்குகின்றார்களோ என்று எண்ணும் அளவுக்கு நிலைமை இருக்கின்றது.
சமூகத்தில் இந்நிலை பரவி நின்றாலும், இத்தகைய புல்லுருவித்தனங்களுக்கு மத்தியிலும், சில உண்மைநிலை உள்ளங்களும் இருக்கவே செய்கின்றன.
ஆனால், ஒழுக்கரீதியான பாதைகளில் பொதுவான சமூகதளங்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டி இருக்கின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு நண்பருடன் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அவர் சொன்ன சம்பவம், ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்னை..!
பிழைக்க வந்திருக்கும் ஒவ்வொருவரும்,குறிப்பாக குடும்பத்துடன் இருப்போரில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது வாடிக்கை.அவர்களிடம் சிறுகுழந்தை இருந்தால், அதனை பிளே ஸ்கூலில் விட்டு செல்வது அன்றாட வாடிக்கை.அவ்வாறுதான் செய்தனர், ஒரு தம்பதியினர். தம்பதியர் காலையில்; அலுவலகத்துக்கு செல்கையில்,குழந்தையை பள்ளியில் விட்டு செல்வதும்,மாலையில் வாகன ஓட்டுநர் ஒருவர் குழந்தையைத் தம்முடன் அழைத்து வருவதும் வழமையாக இருந்து வந்தது.அந்த ஓட்டுநர் அவர்களுக்கு மிகவும் தெரிந்தவர்தான்.நீண்டகால நண்பர்.
ஒரு நாள் மாலை அந்த குழந்தை வீட்டுக்கு வந்ததிலிருந்து மிகவும் அசதியாக இருந்திருக்கின்றது.வழமையான துடுக்குத்தனம் இல்லை. இது தொடரவே,உடல்நிலை சரி இல்லை என்று,அவர்கள் மருத்துவமனைக்கு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை பலாத்காரப்படுத்தப்பட்டு இருப்பதை சொல்லியிருக்கின்றார்.
பிறகுதான் தெரிந்தது அந்த ஓட்டுநர் நண்பன் மற்ற பிள்ளைகளை விட்டு விட்டு வரும் வழியில் மிருக வெறியனாக ஒரு மாலையில் மாறி,அந்த நான்கு வயது இளம் பிஞ்சை, பஞ்சாய் பிய்த்திருக்கின்றான்.
பாருங்கள்!அறிந்தவர்களே இந்நிலையில் இருந்தால், மற்ற அறியாத மூன்றாம் நபர்கள் பற்றி என்ன சொல்ல…..?
நாம் சம்பாதிப்பது பிள்ளைகளுக்காகத்தான் என்பதை அறிவோம்.ஆனால், யாருக்காக சம்பாதிக்கின்றோமோ,அந்த சம்பாத்திய காலத்துக்காக, அவர்களின் மீது கொள்ள வேண்டிய அதீத கவன்த்தைக் குறித்து பாராமுகமாக இருப்பின் என்ன பயன்..? எனவே, தீனார்களின் மயக்கம் எம்மை பல இயலாத வழிமுறைகளுக்கு இட்டுச் செல்வதைக் குறித்து பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும்.எவ்வளவுதான் நெருங்கியவர்கள் என்றாலும், மீச்சிறு வயது முதலே அந்நியர்களுடனான பழக்கம் குறித்து தமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.தமது நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்களைக் கொணர்ந்து நற்சேவைகள் ஆற்றும் அமைப்புக்களும் இது குறித்து தனியாக பெற்றோர்-குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கை உபாயங்களை அறிவுறுத்தும் வகுப்புக்கள் நடத்த வேண்டும்.
ஒழுக்கரீதியான எண்ணங்களை சரிப்படுத்தும் வகையில் வாழ்வியல் நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும். அவை இஸ்லாமிய அறிவுரைகளில்,சட்டங்களில் மட்டுமே கிடைக்கும் என்பது ஐயத்துக்கிடமின்றிய வாதம் என்பதால், இஸ்லாமிய பூங்காவில் எம்மையும், எம் மழலைகளையும், வார்த்துக் கொள்வோம்.சமூகமும் அதில் வார்த்தெடுக்கப்பட முயல்வோம்.அதற்கு இறையருள் என்றும் துணை நிற்கட்டும்..!