தியாகம் கற்பிக்கும் திருநாள்..!
தியாகம் கற்பிக்கும் திருநாள்..!

ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது.
அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. இவ்வாறு அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக! (நபியே!) நற்பணி புரிவோருக்கு நற்செய்தி சொல்வீராக!
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
“எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.
அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!” என்று கூறினார்.
அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில் படக் கிடத்திய போது,
இப்றாஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்திவிட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.
நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும்.
இவருக்குப் பகரமாக, மகத்தான ஒரு பலிப் பிராணியை ஆக்கினோம்.
பின்வருவோரில் அவர் மீது (புகழை) விட்டு வைத்தோம்”. (37:101-108)
குர்பானியின் நோக்கம் இறையச்சம் என்பதைத்தவிர வேறில்லை என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள்; தெளிவு படுத்துகின்றன.
“குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது”. (22:37)

அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியமைக்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக!
உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதன் அவசியத்தை மற்றுமொரு திருமறை வசனம் எடுத்துக் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்களைக் குர்பானி கொடுக்குமாறும் கட்டளையிடுகிறது.
“உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுப்பீராக” (108:02)
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு அடிபணிந்து தமது வாழ்வில் குர்பானி எனும் அமலை நிறைவேற்றி யுள்ளார்கள்.
“நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கறுப்புக் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளைத் தன் கரத்தால் அறுத்துப் பலியிட்டார்கள்”.
(அனஸ்(ரலி) – புகாரி, முஸ்லிம்)
இந்த வகையில் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரும் இக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.