– இப்னு ஹத்தாது
– தொகுப்பு:அப்துல் முஸவ்விர்
நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில், அவ்வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டி, அறிவுரை கூறப்படும்போது அவர்கள் ஸஜ்தாவில் விழுந்து விடுகின்றார்கள். மேலும், இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றார்கள். மேலும், அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். மேலும், அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளைவிட்டும் உயர்ந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்! மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து செலவும் செய்கின்றார்கள். அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள். நம்பிக்கையாளராய் இருப்பவர் பாவம் செய்தவர் போல ஆகிவிடுவாரா? இவ்விருவரும் சமமாக முடியாது! எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு சுவனபதிகளில் தங்குமிடங்கள் உள்ளன; அவர்களை உபசரிப்பதற்கு! அவர்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குப் பகரமாக! மேலும், எவர்கள் பாவத்தைச் செய்கின்றார்களோ, அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்பும்போதெல்லாம் அதிலேயே தள்ளப்படுவார்கள்.
மேலும், அவர்களிடம் கூறப்படும்:
“சுவையுங்கள், எந்த நரக வேதனையைப் பொய்யென்று கூறிக்கொண்டிருந்தீர்களோ அதே நரக வேதனையை!” மேலும், அந்தப் பெரும் வேதனை வருமுன் இவர்களுக்கு இவ்வுலகில் (ஏதேனும் ஒரு சிறு) வேதனையை சுவைக்கக் கொடுப்போம்; இவர்கள் (தங்களது எதிர்ப்புப் போக்கைவிட்டு) விலகி விடக்கூடும் என்பதற்காக!மேலும், தன்னுடைய இறைவனின் வசனங்கள் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்ட பிறகும் அதனைப் புறக்கணித்துவிட்டவனை விடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? இத்தகைய குற்றவாளிகளை நாம் பழிவாங்கியே தீருவோம்! இதற்கு முன்பு நாம் மூஸாவுக்கு வேதம் வழங்கியிருந்தோம். ஆகையால், அதுபோன்ற வேதத்தை நீர் பெறுவதில் எவ்வித சந்தேகமும் உமக்கு வர வேண்டாம். அவ்வேதத்தை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஆக்கினோம். மேலும், அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, நம் வசனங்கள் மீது உறுதிப்பாடும் கொண்டிருந்தபோது அவர்களிலிருந்து தலைவர்களை நாம் தோற்றுவித்தோம். அவர்களோ நம் கட்டளையைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.32:25 (இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்) தமக்கிடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த விஷயங்களில் திண்ணமாக உம் இறைவனே மறுமைநாளில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்ற எத்தனையோ பல சமூகங்களை நாம் அழித்துவிட்டிருக்கின்றோம் (எனும் வரலாற்று நிகழ்ச்சியில்) இவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் கிடைக்கவில்லையா, என்ன? அவர்கள் வசித்த அதே இடங்களில் இன்று இவர்கள் நடந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்!
திண்ணமாக, இவற்றில் பெரும் சான்றுகள் உள்ளன.
என்ன, இவர்கள் செவியுறுவதில்லையா? மேலும், இவர்கள் (இக்காட்சியை ஒருபோதும்) பார்க்கவில்லையா, என்ன? வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாக நாம் நீரை ஒலித்தோடச் செய்கின்றோம். அதே பூமியிலிருந்து பயிர்களை முளைக்கச் செய்கின்றோம். அதிலிருந்து இவர்களுடைய கால்நடைகளுக்கும் தீனி கிடைக்கின்றது; இவர்களும் உண்ணுகின்றார்கள்! இவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லையா, என்ன? மேலும், இந்த மக்கள் கேட்கின்றனர்: “இந்தத் தீர்ப்பு எப்போது ஏற்படும்? நீங்கள் உண்மை கூறுபவர்களாயிருந்தால்!” இவர்களிடம் நீர் கூறும்: “தீர்ப்பு நாளன்று நம்பிக்கை கொள்வது, நிராகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது. மேலும், அவர்களுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்கப்படாது!” எனவே, இவர்கள் போக்கிலேயே இவர்களை விட்டுவிடும்; மேலும், எதிர்பார்த்திரும்; இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும்! (32:15-30)
—–
ருகூவும் ஸுஜூதும் தொழுகை முறை
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திருகுர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து ஸுராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது. இதை உபாதா பின் ஸாமித்(ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரி (ர.அ.) : 756)
அபூ{ஹரைரா(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை என்றும் கூறினார்கள்.
அந்த மனிதர் முன்பு தொழுதது போலவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்! என்று கேட்டார்.
நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதான மாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்காருவீராக! இவ்வாறே உமது எல்லாத் தொழுகைகளிலும் செய்து வருவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி (ர.அ.): 757,793)
அபூகதாதா(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரகாஅத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரகாஅத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கும் ஓதுவார்கள். இரண்டாவது ரகாஅத்தை விட முதல் ரகாஅத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும் ஸுபுஹிலும் செய்வார்கள். (புகாரி (ர.அ.) : 776)
அபூ{ஹரைரா(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும்போது ஸமிஅல்லா{ஹலி மன்ஹமிதா என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா லகல் ஹம்து மற்றோர் அறிவிப்பில் வலகல் ஹம்து என்பார்கள். பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தா செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரகாஅத்துகளிலும் செய்வார்கள். இரண்டாம் ரகாஅத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறுவார்கள். (புகாரி (ர.அ.) : 789)