– மு
.அ.அப்துல் முஸவ்விர்
(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தை நோக்குவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதோ நீர் எந்தக் கிப்லாவை விரும்புகின்றீரோ அதன் பக்கமே நாம் உம்மைத் திருப்பிவிடுகின்றோம். மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா ஆலயம்) பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இனி நீங்கள் எங்கிருப்பினும் (தொழுகைக்காக) அதன் பக்கமாகவே உங்கள் முகங்களைத் திருப்புவீர்களாக! வேதம் அருளப்பட்டவர்கள் (கிப்லா மாற்றம் பற்றிய) இக்கட்டளை உண்மையானதுதான்; தம் இறைவனிடமிருந்து வந்ததுதான் என்பதைத் திண்ணமாக அறிவார்கள். ஆனால், (இவ்வாறு உண்மையை அறிந்திருந்தும்) இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை! வேதம் அருளப்பட்டவர்களிடம் நீர் எந்த ஒரு சான்றினைக் கொண்டு வந்தாலும் உமது கிப்லாவை அவர்கள் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. மேலும் (தமக்கிடையேயும்) அவர்களில் சிலர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுவோராய் இல்லை. எனவே, உமக்கு மெய்யறிவு வந்த பின்னர் அவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின், திண்ணமாக நீர் அக்கிரமக்காரர்களுள் ஒருவரா(ய்க் கருதப்படு)வீர். எவர்களுக்கு நாம் வேதம் அருளியிருக்கின்றோமோ அவர்கள், தங்களுடைய மைந்தர்களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் (கிப்லாவாக்கப்பட்ட) இந்த இடத்தையும் நன்கு அறிவார்கள். எனினும் அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள். (உறுதியாக) இது உம் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமா(ன கட்டளையா)கும். எனவே, (இது பற்றி) ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்!
302– நபி (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் கஃபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது நீர் வானத்தை நோக்கி உமது முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம் (2:144) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான். உடனே கஃபாவை முன்னோக்கி தொழலானார்கள். (யஹுதிகளிலுள்ள சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பி விட்டது எது? என்று கேட்கின்றனர். (நபியே!) நீர் கூறும்: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான் என்று (2:142) இந்த வசனம் இறங்கியதும் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தனர். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன்: அவர்கள் கஃபாவை முன்னோக்கித் தொழுதார்கள் என்று நான் சாட்சி சொல்கிறேன், என்று கூறினார். உடனே தொழுதுக் கொண்டிருந்தவர்கள் கஃபாவை முன்னோக்கித் திரும்பினார்கள்.
303– நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி ‘பதினாறு’ அல்லது ‘பதினேழு’ மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.
304– கூபா பள்ளிவாசலில் மக்கள் ஸுபுஹ் தொழுது கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, சென்ற இரவில் கஃபாவை முன்னோக்கித் தொழுமாறு நபி (ஸல்) அவர்களுக்கு இறை வசனம் அருளப்பட்டது, என்று கூறினார். (பைத்துல் முகத்தஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கித் தொழுதுக் கொண்டிருந்த அவர்கள் அப்படியே கஃபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.