– நூருத்தீன்
கப்பாப் பின் அல்-அரத் (ரலி)-1
மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா? நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம்.
உமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள் கீழுள்ள இருக்கையிலும் அமர்ந்திருப்பது போன்ற செட்டப்பெல்லாம் இல்லாமல் அனைவரும் சமமாய் அமர்ந்து உரையாடும் ஏற்றத்தாழ்வற்ற மக்கள் அவர்கள். அப்பொழுது அங்கு வந்தார் கப்பாப்.
உற்சாகமாக வரவேற்று அவரைத் தன்னுடன் நெருக்கமாக அமரச் செய்த உமர், “உங்களைத் தவிர பிலாலுக்கு மட்டுந்தான் இத்தகைய கூடுதல் நெருக்கமான சிறப்புண்டு” என்று தனது அன்பைச் சொன்னார். அதற்குக் காரணம் இருந்தது.
உமர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது ஒரு சுவையான வரலாறு. அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கப்பாப். உமர் தோற்றம், கம்பீரம், நேர்மை, என அனைத்திலும் அலாதியானவர், வேகமானவர். முஹம்மத் (ஸல்) அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தால் பலப்பல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்த மக்காவில் ஒரு கட்டத்தில் உமர் மிகுந்த காட்டமாகி விட்டார். “இந்த முஹம்மதைக் கொன்று விட்டுத்தான் மறுவேலை” என்று வாளை உருவிக் கொண்டு மக்கா வீதியில் கிளம்பிவிட, யதேச்சையாய் அவ்வழியே வந்த நுஐம் (نعيم) எனும் இளைஞர் விசாரித்தார். உமரின் நோக்கம் கண்டு அவருக்கு உள்ளுக்குள் கிலி கிளம்பியது. அவரும் அச்சமயத்தில் ரகசியமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தவர். உமர் கோபத்துடன் வருவதை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் சொல்லி எச்சரிக்க அவகாசம் தேவை. சமயோசிதமாய் ஒரு காரியம் செய்தார் நுஐம் ரலியல்லாஹு அன்ஹு.
”முஹம்மதைக் கொல்வது இருக்கட்டும். முதலில் நீர் உமது வீட்டைப் பாரும்”. உமரின் சகோதரி ஃபாத்திமாவும், அவர் கணவரும் ரகசியமாய் இஸ்லாத்தை ஏற்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அது உமருக்குத் தெரியாது. நுஐமின் தந்திரம் உடனே பலித்தது. உமரின் கோபம் சட்டெனத் திசை மாற, தன் சகோதரியின் வீட்டிற்கு அதே கோபத்துடன் விரைந்தார்.
உமரின் சகோதரி ஃபாத்திமாவும் அவர் கணவர் ஸயீத் இப்னு ஸைதும் (سعيد بن زيد) வீட்டினுள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவர் கப்பாப் இப்னு அரத். கப்பாப் கூர்மதியாளர். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அதனை ஓதிப் பழகிய கெட்டிக்காரர். அதில் அவரது ஞானம் எந்தளவு என்றால் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கப்பாபை குர்ஆன் சம்பந்தமாய்க் கலந்து ஆலோசிக்குமளவு ஞானம்.
உமர் ஆவசேமாய் வருவதைக் கண்ட கப்பாப் இப்னு அரத் ஓடி ஒளிந்துக் கொண்டார். உமரின் அத்துணை மூர்க்கமும் ஸயீத் மேல் இறங்கியது.
உமரின் தங்கை ஃபாத்திமாவைத் மணம் புரிவதற்கு முன்னரே ஸயீதும் உமரும் உறவினர்கள். உமரின் தகப்பனார் கத்தாப் இப்னு நுஃபைலும் ஸயீதின் பாட்டனார் அம்ரிப்னு நுஃபைலும், சகோதரர்கள். ஸயீதின் தகப்பனார் ஸைது இப்னு அம்ரு, மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்னமேயே ஹனீஃபாகத் திகழ்ந்தவர். சிலைகளை வணங்காதவர்கள் “ஹுனஃபா”வினர் என்று தம்மைக் கூறிக் கொள்வர். ஸயீதின் தகப்பனார் ஸைது, இப்ராஹீம் (அலை) அவர்களின் தூய ஏகத்துவக் கொள்கையை ஏற்று அனைத்து இணை வைத்தலை விட்டும் விலகியிருந்தவர். “சிலையெல்லாம் வணங்க முடியாது” என்று அவர் கூறி வந்ததால் அவரை மக்கத்துக் குரைஷிகள் துன்புறுத்தியபோது தன் பெரியப்பா மகனென்றும் பாராமல் ஸைதைத் துன்புறுத்துவதில் பங்கெடுத்துக் கொண்டு, குரைஷிகளின் குலப் பெருமையை நிலைநாட்டிய முக்கியப் புள்ளி உமர்.
இப்பொழுது அவரின் மகன் ஸயீத் – அதுவும் தன் சகோதரியின் கணவர், “சிலை வேண்டாம்; படையல் வேண்டாம்” என்பதோடு நில்லாமல், அந்த முஹம்மதைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தன் சகோதரியையும் வழிகெடுக்கிறார் என்றால்? பொறுக்கவியலாத ஆத்திரம். முரட்டுத்தனமாய் அடிக்க ஆரம்பித்து விட்டார். இடையில் புகுந்த ஃபாத்திமாவிற்கும் பலமான அடிவிழ இரத்தம் பீறிட ஆரம்பித்தது. இரத்த சகோதரியின் இரத்தம் பார்த்ததும்தான் உமரின் ஆத்திரம் நிதானத்திற்கு வந்தது. ஆயாசமும் கழிவிரக்கமும் ஏற்பட்டன.
நிதானப்பட்ட உமர், “என்ன அது நீங்கள் ஓதிக் கொண்டிருப்பது?” எனக் கேட்க, அவரைக் கை-கால் கழுவி வரச் செய்து குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்த சுவடிகளைக் காண்பித்தார்கள். அது அத்தியாயம் தாஹா. புத்தியிலும் பலம் மிக்கவரான உமருக்கு அதற்கு மேல் எதுவும் தேவைப்படவில்லை. ஒருவரிப் பேச்சு, “என்னை முஹம்மதிடம் அழைத்துச் செல்லுங்கள்”.
அது கேட்டதும்தான் வெளியே வந்தார் கப்பாப். “உமர்! முஹம்மதின் (ஸல்) துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாக நான் நம்புகிறேன். நேற்றுத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள் ‘யா அல்லாஹ்! அபுல் ஹகம் அம்ர் இப்னு ஹிஷாம் அல்லது உமர் இப்னு அல் கத்தாப், இந்த இருவரில் யாரை நீ அதிகம் நேசிக்கிறாயோ அவர்களைக் கொண்டு இஸ்லாத்தை வலுப்படுத்து’ என்று. அதை நான் என் காதால் கேட்டேன்”.
“இப்போது எங்கே நான் அவர்களைக் காணலாம்?”
தொடரும் இறைநாடின்..!