-இஸ்லாமிய தஅவா
ஒளு: சட்டங்கள்-ஒழுங்குகள் – 1
இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும். (5:6)
யார் இவ்வாறு (நபியவர்கள் செய்தது போல்) ஒளு செய்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் ஒளு செய்வதின் சிறப்புகள்
ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் ஒளு செய்து தனது முகத்தை கழுவினால் அவர் கண்ணினால் செய்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியாகும் முதல் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தனது இரு கைகளையும் கழுவினால் இரு கைகளினால் செய்த பாவங்கள் கைகளிலிருந்து வெளியாகும் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தன்னுடைய இரு கால்களையும் கழுவினால் இரு கால்களினால் செய்த பாவங்கள் தண்ணீரோடு அல்லது கடைசித்துளியோடு மன்னிக்கப்பட்டு தூய்மையான மனிதராகி விடுகின்றார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.முஸ்லிம்
யார் நல்ல முறையில் ஒளு செய்கின்றாரோ அவருடைய நகத்துக்குக்கீழிலிருந்து கூட அவருடைய உடம்பால் செய்த பாவங்கள் வெளியாகிவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.முஸ்லிம்
ஒளு செய்ததின் காரணமாக என் உம்மத்தினர் நாளை மறுமையில் முகம்,கால் வெண்மை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதைக்கேட்ட ) அபூஹுரைரா(ரலி)அவர்கள் உங்களில் எவருக்கு முக வெண்மையை நீளமாக்கிக்கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும் என்பதாக கூறினார்கள். புகாரி , முஸ்லிம்