– இப்னு ஹத்தாது
– தொகுப்பு:அப்துல் முஸவ்விர்
இவர்களிடம் நீர் கூறும்: “தீர்ப்பு நாளன்று நம்பிக்கை கொள்வது, நிராகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது. மேலும், அவர்களுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்கப்படாது!” எனவே, இவர்கள் போக்கிலேயே இவர்களை விட்டுவிடும்; மேலும், எதிர்பார்த்திரும்; இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும்!
ஸைத் இப்னு வஹ்பு கூறியதாவது :
ருகூவையும் ஸுஜூதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை {ஹதைஃபா(ரழி) கண்டனர். அப்போது அவர்கள் நீர் தொழவே இல்லை. இந்த நிலையிலேயே நீர் மரணித்து விட்டால் முஹம்மது(ஸல்) அவர்களின் மார்க்கத்தில் மரணித்தவராக மாட்டீர் என்றார்கள். (புகாரி (ர.அ.) : 791)
பரா(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்களின் ருகூவும் அவர்களது ஸஜ்தாவும் இரு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து நிமிர்தலும், நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன. (புகாரி (ர.அ.) : 792)
ஸாபித் கூறியதாவது :
அனஸ்(ரழி) எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது கட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்து விட்டார்களோ என்று நாங்கள் பேசிக்கொள்ளும் அளவுக்கு நிற்பார்கள். (புகாரி (ர.அ.): 800)
பராவு பின் ஆஸிப்(ரழி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்களின் ருகூவும் ஸுஜூதும் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் நேரமும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப்பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன. (புகாரி (ர.அ.) : 801)
அபூகிலாபா கூறியதாவது :
நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பதை மாலிக் பின் அல்{ஹவைரிஸ் (ரழி) எங்களுக்குத் தொழுது காட்டினார்கள். இவ்வாறு அவர்கள் செய்து காட்டியது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை. அவர்கள் நின்றார்கள். நன்கு நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். நன்கு ருகூவு செய்தார்கள். பின்னர் தம் தலையை உயர்த்திச் சிறிது நேரம் மவுனமாக நின்றார்கள்.
பின் நமது பெரியார் அபூபுரைத் தொழுவது போலவே மாலிக் பின் அல்{ஹவைரிஸ் தொழுது காட்டினார்கள். இந்த அபூபுரைத் தொழும்போது (இரண்டாம்) ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்திச் சற்று நேரம் உட்கார்ந்து விட்டு (இரண்டாம் ரக்அத்துக்காக) எழக்கூடியவராக இருந்தார் என்று அய்யூப் குறிப்பிடுகிறார். (புகாரி (ர.அ.) : 802)
கள், சாராயம் குடிப்பதிலும், விபச்சாரம் செய்வதிலும், திருடுவதிலும், நீங்கள் என்ன கருத்துக் கொள்கிறீர்கள் என்று நபி(ஸல்) வினவினார்கள். இவற்றிற்கான தண்டனைகள் (பற்றிய வசனங்கள்) அருளப்படுவதற்கு முன்னர், அல்லாஹ்வும் அவனது தூதரும் தாம் மிக அறிந்தவர்கள் என்று மக்கள் கூறினர். அவை தீய செயல்களாகும். அன்றி அவற்றிற்குத் தண்டனைகளும் உண்டு. மேலும் எவன் தன் தொழுகையைத் திருடுகின்றானோ அவனே மிகத் தீய திருடனாவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். யாரசூலல்லாஹ் அவன் எவ்விதம் தன் தொழுகையைத் திருடுகிறான் என்று மக்கள் கேட்டனர். அதன் ருகூவுகளையும், ஸுஜூதுகளையும் அவன் பூரணமாகச் செய்ய மாட்டான் என்று நபி(ஸல்) கூறினர்.
நுஹ்மான் இப்னு முர்ரா, முஅத்தா, அல்ஹதீஃத் : 2852
மேற்கண்ட ஹதீஃத்களை மீண்டும் மீண்டும் படித்து உணர்ந்து கட்டாயக் கடமையான ஐங்காலத் தொழுகைகளை அல்லாஹ் ஏற்கும் நிலையில் தொழ வைக்க முன் வருவார்களாக.