நன்னெறியின் சாரல்..!மழலையின் மவ்வல்..!!

 

நன்னெறியின் சாரல்..!மழலையின் மவ்வல்..!!

நன்னெறியின் சாரல்..!மழலையின் மவ்வல்..!!

-எம். வை. மஸிய்யா 

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் ஒரு அழகிய கலை. அதுவும் பொறுப்புணர்வோடு கநல்த கலை. அனைத்துக்கும் மேல் அது ஒரு இறை அருட்கொடை. இந்த அழகியதொரு கடமை நிலையை நாம் எவ்வாறு கவனித்து மேற்கொள்கின்றோம் என்பதில்தான் ஒரு வருங்கால சந்நததியினரின் உன்னத நிலைமை இருக்கின்றது.

நன்நெறிப்படுத்தல் என்பது ஒரு தேவையான அம்சம்..! அதன் அடிப்படை தாக்கம் உள்ளங்களில் அழகிய நெறிக ஏற்படுத்தக்கூடியது.அதன் அடிப்படையில் மழலைகளின் உள்ளங்களில் நமது சரியான செயல்பாடுகளை விதைப்போமாயின் அவர்கள் வருங்காலத்தில் ஒரு உன்னத ஆளுமைத் திறன் கொண்டவர்களாக மிளிர்வார்கள்.., இறைநாடின்.,!

குழந்தைகளை சரியான முறையில் பயிற்றுவித்து வளர்த்தெடுத்தல் என்பது இஸ்லாம் உலகுக்கு வழங்கியுள்ள நன்னெறித்திட்டத்தின் ஒரு அங்கமாகும். இப்பகுதி மிகப் பெரியதும், முக்கியமானதுமாகும். மனித வாழ்க்கையின் மிக முக்கிய பருவங்களில் ஒன்றான சிறுபிராயத்துடன் இது தொடர்புபடுகின்றது என்ற வகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

சிறுவயது முதல் ஒரு மனிதனுக்கு சரியான பயிற்சி கிடைத்து விட்டால் அவன் ஒரு நல்ல மனிதனாகவும், சமூகத்தில் ஒரு சிறந்த சக்தியாகவும் மாறிவிடுகின்றான். இந்தப் பருவத்தில் மனிதனுக்குக் கிடைக்கின்ற பயிற்சியே அவனுடையவும், அந்தச் சமூகத்துடையவும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றது.

இதனால் தான் இஸ்லாம் குழந்தை வளர்ப்புக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஏனெனில் ஒரு குழந்தை, மழலையர் உலகின் ஒரு அங்கமாகவும், ஒரு குடும்பத்தின் உறுப்பினராகவும் கருதப்படுகின்றது. ஒரு குடும்பம் என்பது ஒரு சமூகத்தின் பிரிக்க முடியாததொரு அங்கமாகும். இந்த அனைத்தும் சேர்ந்தே ஒரு உம்மத்-சமூகம் ஆகும்.

குழந்தைகள் விவகாரத்தில் இஸ்லாம் இந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவையாவன:

1.மனிதனுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பருவங்களில் ஒன்றாக இருக்கும் இப்பருவம்,  அபாயங்கள்   நிறைந்ததும் கூட.

2.இளம்பருவத்தின் தன்மைகளும் இயல்புகளும்

3.அதனுடைய தனித்துவங்கள்.

4.ஆரோக்கியமானதொரு எதிர்காலத்திற்காக இப்பருவத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடுகள். ஏனெனில், இப்பருவமே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

எனவே, மனிதனுடைய ஆன்மிகம், உலகாயதம், பண்பாடு, உடல், உள மற்றும் அறிவுத்துறை போன்ற எல்லாத் துறைகளையும் உள்ளடக்கக் கூடிய முறையில் சிறார்களைச் சரியான முறையில் பயிற்றுவிப்பது பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள் அனைவர்மீதும் உள்ள மிகப்பெரிய கடமையாகும்.

ஆகவே, இம்மாபெரும் பொறுப்பை மிகச் சரியான முறையில் ஒருவர் மேற்கொள்வதாயின் அவர் கீழ்வருவனவற்றைச் சரியாகத் தெரிந்திருப்பது மிகமிக அவசியமாகும்.

1.இஸ்லாமிய நன்னெறிப் பயிற்சிக்குரிய அடிப்படைகள்.

2.இப்பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டிய துறைகள்.

3.இதற்குரிய சாதனங்களும், வழிமுறைகளும்.

இவ்வடிப்படைகள் பற்றி இன்று பயிற்றுவிப்பாளர்களான பெற்றோர், ஆசிரியர்கள், அழைப்பாளர்கள் மத்தியில் காணப்படுகின்ற அறியாமை ஒரு இளம் சமூகத்தின் நெறிபிறழ்வுக்குப் மிகப்பெரும் காரணமாக இருப்பதைப் பரவலாகக் காணமுடிகின்றது. தொடர்கின்ற இந்த அறியாமை ஒரு சமுகத்தின் எதிர்காலத்தை அதன் பாதாளத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருப்பதையும் காட்டுகின்றது.

எனவே ஒரு குடும்பம், இஸ்லாமிய சமூகம் ஆகிய இரண்டினதும் கல்வி நிறுவனம் என்பவற்றின் அடிப்படையான உறுப்பினர் என்ற வகையில், தந்தை, தாய், ஆசிரியர், மூத்த சகோதரன் போன்றோரும், இஸ்லாமிய அழைப்பாளர்களும் மேற்படி அடிப்படைகளைச் சிரியாக அறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமானதொரு சமுகத்தை நாம் உருவாக்க முடியும்.

அதேவேளை, குழந்தைகளுக்கான இஸ்லாமிய நன்னெறிப்பயிற்சி தொடர்பான உசாத்துணைகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அவ்வாறே இத்துறை சார்ந்த உரைகளும் மிக அரிதாகவே கிடைக்கின்றன. எனவே, நூல்களை எழுதுவதன் மூலமும், உரைகள் மற்றும் சிற்றேடுகள் முலமும் இத்துறை பற்றிய விழிப்புணர்வைப் பொதுவாக பெற்றோரிடமும், பெரியவர்களிடமும் ஏற்படுத்துவது இஸ்லாமிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூகக்காப்பாளர்கள் முரப்பீகள்-பொறுப்பாளர்கள் போன்றோர் மீதுள்ள மிகப்பெரிய கடமையாகும்.

Related Post