தொழுகையின் வலிமை..! கண்ணீரைச் சேமித்து..!!

 

தொழுகையின் வலிமை..! கண்ணீரைச் சேமித்து..!!

தொழுகையின் வலிமை..! கண்ணீரைச் சேமித்து..!!

– பி. எம். கமால்,கடையநல்லூர்

தொழுகை –

ஆன்மப் பெண்மகள்

ஆண்டவன் ஒருவனுக்கே

தன்னை அர்ப்பணிக்கும்

தகைசான்ற கற்புநிலை !

 

தொழுகை எனபது

பரமன் ஒருவனுக்கே

பக்தர்கள் எழுதும்

காதல் கடிதம் !

 

தொழுகை எனபது

இருகை ஏந்தி

அழுகை  சிந்தி

எதுகை இன்றி

எழுதும் கவிதை !

 

வீரிய வெளிச்ச

விடியலைத் தேடி

பயணப் படுகின்ற

பக்திமானுக்கு

தொழுகைதான் இந்தத்

துன்யாப் பாலையில்

ஒட்டகம் !

 

பாவி ஷைத்தான்

பரப்பிய வலையில்

பக்தி”மான்கள்”

விழுந்திடா திருக்க

தொழுகைதான் அங்கு

துணைநிற் கிறது !

 

தொழுகை என்பதைச்

சடங்காக்கிக் கொண்டால்

துஆக்கள் வெறும்

ஊதுபத்திச் சாம்பல்தான் !

 

தொழுகை

ஆன்மாவின் அழுகையாய்

ஆகிவிட்டால் அதுவே

சுவனத்தைத் திறந்திடும்

சாவியாய்  ஆகிவிடும்  !

 

குனிந்து நிமிர்வதும்

குப்புற விழுவதும்

தொழுகை அல்ல !

பணிந்து எழுவதும்

பத்தியம் காப்பதும்

ஆன்மாவை முழுதுமாய்

“அவனிடமே” தருவதுமே

தொழுகை ஆகும் !

 

உறுப்புக்களைக் கழுவுவதையா

“உழு” என்கிறீர்கள் ?

அகத்தின் அழுக்கையும்

அலசிக் கழுவுவதே

“உழு” ஆகும் !

 

கால்களை அலசிக்

கழுவும்போதே

தூசிகள் மட்டுமல்ல

துன்யாவும் அங்கே

கழன்றுவிட வேண்டும் !

கைகளைத் தேய்த்துக்

கழுவும் போதே

பாவத்தின் ரேகைகளை

உருவி எறிய வேண்டும் !

மூக்கையும் முகத்தையும்

கழுவும் போதே

சுவாசத்தையும் அங்கே

சுத்தப் படுத்தவேண்டும் !

 

அப்போதுதான் –

உடல் ஏனத்தில்

தொழுகை பானம்

தீட்டுப் படாமல்

திருத்தமாய் ஊற்றப் படும் !

 

பூமியே மூமின்களின்

முசல்லாவாய்  இருப்பதனால்

ஆமீன்கள் எங்கும்

அங்கீகரிக்கப் படுகின்றன !

ஆனால் ஒரு நிபந்தனை –

ஆமீனை உச்சரிக்கும்

அதரங்களில் என்றும்

ஹலாலின் கஸ்தூரி

வாடை வேண்டும் !

 

தொழுகைச் சோற்றில்

அழுகை உப்பிடுங்கள் !

மறுமையில் விருந்து

மணக்கக் கிடைக்கும் !

ஆன்ம உண்டியலில்

அழுகையின் கண்ணீரால்

ஆன நாணயத்தை

அதிகமாய்ச் சேமியுங்கள் !

ஆகிரத்தில் அது

அவசரச் செலவுக்கு

அல்லாஹ்வின் தோட்டத்தில்

அற்புதமாய் உதவும் !

எனவே-

இனியேனும் துனியாவில்

பணிவோடு   கொஞ்சம்

பணத்தை மட்டுமின்றி

பரமனுக்காகவே

கண்ணீரையும் கொஞ்சம்

கவனமாய்ச் சேமிப்போம் !

மறுமையில் மஹ்ஷரில்

மணல்சுடும் வேளையில்

காலுக்குச் செருப்பாக

மட்டுமின்றி கண்ணீர்

குடையாகவும் வந்து

குளிர்வித்துக் காப்பாற்றும் !

 

 

Related Post