– நாதியா
– தமிழில்:மு.அ. அப்துல் முஸவ்விர்
தூய்மையும் தொழுகையும் – 1
புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!சாந்தியும் சமாதானமும் நம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தார் மற்றும் அவருடைய தோழர்கள் மீதும் பொழிவதாக!
இந்நூல் இஸ்லாமிய வழிபாடுகளின் முக்கிய அங்கமான தூய்மை மற்றும் தொழுகை குறித்து விளக்கமாக அறிந்துகொள்ள ஆவலுடைய மக்களுக்கு ஒரு செய்முறை வழிகாட்டியாக பரிணமிக்கின்றது.இந்நூல் பல்வேறு இஸ்லாமிய சட்ட வழிமுறைகள் மத்ஹபுகளைப் பொதுவாகவும்,ஷாஃபிஈ மத்ஹப் பிரிவின் வழிமுறைகளைக் குறிப்பாகவும் தன்னகத்தே கொண்ட ஒரு தொகுப்பாக உள்ளது.ஆதாரப்பூர்வமான, ஷாஃபிஈ மத்ஹப்- ஃபிக் இஸ்லாமிய சட்ட வழிமுறைகளிலிருந்து பெறப்பட்டவற்றை பின்பற்றுகின்றது இந்நூல்!
இவ்வாறு பல்தரப்பட்ட ஆதாரப்பூர்வ அம்சங்களிலிருந்து பெற்று ஒரு மொழியாக்கமாக இந்நூலை கொணரவதன் நோக்கம் இதுவே:- அதாவது, இஸ்லாம் கூறும் பல்வேறு வழிபாடுகளை ‘எவ்வாறு மேற்கொள்வது’ என்பதற்கான எளிய மற்றும் சுலபமான முறையில் அமைந்த ஒரு வழிகாட்டியாக இது பயன்பட வேண்டும்.
பல்வேறு இஸ்லாமிய கல்வி நிலையங்கள்,மதரஸாக்கள்,இஸ்லாமிய அமர்வுகள் ஆகியவற்றில் வாசிக்க,கற்க மற்றும் கற்றுக் கொடுக்க ஏற்ற வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.அவ்வாறு பயன் பெறுவோர் பிறப்பால் முஸ்லிம்களாக இருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது புதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவியவர்களாக இருப்பினும் சரியே..!
ஷாஃபிஈ (மத்ஹப்) பள்ளிச் சிந்தனைகளின் கற்கை நெறி அடிப்படையில் இந்நூலில் பாடங்கள் சிறியனவாக உருவாக்கப்பட்டுள்ளன.மேலும் ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.இதன் மூலம் அடுத்த பாடத்துக்குள் நுழையும் முன்னர், அதுவரை கற்றவை மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்ததா என ஒருவர் தம்மைத் தாமே எடை போட்டுக்கொள்ள முடியும்.
இஸ்லாமிய நிலையம் – ஐPஊ தேர்ந்த மொழியாக்க வல்லுநர்களைக் கொண்டு நல்ல தரமுள்ள நூல்களை தமிழ் கூறும் மாணவ மற்றும் வாசகர் நல்லுலகிற்காக வெளியிடும் அரும்பணியை ஆற்றி வருகின்றது.
திண்ணமாக இந்நூல் வாசகர்களுக்கு அபரிமித பயன்களை ஈட்டித் தரும் என நம்புகின்றோம்.மேலும், இதுபோன்ற நூல்களை உருவாக்கி வெளியிடுவதில் பெரும் துணையாக நிற்கும் ஒவ்வொருவருக்கும் வல்ல அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.
சாந்தியும் சமாதானமும் நம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தார்,அவருடைய தோழர்கள் மற்றும் இறைநம்பிக்கையாளர்கள் மீதும் பொழிவதாக!எல்லாம் வல்ல ஏகஇறைவன் எமது பிழைகளைப் பொறுத்துக் கொண்டு,எம்மை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றி,சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் வகையில் அவன் பேரருளை எம் அனைவர் மீதும் பொழிவானாக!
இஸ்லாமிய நிலையம்
கற்கை நெறித் துறை