ஜகாத் – விரிவான விளக்கம்!

 – ரீட் இஸ்லாம்

ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகு

ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகு

திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்;  மேலும், வீணானவற்றைவிட்டு விலகியிருக்கின்றார்கள்; இன்னும் ஜகாத்தை அதன் நெறிமுறைப்படி செயல்படுத்தக் கூடியவராய் இருக்கின்றார்கள். மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்;தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர! அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்பிற்குரியவர்கள் அல்லர்.

ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இது பல தனித்தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட ஓர் அரிய அமைப்பாகும். திருக்குர்ஆனில் வரும் ‘ஜகாத்’ என்ற சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்தும் ஒரே தமிழ்ச்சொல் இல்லை. இதுபோலவே இதன் முழுப்பொருளையும் உணர்த்தும் ஒரே சொல் வேறு மொழிகளிலும் இல்லை.

தர்மம், கொடை, இனாம், அன்பளிப்பு, வரி என்ற சொற்கள் ‘ஜகாத்’ என்ற சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்துபவையாக இல்லை. இது மிகவும் விரிவான பொருளைக் கொண்டதாகும்.

‘ஜகாத்’ என்பது ஒருவருடைய சொத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் குறைத்து விடுவது என்பதல்ல. ‘ஜகாத்’ கொடுப்பதால் ஒருவருடைய செல்வம் குறைந்து விடுவதல்ல. மாறாக அது மேலும் செல்வத்தில் செழிப்பை ஏற்படுத்துகின்றது. ஜகாத் கொடுப்பது ஒரு ஆன்மீக முதலீடாகும்.

ஜகாத் யாரோ ஒருவருக்காகத் தரப்படும் ஒரு அன்பளிப்பு என்பதல்ல. பலர் அரசாங்கத்திற்குத் தருவதிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்களே அதுபோன்றதொரு (வருமான) வரியுமல்ல. ஜகாத் இறைவனால் பணிக்கப்பட்டதாகும். ஒவ்வொரு முஸ்லிமும் முன்வந்து மனமுவந்து சமுதாயத்தின் நலனுக்காக நிறைவேற்றும் கடமையாகும். ஜகாத் என்பதற்கு ஆன்மீக நோக்கமுண்டு. பொருளாதாரத் தனித்தன்மைகளுண்டு. இறை உணர்வும், தெய்வீக உள்ளமும் அதன் இன்றியமையாத தேவைகள். நன்கொடை, அன்பளிப்பு, இனாம், வரி இவற்றின் சிறப்புகளும் அதிலுண்டு. ஆதலால் தான் ஜகாத் என்ற சொல்லுக்கு இணையானதொரு சொல் வேறு எந்த மொழியிலும் இல்லை.

பொதுவாக ஜகாத் என்ற சொல்லுக்குத் தூய்மை என்று பொருள். வசதியுள்ள முஸ்லிம்கள் வறியவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் குறிக்கும். ஜகாத் என்ற சொல்லின் ஆன்மீகப் பொருள் மிகவும் ஆழமானதாகும். ஜகாத்தின் பொருளை பின்வருமாறு விளக்கலாம்:

1. ஜகாத் செல்வந்தர்களின் செல்வத்தை சுத்தப்படுத்துகின்றது.

ஒருவர் எவ்வளவு பணத்தை அல்லது பொருளை ஜகாத்தாக தரவேண்டுமோ அவ்வளவு பணம் அல்லது பொருள் அவருக்குச் சொந்தமானதல்ல என்றே கொள்ள வேண்டும். அது ஏழைகளுக்குச் சொந்தமானது. ஆகவே ஒருவர் ஜகாத் தரவில்லை என்றால் அவர் ஏழைகளுக்குச் சொந்தமானதை அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். இது வெளிப்படையானதொரு சமுதாய ஆக்கிரமிப்பேயாகும். இஸ்லாம் தந்த ஆன்மீக உணர்வுகளுக்கு எதிரானதாகும். இறைவனின் சட்டத்தை மீறுகின்ற செயலாகும்.

இப்படி ஒருவர் ஏழைகளுக்குச் சொந்தமானதைத் தமதாக்கிக் கொண்டால் அவர் தமது செல்வம் முழுவதையும் அசுத்தபடுத்திக் கொண்டார் என்றே பொருள். இது அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் பெரிய இழப்புகளையே ஏற்படுத்தும்.

ஆனால் அவர் ஏழைகளுக்குச் சொந்தமானதைத் தனது செல்வத்திலிருந்து பிரித்தெடுத்து உரியவர்களுக்கு வழங்கி விடுவாரேயானால், அவரது செல்வம் முழுவதும் தூய்மையாகி விடும். தூய்மையான முதலீடும் செல்வமும் நிரந்தர முன்னேற்றத்தின் நிலையான ஏற்பாடன்றோ!

2. ’ஜகாத்’ அதைக் கொடுப்பவர்களின் செல்வத்தை தூய்மைப்படுத்துகின்றது. அது கொடுப்பவரின் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகின்றது. கொடுப்பவரின் உள்ளம் சுயநலம், பணஆசை போன்றவற்றிலிருந்து விடுதலைப் பெறுகின்றது.

’ஜகாத்’ அதைப் பெறுபவரின் உள்ளத்தையும் சுத்தப்படுத்துகின்றது. அதைப் பெறுபவர் பொறாமை, வஞ்சகம், வெறுப்பு, விரக்தி இன்னும் இவை போன்றவற்றைத் தனது உள்ளத்திலிருந்து அகற்றி, தனது உள்ளத்தை சுத்தப்படுத்துகின்றார். அவர் தனது உள்ளத்தை நயவஞ்சகத்திற்குப் பதில் நன்றியால் நிரப்புகின்றார். ஜகாத்தைக் கொடுக்கும் வசதி படைத்தவர்களிடம் பொறாமையுடனல்லாமல் பாசத்துடன் நடந்து கொள்கிறார். இதனால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி சுருங்குகின்றது. வர்க்கப் போராட்டத்திற்கு வழியில்லாமல் ஆகின்றது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயுள்ள காழ்ப்புணர்வுகள் அகற்றப்பட்டு, அவர்களிடையே பாசமும், பரிவும் பரிமாறப்படுகின்றது.

3. ‘ஜகாத்’ ஏழைகளின் ஏக்கத்தைப் போக்குகின்றது. வறியவர்களின் வாட்டத்தை நீக்குகின்றது. இதனால் சமுதாய உறுப்பினர்களின் துயரங்கள் துடைக்கப்படுகின்றன. வாழ்வின் அவசிய தேவைகளைப் பெற்றிடும் வாய்ப்பினைப் பெறாதவர்களுக்கு ‘ஜகாத்’ ஒப்பற்ற விதத்தில் உதவி செய்கின்றது. அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தனது முன்னேற்றத்திற்கு உழைத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது. ‘ஜகாத்’ வாழ்க்கையில் ஏதேனுமொரு சிறுதுடுப்பு கிடைத்தால் முன்னேறி விடுவார்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இஃது ஒரு பெரும் துடுப்பாக துணை நிற்கின்றது. பலருக்கு ‘ஜகாத்’ ஒரு அவசரக்கால உதவியாகவே அமைகின்றது. ஜகாத்தையே அவர் சார்ந்திராமல் தானும் முன்னேறிட, முன்னேறி பிறருக்கு ஜகாத் கொடுப்பவராக மாறிட, அது ஊக்கமளிக்கின்றது.

ஜகாத்தைக் கொடுப்பவருக்கும் அது ஊக்கம் தருகின்றது. ஜகாத்தைக் கொடுப்பது இறைவனின் அருளைப் பெற்றுத் தருவதனால் கொடுப்பவர் இன்னும் அதிகம் உழைத்து அதிகம் ஜகாத் கொடுக்க வேண்டும், அல்லாஹ்வின் அருளை அதிகமாகப் பெற்றிட வேண்டும் என முனைந்து செயல்படுகின்றார்.

இருப்பவர்களும், இல்லாதவர்களும் பயன்பெறும் ஒரு சிறந்த கருவூலமே ஜகாத்.

இருப்பவர்கள் ஆண்டவனின் அருளை அறுவடை செய்கின்றார்கள். இல்லாதவர்கள் அல்லாஹ்வின் திட்டத்தின் கீழ் வாழ்க்கையில் உதவி செய்யப் பெறுகிறார்கள்.

4. சுயநலம், பேராசை, இன்னும் இவற்றால் சமுதாயத்தில் ஏற்படும் பிளவு, சமுதாய அமைப்பில் வேற்றுக் கொள்கைகளின் படையெடுப்பு இவற்றிலிருந்து சமுதாயத்தைக் காத்திடும் பாதுகாப்புக் கேந்திரமாக விளங்குகின்றது ஜகாத். ‘ஜகாத்’ அதைக் கொடுப்பவரிடம் ஒரு பொறுப்பை ஏற்படுத்துகின்றது. சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் பொறுப்பை உணர்த்துகின்றது.

‘ஜகாத்’ அதைப் பெறுபவரிடத்தில் சமுதாயம் நம்மை வாட விட்டுவிடுவதில்லை என்ற பாதுகாப்பு உணர்வையும், நாம் சமுதாயத்தின் பொறுப்புமிக்க குடிமகன் என மதிக்கப்படுகின்றோம் என்ற நன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது.

5. தனிமனிதனும், சமுதாயமும் எப்படி ஆன்மீக உணர்வுடனும் மனிதாபிமான எண்ணத்துடனும் நடந்திட வேண்டும் என்பதன் தெளிவான விளக்கமாகத் திகழ்கின்றது ஜகாத். இஸ்லாம் எவ்வாறு தனியுடைமைக்குத் தடை போடாமல் பொதுவுடமையைப் பேணுகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது ஜகாத். தனிமனிதன் உழைத்து சம்பாதிப்பதையும், சம்பாதித்ததைக் கொண்டு முதலீடு செய்து தொழில் செய்வதையும் இஸ்லாம் தடை செய்வதில்லை. அதே நேரத்தில் மனிதன் பணம் பண்ணும் பணியில் சமுதாயத்தை ஆக்கிரமித்திடவோ, புறக்கணித்திடவோ இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அதுபோலவே மனிதன் சுயநலப் பேயாகப் படையெடுத்து பணத்தை சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளியாக மாறிட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மனிதன் சுயநலம் நிறைந்த முதலாளித்துவ முறையை சமுதாயத்தில் நிலைநாட்டிட அனுமதிப்பதில்லை இஸ்லாம். இவற்றிற்கெல்லாம் ‘ஜகாத்’ தெளிவான விளக்கமாக அமைகின்றது.

இஸ்லாம் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் இடையில் நியாயமானதொரு சமநிலையை ஏற்படுத்துகின்றது என்பதை ‘ஜகாத்’ எடுத்துக் காட்டுகின்றது. அதுபோலவே இஸ்லாம் மக்களுக்கும், அவர்களை ஆளும் அரசுக்கும் இடையில், தனியுடமைக்கும், பொதுவுடமைக்கும் இடையில், உலகியலுக்கும், ஆன்மீகத்திற்கும் இடையில் எப்படி ஒரு சமத்துவத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ‘ஜகாத்’ தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

ஜகாத் வழங்கவேண்டிய விகிதாசாரம்.

ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகு

ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகு

ஆண்டின் இறுதியில் ஏறத்தாழ 15*டாலரை (*ஜகாத் தர வேண்டிய அளவினை தங்கம், வெள்ளி ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடுவது வழக்கம். இங்கே ஆசிரியர் டாலர்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டிருக்கிறார். நாம் நமது இந்திய சூழ்நிலையில் இது குறித்த அறிஞர்களை கலந்து முடிவு செய்திட வேண்டும்.) ரொக்கமாகவோ, வியாபாரப் பொருளாகவோ வைத்திருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் குறைந்த பட்சம் இரண்டரை (2-1/2) விழுக்காடுகள் ஜகாத்தாக தந்திட வேண்டும். இந்தத் தொகை ரொக்கமாக இருந்தால் ஜகாத் கணக்கிடுவதில் சிரமமில்லை. ஆனால் இது, வாணிபப் பொருள்களாகவோ, வர்த்தகப் பொருள்களாகவோ இருந்தால், ஆண்டின் இறுதியில் அவற்றை அங்காடியில் அப்பொழுது நிலவும் விலையில் கணக்கிட்டு அந்த மதிப்பில் இரண்டரை (2-1/2) விழுக்காடுகள் ஜகாத்தாகத் தந்திட வேண்டும். ஒருவர் வருமானம் வரும் கட்டிடங்கள் (வியாபாரத் தலங்கள்) ஆலைகள் போன்றவற்றில் முதலீடு செய்திருந்தால், அவர் அவற்றிலிருந்து வரும் நிகர வருமானத்தில் ஜகாத் கொடுக்க வேண்டும். அவற்றின் மொத்த மதிப்பில் அல்ல. ஆனால் ஒருவர் கட்டிடங்களையோ அல்லது வீடுகளையோ வியாபாரப் பொருள்களாக்கிக் கொண்டிருந்தால் (அதாவது அவர் வீடுகளையும், கட்டிடங்களையும் கட்டி அவற்றை விற்பதையே வியாபாரமாகக் கொண்டவராக இருந்தால்) அவர் அவற்றின் மொத்த மதிப்பில் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எல்லா நிலைகளிலும், ஜகாத் நிகர இருப்பிலிருந்தே கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டரை (2-1/2) விழுக்காடு ‘ஜகாத்’ என்பது குறைந்தபட்ச அளவேயாகும். அவசரக் காலங்களிலும், தேவைகள் நிர்பந்தித்திடும் போதும் ஜகாத் தந்திட வேண்டிய அளவிற்கு வரையறையில்லை. அதிகமாக ஜகாத் தருவது தருபவருக்கு அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும். சமுதாயமும் அதிகமான நன்மைகளை அடையும்.

ஜகாத் முறையாக நிலைநிறுத்தப்பட்டால் அவ்வப்போது பிரச்சனைகளை முன்வைத்து நிதி திரட்டும் பணியிலிருந்து சமுதாயம் விடுவிக்கப்படுகின்றது.

இஸ்லாம் ஆட்சி செலுத்திய ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதன் எல்லைக்குள் ஜகாத்தைப் பெற்றுத்தான் வாழ்ந்திட வேண்டும் என்ற நிலையில் எவரும் இருந்ததில்லை. ஜகாத்தைப் பெறுபவர்களேயில்லை என்ற அளவிற்கு வறுமை முற்றாகத் துடைக்கப்பட்டிருந்தது, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் இன்னும் இஸ்லாத்தின் எல்லைக்குள் வாழ்ந்த அத்தனைப் பேரும் தங்களது தேவைகளுக்குப் போதுமானவற்றைப் பெற்றிருந்தார்கள். ஆகவே அங்கு ஜகாத் பெறுகின்றவர்கள் யாரும் இருக்கவில்லை. இந்நிலையில் ஜகாத்தாகத் திரட்டப்பட்ட நிதி அரசின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. இப்படி வறுமையை முற்றாக வெற்றிக் கொள்வதற்கு வலுவான ஆயுதமாக விளங்கியது ‘ஜகாத்’. இவை வரலாறு தரௌ ஆதாரபூர்வமான உண்மைகளாகும். இதற்கு இணையானதொரு வரலாற்றுச் சம்பவத்தை நாம் எங்கேயும் காண இயலாது.

இதன் பொருள், ஜகாத் முறை, முறையாக செயல்படுத்தபடுமேயானால், மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். அரசின் கருவூலம் நிறையும். இல்லாமை இல்லாத நிலை உண்டாகும். நாடு வளத்தில் வாழும்.

பொதுமக்களின் நலனுக்காக வகுக்கப்பெற்ற இந்தத் திட்டம் ஒருபோதும் தோல்வியுறுவதில்லை. ஏனெனில் இது இறைவனால் வகுக்கப்பட்ட திட்டம். இறைவனால் கட்டளையிடப்பட்ட கடமை. இது தனிமனிதர்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட சொந்த விஷயமல்ல! அதுபோலவே ‘நானும் கொடுப்பேன்’ என்ற அகந்தையோடு தரப்படுவதுமில்லை இது. மாறாக உளத்தூய்மையோடு கூடிய இறையச்சத்தின்பால் நின்று கணக்கிட்டுத் தரப்படுவதே ‘ஜகாத்’. வசதி படைத்தோர் அனைவரும் கண்ணெனக் காத்திருந்து நிறைவேற்றிட வேண்டிய கடமையே ஜகாத். தகுதியிருந்தும் யாரேனும் தர மறுத்தால் அவர் இறைவனால் தண்டிக்கப்படுவார். இது இறைவனால் சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக ஆக்கப்பெற்ற சட்டமாகும். தன்னை முஸ்லிம்கள் என சொல்லிக் கொள்பவர்கள் யாரும் இந்தக் கடமையை புறக்கணித்திட முடியாது. யாராவது இந்தக் கடமையை புறக்கணித்திட முனைந்தால், இஸ்லாமிய அரசு தலையிட்டு இதை நிலைநிறுத்த ஆவனச் செய்யும்.

ஜகாத்தைப் பெறுபவர்கள்.

திருக்குர்ஆன், பின்வருபவர்கள் ஜகாத்தைப் பெறும் தகுதி படைத்தவர்கள் எனக் கூறுகின்றது:

1. வறுமையின் கொடுமையில் சிக்கிக் கொண்ட ஏழை முஸ்லிம்கள். (வறுமையிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவதற்காக.)

2. தங்களது வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக் கொள்வதற்கான வழிவகையில்லாத வசதியற்ற முஸ்லிம்கள். (அவர்கள் வாழ்க்கைத் தேவைகளைத் தேடிட இஃது ஆரம்ப முதலீடாக அமையலாம்.)

3. புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்கள். (தங்களுடைய புதிய தேவைகளைப் பூர்த்தி செய்து, புதிய வாழ்வைத் துவங்கிட இது உதவியாக அமையும்.)

4. எதிரிகளிடம் கைதிகளாகச் சிக்கிக்கொண்ட இஸ்லாமியப் போர்க்கைதிகள். (இவர்களுக்கான மீட்புத் தொகையை ஜகாத்திலிருந்து கொடுக்கலாம்.)

5. அவசரத் தேவைகளின்போது பட்ட கடன்களிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் முஸ்லிம்கள்.

6. இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஜகாத்தை வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பணியாளர்கள். (அவர்களுக்கு ஊதியம் ஜகாத் பணத்திலிருந்து கொடுக்கலாம்.)

7. இறைப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள்.

இஸ்லாமிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாத்தைக் கற்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாமியப் பிரச்சாரப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆகியோர்களின் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஜகாத் திரட்டப்பட்ட நிதியிலிருந்து உதவி செய்யலாம்.

8. பயணத்தின்போது அந்நிய நாட்டில் அகப்பட்டுக்கொண்டு உதவிகோரும் முஸ்லிம் பயணிகள்.

தங்களுடைய அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்திட முடியாத ஏழைகள் அல்லது ஆண்டின் இறுதியில் தங்களிடம் பதினைந்து டாலர் கூட இல்லாதவர்கள், இவர்களே ஜகாத் பெற்றிட உரியவர்கள். ஒருவரிடம் பதினைந்து டாலர்கள் ஆண்டின் இறுதியில் மிஞ்சிடுமேயானால் அவர் ஜகாத் பெறக்கூடாது. மாறாக அவர் ஜகாத் கொடுக்க வேண்டும். ஜகாத்தைப் பெறுபவரே தான் பெற்றது தனது அவசியத் தேவைகளை நிறைவு செய்திடப் போதுமானதாக இருந்தால், அவர் அத்துடன் ஜகாத் பெறுவதை நிறுத்திவிட வேண்டும். அவருடைய தேவைகளுக்குப் போக எஞ்சியிருப்பதை அவர் ஏனையவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்.

ஜகாத்தை பெற்றிட தகுதியுடையோருக்கு அதனை நேரடியாகவே கொடுத்திடலாம். அல்லது அவர்களைப் பாதுகாத்துவரும் சமூக நல அமைப்புகளிடம் ஒப்படைத்திடலாம். கல்வியில் முதன்நிலையில் நிற்கும் ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாகவும் தந்திடலாம். அல்லது இஸ்லாமிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வல்லுநர்களுக்கு ஆராய்ச்சியின்போது உதவித் தொகையாகவும் தந்திடலாம். இதுபோன்ற செயல்களுக்கு உதவி செய்து ஊக்கம் தந்திடும் சமுதாய அமைப்புகளிடம் ஒப்படைத்திடலாம்.

சற்றேனும் உழைக்க முடிந்த முஸ்லிமைவிட, சற்றும் உழைக்க முடியாத அளவிற்கு வலுவிழந்தவிட்ட முஸ்லிமிற்கே ஜகாத் கொடுப்பதில் முதலிடம் தந்திட வேண்டும். ஜகாத்தைக் கொடுப்பவர் யாருக்கு முதலிடம் தரவேண்டும் என்பதை நன்றாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய நாட்களில் நாம் அரசாங்கத்திற்குச் செலுத்திடும் வரிகள், இந்த மார்க்கக் கடமைக்கு பதிலாகாது. இதை வரிகளுக்கு அப்பால் நின்று தனியாகவே தந்திட வேண்டும். வரியாக செலுத்திடும் பணத்தை ஜகாத்திலிருந்து கழித்திடக் கூடாது.

ஜகாத்தைக் கொடுப்பவர், இதை முதலாகக் கொண்டு பெயரும் புகழும் சாம்பாதித்திட விழைந்திடலாகாது. இதனை அவர் முடிந்த அளவிற்கு மறைவாக நிறைவேற்றிட வேண்டும். இல்லையேல் அவர் புகழாசையால் பீடிக்கப்படுவார். இந்த ஆசையால் பீடிக்கப்பட்டவர்கள், தங்களது நல்ல செயல்களின் பலன்களை இழந்தே விடுவார்கள். ஆனால் கொடுப்பவரின் பெயரை பிறரறியச் செய்வதனால், இன்னும் பலர் ஊக்கம் பெற்று ஜகாத்தைக் கொடுத்திட முன்வருவார்களேயானால், கொடுப்பவர் பெயரை வெளிப்படுத்துவதில் தவறில்லை.

கால்நடைகள், விவசாயக் களஞ்சியங்கள் இவற்றிலிருந்து ஜகாத் கொடுத்திட வேண்டும். இவைகளிலிருந்து கொடுத்திட வேண்டிய ஜகாத்தின் அளவு பொருளுக்குப் பொருள் மாறும். ஆகவே இது குறித்து விரிவானதொரு விளக்கம் தேவைப்படுகின்றது. அதை விரிவான மார்க்க நூல்களில் பெறும்படி, வாசகர்கள் கோரப்படுகின்றார்கள்.

Related Post