சேஷாசலத்திலிருந்து…. பெரியார்தாசன்… அப்துல்லாஹ்..!

-மு.அ. அப்துல் முஸவ்விர்

சேஷாசலத்திலிருந்து பெரியார்தாசன் வரையிலான உங்கள் பயணம் எப்படி...?

சேஷாசலத்திலிருந்து பெரியார்தாசன் வரையிலான உங்கள் பயணம் எப்படி…?

சேஷாசலத்திலிருந்து பெரியார்தாசன் வரையிலான உங்கள் பயணம் எப்படி…?

ஒரு முறை பெரியார் அவர்கள் பச்சையப்பன் கல்லூரிக்கு வருகை தந்தபோது,அவரைப் பாராட்டி எழுதிய கவிதையில் எனது பெயர் சேஷாசலம் என்று இருந்ததைக் கண்ட பெரியார் என்னை அழைத்து, ‘என்னய்யா, பிராமணப் பெயர் வைத்திருக்கின்றாய்?முதல்ல பெயரை மாத்தய்யா’ என்றார்.பெரியார் கொள்கையில் நான் கொண்ட காதலால், அவருடைய பெயரை இணைத்தே பெரியார்தாசன் என்று பெயரை மாற்றிக் கொண்டேன்.அன்று ஆரம்பித்து 2000-ஆம் ஆண்டு வரை அவருடைய நாத்திகக் கொள்கைகளைப் பரப்புவதில் முழுமூச்சாக ஈடுபட்டேன்.சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது இறைநிராகரிப்புக் கொள்கைகளை பரப்புவதிலேயே குறியாக இருந்தேன்.அது தமிழ் விழாவாக இருப்பினும் சரி, வேறு மாநாடுகள், கருத்தரங்குகளாக இருப்பினும் சரி,அவ்வளவு என் எனது துறை தொடர்புடைய விழாக்களாக இருப்பினும் சரியே!அமெரிக்கா.பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற மேலைநாடுகளில் நடந்த மனோதத்துவம் சம்பந்தப்பட்ட மாநாடுகளிலும்கூட நாத்திக பிரச்சாரத்தைக் கைவிடவில்லை நான்!

பல்வேறு திராவிட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தாலும், எந்த ஒரு திராவிட இயக்கத்திலும் கட்சியிலும் நிரந்தரமாக ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இயங்க முடியவில்லை நான்!காரணம் நான் நன்றாகப் பேசுகின்றேன் என்பதுதான்!இறைநிராகரிப்புக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் திராவிடர் கழகத்திலிருந்து 1978-இலேயே நீக்கப்பட்டுவிட்டேன். பின்னர், ஆனைமுத்து ஐயா அவர்களின் பெரியார் சமூகநீதிக் கழகத்தில் சில காலம் இருந்தேன்.முன்பு சொன்ன அதே காரணத்துக்காக அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டேன்.

எந்தவொரு செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் மிகத்தீவிர ஈடுபாட்டுடன் செயல்படுபவன் நான்!எந்தக் கட்சியில் இருந்தாலும் எனது நாத்திகப் பிரச்சாரத்திலிருந்து மட்டும் பின்வாங்கவில்லை நான்!பெரியார் கருத்துக்களை கரைத்துக் குடித்தேன்.பெரியார் சிந்தனைகளைத் தொகுத்துள்ளேன்.இப்போதுகூட அந்தத் தொகுப்பில் எந்த பக்கத்தில் என்ன இருக்கின்றது என்பதை சரியாகச் சொல்லும் அளவுக்குப் பெரியார் படித்திருக்கின்றேன்.பச்சையப்பன் கல்லூரியில் மதியம் மூன்று மணிக்கு பணி முடிந்ததும் இல்லம் சென்று, எனது அடிப்படைப் பணிகள் முடித்துவிட்டு நேராக எனது கொள்கைப் பிரச்சாரத்துக்கு சென்றுவிடுவேன்.அதிகமாகப் படிப்பேன்!அதிகமாகப் பேசுவேன்!!ஆழமாக சிந்திப்பேன்!!! இதுதான் பெரியார்தாசன்!

இடையில் பவுத்தராக மாறினீர்கள்! இந்த மாற்றத்தின் பின்னணி என்னவென்று கூற முடியுமா..?

நாத்திகப் பிரச்சாரத்தின் இந்தப் பயணத்தில்தான் நான் அம்பேத்கரைப் படிக்க ஆரம்பித்தேன்.அவருடைய பவுத்த கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு பவுத்த நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.பின்னர்,பவுத்தத்துக்கு மாறி எனது பெயரை சித்தார்த்தன் என்றுகூட அறிவித்துக் கொண்டேன்.

பவுத்தத்துக்கு மாறுதல்… அதாவது பொதுவாக மதம் மாறுவது என்பதை எந்த கோணத்தில் காண்கின்றீர்கள்?

இன்னொரு மதத்துக்கு,சமயத்துக்கு மாறுவது என்பது என்ன?வசந்தம் மூலமாக இதுகுறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.இப்போதுகூட ‘இஸ்லாத்துக்கு மாறிவிட்டேன்’ என்று சொல்கின்றார்கள்.நான் இஸ்லாத்துக்கு வந்ததால் என்ன செய்துவிட்டேன்?ஓர் உண்மை கொள்கையை ஏற்று, என் மனதார கலிமா கூறி பிரகடனம் செய்து அறிவித்துக் கொண்டேன் நான் ஒரு இஸ்லாமியன் என்று, அவ்வளவுதான்!

ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வது என்பது பிம்பம் மாதிரி சொல்லப்படுகின்றது.நீங்கள் இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்ததனால் தானாகவே ‘இஸ்லாமியர்’ என்று அறியப்படுகின்றீர்கள்!நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு அறியப்படுகின்றேன்.அவ்வளவுதான்!இதில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை!

ஒரு மனிதன் உண்மை சமயத்தை ஏற்றுக்கொள்வது என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண விஷயம்.அதில் பரபரப்பு உண்டுபண்ணுவதற்கு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!என்னைப் பொறுத்தவரை, என்னைப் போன்ற ஒருவனின் சத்திய நெறியின்பால் திண்மைத்தழுவல், அவனுக்கும் அவனது இறைவன் மீதான நம்பிக்கைக்கும் இடைப்பட்ட ஒரு அம்சம் அவ்வளவுதான்!

சமயஏற்பு அம்சத்தைப் பொறுத்தவரை,ஒரு மனிதன் மூன்று நிலைகளில் ஒன்றில்தான் தன்னை இருத்திக்கொள்ள முடியும்.

1.    இறைவனை மறுத்து நிராகரிக்கும் இறைநிராகரிப்பாளனாக இருப்பவன்.

2.    ஒரே இறைவனை ஏற்று நம்பிக்கை கொண்ட இறைநம்பிக்கையாளனாக இருப்பவன்.

3.    இறைவன் இருக்கின்றான் என்பதை ஏற்றுக்கொண்டு,அந்த இறைவனுக்கு இணையாக மற்றவற்றையும் இணை வைத்து வழிபடும் இணைவைப்பாளனாக இருப்பவன்

இந்த மூன்று அம்சங்களைக் குறித்து சேஷாசலம்,பெரியார்தாசன்,சித்தார்த்தன் – ஆகியோர் எத்தகைய மனநிலை கொண்டிருந்தார்கள்?ஏகஇறைபால் இந்த பயணம் எப்படி திரும்பியது?

Related Post