-சுவனத்தென்றல்
இதுதான் இஸ்லாம்..!
இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்.
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும்.
ஆயினும் மார்க்கத்தில் ‘இஸ்லாம்’ என்பதற்கு ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக அவரை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப அர்ப்பனித்தல் என்றே சொல்லப்படும்..
பலர் நினைத்திருப்பது போன்று இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கமன்று. ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதற்கொண்டு இறைவன் மனதர்களுக்கு நேர்வழிகாட்ட அனுப்பிய நோவா, ஆப்ரஹாம், மோஸஸ், இயேசு போன்ற அனைத்து தூதர்கள் அனைவரும் போதித்த மார்க்கம் தான் இஸ்லாம். இந்த இறைத் தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்.
முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?
அகில உலகங்களையும் படைத்து, உணவளித்து பரிபாலித்து வரும் ஒரே இறைவன் அல்லாஹ் என்றும் அவனைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான வேறு இறைவன் யாரும் இல்லை என்றும் அவனுடைய படைப்பினங்களான மனிதர்களுக்கு சத்திய நேர்வழி காட்டிட அவன் ஆதி மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் முதல் தொடராக இறைவன் அனுப்பிய தூதர்களில் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதியானவர் என்றும் நம்பிக்கைக் கொண்டு அதன்படி செயல்படுபவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.
ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இறைவன் சூட்டிய பெயர் முஸ்லிம்கள் என்பதாகும். மாற்று மதத்தவர்கள் அழைப்பது போல முஹம்மதியர்கள் என்று கூறுவது தவறாகும். ஏனென்றால் இம்மார்க்கத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் புதிதாக உருவாக்கவில்லை. மேலும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை வணங்குவது போன்று முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குவது இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரின் வரிசையில் வந்த இறுதி தூதரே அன்றி வேறில்லை என முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களின் நம்பிக்கைகள் யாவை?
முஸ்லிம்கள்,
1. எவ்வித ஒப்புவமையற்ற ஒரே இறைவன் அல்லாஹ் மீதும்,
2. அவனுடைய படைப்பினமான மலக்குகள் (வானவர்கள்) மீதும்,
3. அவனுடைய தூதர்கள் மீதும்,
4. அவன் அந்த தூதர்கள் வாயிலாக மனிதர்களுக்கு நேர்வழி காட்டிட இறக்கியருளிய வேதங்கள் மீதும்,
5. நியாயத் தீர்ப்பு நாள் மீதும், அந்நாளில் மனிதர்கள் இவ்வுலகில் தாங்கள் செய்த வினைகளுக்கு ஏற்ப விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவார்கள் என்றும்
6. நன்மை தீமையாவும் இறைவன் விதித்த விதியின்படியே நடைபெறுகின்றன என்பதன் மீதும்
நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இறைவனின் தூதர்களான ஆதம், நோவா, ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாக்கோபு, மோஸஸ், ஆருன், டேவிட், சாலமன், ஜோனாஹ் மற்றும் ஜீஸஸ் (அலை) ஆகியோர் மீதும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இந்த தூதர்களின் தொடரில் இறைவனால் அனுப்பபட்ட இறுதி தூதராக முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களின் கடவுள் கொள்கை: –
இகில உலகங்களையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து வருபவன் ஒரே இறைவன் – அவன் தான் அல்லாஹ்
அவனைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை
அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது
என்பதாகும். இந்த ஏக இறைவனையே ஆதி மனிதர் ஆதாம் முதற்கொண்டு, நோவா, ஆபிரஹாம், மோஸஸ், இயேசு போன்ற இறைத்தூததர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் வணங்கினர்.
‘அல்லாஹ்’ என்ற அரபி சொல்லிற்கு இறைவன் என்பது பொருள். அரபி மொழியைத் தாய் மொழியாக் கொண்டுள்ள கிறிஸ்தவர்களும் இறைவனை அல்லாஹ் என்றே அழைக்கின்றனர்.
இறைவன் தன்னுடைய இலக்கணங்களாக அவன் இறுதியாக அருளிய வேதம் அல் குர்ஆன் அத்தியாயம் 112 ல் கூறுகிறான்: –
1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
4. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
இந்த நான்கு வரிகளே இஸ்லாத்தின் அடிப்படைக் கடவுள் கொள்கையாகும்.
தொடரும் …1