– நேர்வழி
எவர்கள் தங்களுடைய பொருள்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் அதிபதியிடம் உரிய கூலி இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். (ஆனால்) வட்டி உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போலல்லாது எழமாட்டார்கள். அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியதேயாகும். உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை (ஹலால்) அனுமதிக்கப்பட்டதாகவும்; வட்டியை (ஹராம்) தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். ஆகவே, எவர் தம் இறைவனிடமிருந்து இந்த அறிவுரை வந்த பிறகு (இனி வட்டி வாங்குவதை விட்டு) விலகிக் கொள்கின்றாரோ அவர் முன்னர் வாங்கியது வாங்கியதுதான் என்றாலும் அவருடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. ஆனால் (இந்தக் கட்டளை வந்த பிறகும்) யாரேனும் (இந்தக் குற்றத்தை) மீண்டும் செய்தால், அவர்கள் நரகவாசிகளே ஆவர்; அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். அல்லாஹ் வட்டியை அழித்து விடுகின்றான்; இன்னும் தானதர்மங்களை வளரச் செய்கின்றான். மேலும் நன்றி கொன்று, தீய செயல் புரிவோர் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி, தொழுகையையும் நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உண்மையில் நம்பிக்கையாளராக இருப்பின் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (உங்களுக்கு வரவேண்டிய) வட்டிப் பாக்கிகளை விட்டு விடுங்கள். ஆனால், அவ்வாறு நீங்கள் செய்யாவிடின், அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டு விட்டதென்பதை அறிந்து கொள்ளுங்கள். (இப்பொழுதும்கூட) நீங்கள் பாவமன்னிப்புக்கோரி (வட்டியைக் கைவிட்டு) விட்டால் உங்களுடைய மூலதனம் உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது. உங்களிடம் கடன் பட்டவர் வசதியற்றவராக இருந்தால் (அவருக்கு) வசதி ஏற்படும்வரை, நீங்கள் காத்திருங்கள். நீங்கள் உண்மையை அறிந்திருப்பின் (அசலையே அவர்களுக்கு) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு இன்னும் சிறந்ததாகும்.வரவிருக்கும் அந்நாளில் (ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்! அன்று அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான) கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
“வட்டி ஒரு கொடூரமானது” என்பதை கொடுப்போரும், வாங்குவோரும்தான் மற்றவர்களை விட மிகத் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளனர். எனினும் அதிலிருந்து அவர்களால் விட முடியாமல் தவித்து வருகிறார்கள்.
தனி மனிதனிடமட்டுமல்ல இந்நிலமை. மாறாக, உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அதன் கொடூரம் புரிந்திருந்தும் அதிலிருந்து விடுபட வழி அறியாது விழி பிதுங்கி நிற்கின்றன. பணக்கார நாடுகள் சில, ஏழை நாடுகளை வட்டியின் பெயரால் சுரண்டிப் பிழைத்து வருகின்றன. வளர்ந்து(?) வரும் ஏழை நாடுகளோ வேறு வழியின்றி வட்டிக்கு வாங்கி, அதற்கான வட்டியைக்கட்ட மேலும் வட்டிக்கு வாங்கி.. என இவ்வாறே பின்னோக்கி செல்கின்றன.
உலகளவில் இயங்கி வரும் இன்றைய எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்த வட்டியை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றன.
இத்தொழிலில்(?) ஈடுபட்டுவரும் முனைவர்கள் கூறும் காரணங்கள்தான் வேடிக்கையானது. விரைவில் முன்னேற்றம் அடைய வட்டிக்கு வாங்குவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என வாதிடுகிறார்கள். அவரச்தேவைக்கு என வட்டிக்கடைகாரர்களைத் தவிர கடன் தருவதற்கு யார் முன் வருகிறார்கள்? என பலஹீனமான கேள்வி ஒன்றையும் எடுத்து வைக்கிறார்கள்.
நமது இந்திய நாடே ஒட்டு மொத்தமாக வட்டியில் மூழ்கி விடுமோ என்ற அபாய நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு கொடுப்போரிடமெல்லாம் கை நீட்டி கடனை வாங்கிக் குவித்திருக்கிறது. இந்திய நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் பல டன் தங்கத்தையே அடகு வைத்து கடன் வாங்கிய கூத்தும் இந்தியாவில் நடந்ததை அறிவோம். வாங்கியவர்களின் தொப்பையை நிரப்பிக் கொள்ளப் பயன்பட்டதோ என்னவோ, பொதுமக்களுக்கு எந்தப் பயனும் அதனால் ஏற்படவில்லை.
இந்தியா வாங்கிக் குவித்துள்ள கடன் காரணத்தால், என்றாவது ஒரு நாள், உலக வங்கியானது தான் வழங்கிய கடனுக்காக இந்தியாவை கிரயமாக எழுதி வாங்கிவிட்டால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. அந்தளவிற்கு அபரிமிதமாக உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கி உள்ளது. எழுதிக் கொடுப்பதற்கும் தயக்கம் காட்டாதவர்கள்தான் இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது ஒரு வேதனையான விஷயம்.
இந்தியனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் தான் வாங்காத கடனில் ஒரு சுமையைச் சுமந்தே ஆக வேண்டும் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு வாங்கும் ஒவ்வொரு முறையும் நாடாளும் மன்னர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எளியவர்களின் துயர் துடைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியை – புரட்சியை ஏற்படுத்த நல்ல பல திட்டங்கள் வகுத்து செயல் படுத்துவதற்காகத்தான் இப்பணம் பயன்படுத்தப்படும் போன்ற போலியான காரணங்களையே கூறி வருகிறார்கள்.
அவர்கள் கூறுவது போன்று வட்டிக்கு வாங்கிய நாடுகள், வங்கிக் கடனில் சுய தொழில் செய்து வரும் தனி நபர்கள், அல்லது வட்டியை மூலதனமாக வைத்து தொழிற்சாலைகள் துவங்கிய முதலாளிகள் தங்களது எண்ணத்தில் – திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா? அவர்களது தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே ஆய்வறிக்கைகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.
துவங்கிய பல தொழிற்சாலைகள் தொடங்கிய அதே வேகத்திலேயே இழுத்து மூடப்பட்டு விட்டன என்பதையும், அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளிகள் ஒரு நேர சோத்துக்கு வழியின்றி தெருவில் இறங்கி போரடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.
காரணம் என்ன? வட்டிக்கு கடன் வாங்கி தொழில் துவங்கிய சில நாட்களிலேயே வட்டி கட்ட வேண்டிய நெருக்கடி தொழிலதிபர்களுக்கு ஏற்படுகிறது. அதனை கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்படும் போது, தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார். இதுதான் நமது நாட்டில் அடிக்கடி நடந்து வரும் கேலிக் கூத்தான நிகழ்வு.
தமிழில் ஒரு வழக்குச் சொல் ஒன்று உண்டு.
“அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியை கட்ட முடியாமல், அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன்”
இதுதான் நமது இந்திய நாட்டின் நிலை! இந்தியக் குடி மக்களின் பெரும்பாலாரின் அவல நிலையும் இதுதான். மேற்கூறிய வழக்குச் சொல்லுக்கு விரிவுரையாக விளங்கும் சர்வசாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை எளிதில் புரிய வைப்பதற்காக இங்கே குறிப்பிடுகிறேன்.
“வீட்டு லோன்” கேள்விப்பட்டிருப்பீர்களே! இன்றெல்லாம் வீடு தேடி வந்து வீட்டு லோன் தருகிறார்கள். இதில் தனியார் நிறுவனங்கள்(?) பரபரப்பான விளம்பரங்களை செய்து, வாடிக்கையாளர்களை தனது மாய வலைக்குள் சிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். பரிசுகள் பல உண்டு என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் தாங்கிய விளம்பரங்கள் நகரங்களின் அடுக்கு மாடிக் கட்டிடச் சுவர்களை ஆக்கரமித்துள்ளன.
சொந்த வீடு பற்றிய கனவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பரம ஏழைகளில் பலர் பளிச்சிடும் இந்த போலியான விளம்பரங்களில் விட்டில் பூச்சியாய் விழுந்து தங்களை மாய்த்து வருகிறார்கள்.
சிரமப்பட்டு பல தேவையான ஆதாரங்களைத் திரட்டி, வீடு கட்டுவதற்காக ஆயுள் காப்பீட்டு (L.I.C.) நிறுவனத்தை அணுகி குறைந்த வட்டி விகித்தில் இடத்தின் பத்திரத்தை அடமானமாக வைத்து கடனைப் பெற்று விடுகிறார்கள். இதில் இஸ்லாமியர்கள் – ஈமான் குன்றியவர்கள் அதிகம் ஈடுபட்டிருப்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன்.
வாங்கிய கடனைக் கொண்டு வீடு கட்டி முடிப்பதற்குள் வட்டித் தொகையை கட்ட வேண்டிய காலம் வந்து விடும். அதனை கட்ட முடியாமல், சிரமப்பட்டுக் கொண்டிருப்பவன், கட்டி முடிவடையாமல், அரை குறையாக இருக்கும் தனது வீட்டினை அடிமாட்டு விலைக்கு விற்று வட்டியைக் கட்ட வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப்படுகிறான். (இது தேவைதானா? வாசகர்களே! இதை உங்களது சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.)
“ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்” என்பது போல, வட்டிக்கு வாங்குபவன் இருக்கும் வரை வட்டிக்கு கொடுப்பவன் ஏழைகளின் இரத்தை உறுஞ்சிக் கொண்டுதான் இருப்பான்.
இந்த வட்டியில்தான் எத்தனை விதங்கள்! எத்தனை ரகங்கள்! அப்பப்பா!!
வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டி ரகங்கள்!
இந்த அனைத்து ரக வட்டிகளும், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வு செய்து கண்டு பிடிக்கப் பட்ட புதிய ரகங்களா? அதுதான் இல்லை. பட்டு வேட்டி கட்டிவிடலாம் என்ற கனவில் வட்டிக்கு கடன் வாங்கியவன், இறுதியில் அவன் கட்டியிருக்கும் கோவணத்தையே இழக்கச் செய்யும் வட்டி ரகங்கள்தான் இவைகள். ஆம்! இந்த ரக வட்டிகள் மக்களை ஓட்டாண்டியாக்கி வைக்கும் புது ரக கொடூர வட்டிகள்.
மனித சமூகத்தில் ஊடுறுவிய புற்று நோய்கள்தான் இந்த வட்டி ரகங்கள். இதனை அடியோடு வேரறுக்க வில்லையெனில், சமூகத்தையே அழித்து விடும் அபாயம் நிறைந்தது. எந்த சமூகத்தில் வட்டி தலைவிரித்தாடுகிறதோ, அவர்களின் மீது இறைவனின் சாபமும், தண்டனையும் இறங்குகிறது என்பதை பின்வரும் நபி மொழி எச்சரிக்கிறது:
“விபச்சாரமும்,வட்டியும் மலிந்து காணப்படும் சமுதாயம் தங்களை இறைவனின் தண்டனைக்கு இலக்காக்கிக் கொள்கிறார்கள்”|என நபிகள் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: அபூ யஃலா.