2:8 இன்னும் “அல்லாஹ்வையும் இறுதி(த் தீர்ப்பு) நாளையும் நம்பியிருக்கிறோம்” எனக் கூறுவோர் சிலரும் மனிதர்களில் உளர். ஆயினும், அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். 2:9 (இப்படிக் கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை! எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. 2:10 அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ் (இந்)நோயை அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டான். மேலும் அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கொடிய தண்டனையும் அவர்களுக்குண்டு. 2:11 இன்னும் “பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்!” என அவர்களிடம் சொல்லப்பட்டால், “நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே!” என அவர்கள் கூறுகிறார்கள். 2:12 எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பவாதிகளாவர். ஆயினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. 2:13 இன்னும் “மற்ற மனிதர்கள் ஈமான் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!” என அவர்களிடம் சொல்லப்பட்டால் “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?” என்றே அவர்கள் பதில் சொல்கிறார்கள் எச்சரிக்கை! நிச்சயமாக இவர்கள்தாம் மூடர்களாவர். ஆயினும் (இதனை) அவர்கள் அறிவதில்லை! 2:14 இன்னும் இறைநம்பிக்கை கொண்டிருப்போரை அவர்கள் சந்தித்தால், ‘நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்எனக் கூறுகின்றனர். மேலும் தங்கள் ஷைத்தான்களுடன் அவர்கள் தனிமையில் இருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்! உண்மையில் நாங்கள் அவர்களைப் பரிகாசம்தான் செய்து கொண்டிருக்கிறோம்” எனச் சொல்கின்றனர். 2:15 அல்லாஹ் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறான். (அவன்) அவர்களுக்கு அவகாசம் அளித்துக் கொண்டு இருக்கின்றான்; (அவர்களோ) தமது வரம்பு மீறிய நடத்தையில் கண்மூடித்தனமாக உழன்று கொண்டேயிருக்கிறார்கள். 2:16 இத்தகையோரே நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டைக் கொள்முதல் செய்தோர்! ஆனால் இவர்களின் இவ்வாணிபம் இலாபம் தரக்கூடியதாக இல்லை. இன்னும் (அறவே) நேர்வழி பெற்றவர்களாகவும் இவர்கள் இருக்கவில்லை. 2:17 இத்தகையோரின் உவமானம் (பின்வரும்) உதாரணத்தைப்போல் இருக்கிறது: ஒருவர் தீயை மூட்டினார்; அது அவரைச் சுற்றிலும் ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியைப் பறித்து விட்டான். மேலும் எதையுமே அவர்கள் காணமுடியாத நிலையில் அவர்களை இருள்களில் விட்டு விட்டான். 2:18 அவர்கள் செவிடர்களாய், ஊமையர்களாய், குருடர்களாய் இருக்கின்றனர். எனவே, இப்பொழுது அவர்கள் மீள மாட்டார்கள்; 2:19 அல்லது இவர்களுடைய உவமானம், இவ்வாறு இருக்கிறது: வானத்திலிருந்து கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது; அத்துடன் காரிருளும் இடியும் மின்னலும் உள்ளன. (அதில் மாட்டிக் கொண்டவர்கள்) இடி முழக்கங்களைக் கேட்டு மரணத்திற்கு அஞ்சி தம் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கின்றார்கள். மேலும் (சத்தியத்தை) நிராகரிக்கும் இத்தகையோரை அல்லாஹ் எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். 2:20 அவர்களுடைய பார்வைகளைப் பறிப்பது போல் (பயங்கரமாக) மின்னல் வெட்டுகிறது. அவர்களுக்கு அது (கொஞ்சம்) ஒளிதரும் போதெல்லாம் அதில் (சிறிது தூரம்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். மேலும், இருள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்போது நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலன்களையும், பார்வைப் புலன்களையும் முழுமையாகப் பறித்திருப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவனாய் இருக்கின்றான்.