உறவின் மேன்மை! – 1

– இஸ்மாயில் ஸலபி

உறவின் மேன்மை! – 1

உறவின் மேன்மை

உறவின் மேன்மை

ஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.
துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.
நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
ஈமானுடன் சம்பந்தப்பட்டது:
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
‘யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.
அல்லாஹ்வுடன் தொடர்பு :
ஏற்கனவே இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவு என்று கூறினோம். இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.
அல்லா{ஹதஆலா இரத்த உறவைப் பார்த்து ‘யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்’ என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூ{ஹரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி
என்ற அறிவிப்பின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக்கப் படுவதையும் நாம் காணலாம்.
‘இரத்த உறவு அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்’ எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
இந்த அறிவிப்பும் குடும்ப உறவைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, இதற்கு மாறாகச் செயல் படுவோரைக் கண்டிக்கவும் செய்வது கவனிக்கத் தக்கதாகும்.
சுவனத்தில் நுழைவிக்கும்:
இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
‘நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்’ என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
சுவனம் செல்ல விரும்புபவர்கள் மேற்குறித்த நோக்கில் செயல்பட்டு குடும்ப உறவைப்பேண முன்வர வேண்டும்.

Related Post