ரமலானின் மூன்று பகுதிகள்!  – 3

– இப்னு ஹனீஃப்

ரமலானின் மூன்று பகுதிகள்!  – 3

 நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.

நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.

றைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.  (நோன்பு நோற்பது) குறிப்பிட்ட சில நாட்களிலேயாகும். ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது ஃபித்யா (பரிகாரம்) கடமையாகின்றது. அது (ஒரு நோன்புக்குரிய பரிகாரம்) ஓர் ஏழைக்கு உணவளிப்பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிக நன்மை செய்தால், அது அவருக்கே சிறந்ததாகும். ஆனால் நீங்கள் அறிவுடையோராயிருப்பின் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மை ஈட்டித் தரும். ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது!) மேலும் (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், “நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்). எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக் கொள்ளட்டும். என்மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.”  நோன்புக்கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுக்கே வஞ்சனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து கொண்டான். எனினும், உங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றான்; மேலும் உங்கள் குற்றங்களைப் பொறுத்தருளினான். இனி (இரவில்) அவர்களுடன் நீங்கள் கூடுங்கள். அல்லாஹ் அனுமதித்துள்ள இன்பங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் விடியற்காலையில் வெள்ளை நூலையும், கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை, நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் (இவற்றையெல்லாம் தவிர்த்து) இரவு (தொடங்கும்) வரை நோன்பை நிறைவு செய்யுங்கள். ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதிகாஃப்* இருக்கும் நிலையில் மனைவியரோடு கூடாதீர்கள். இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும். எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள். மக்கள் (தவறான வழிகளிலிருந்து) தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னுடைய கட்டளைகளை(யும் விதிகளையும்) அல்லாஹ் இவ்வாறு தெளிவாக்குகின்றான்.மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்.

மலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, ‘அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது’ என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.

நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ‘இஃதிகாப்’ இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் ‘இஃதிகாப்’ இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த ‘இஃதிகாப்’ இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.

நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.

இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27, 29 போன்ற வௌ;வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:

லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:

லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:

லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லா{ஹம்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.

இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!

அல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.

Related Post