ரமலானின் மூன்று பகுதிகள்! – 1

– இப்னு ஹனீஃப்

இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்

இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்

றைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.  (நோன்பு நோற்பது) குறிப்பிட்ட சில நாட்களிலேயாகும். ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது ஃபித்யா (பரிகாரம்) கடமையாகின்றது. அது (ஒரு நோன்புக்குரிய பரிகாரம்) ஓர் ஏழைக்கு உணவளிப்பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிக நன்மை செய்தால், அது அவருக்கே சிறந்ததாகும். ஆனால் நீங்கள் அறிவுடையோராயிருப்பின் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மை ஈட்டித் தரும். ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது!) மேலும் (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், “நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்). எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக் கொள்ளட்டும். என்மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.”  நோன்புக்கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுக்கே வஞ்சனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து கொண்டான். எனினும், உங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றான்; மேலும் உங்கள் குற்றங்களைப் பொறுத்தருளினான். இனி (இரவில்) அவர்களுடன் நீங்கள் கூடுங்கள். அல்லாஹ் அனுமதித்துள்ள இன்பங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் விடியற்காலையில் வெள்ளை நூலையும், கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை, நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் (இவற்றையெல்லாம் தவிர்த்து) இரவு (தொடங்கும்) வரை நோன்பை நிறைவு செய்யுங்கள். ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதிகாஃப்* இருக்கும் நிலையில் மனைவியரோடு கூடாதீர்கள். இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும். எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள். மக்கள் (தவறான வழிகளிலிருந்து) தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னுடைய கட்டளைகளை(யும் விதிகளையும்) அல்லாஹ் இவ்வாறு தெளிவாக்குகின்றான்.மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்.

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,

நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.

கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.

இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமலான் ஒரு மாதத்தில் மட்டுமின்றி தினந்தோரும் இருப்பதுபோல் அனைவரின் உள்ளத்திலும் இவ்வுணர்வு குடிகொண்டு, அதன் மூலம் வெளிப்படும் வணக்க வழிபாடுகளும் இதர அன்றாடச் செயல்பாடுகளும் அமைந்து விட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்றன்றோ எனும் ஆவலும் எண்ணமும் நமக்கு ஏற்படுகின்றது. இந்நிலையை நமது வாழ்க்கையில் ரமலானில் மட்டுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.

இந்த கண்ணிய மிக்க மாதத்தின்

இந்த கண்ணிய மிக்க மாதத்தின்

இந்த கண்ணிய மிக்க மாதத்தின் முப்பது நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள் என்று கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து ‘நஜாத்’ மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை’ என்ற அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லா விட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.

இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டு. கல்வி மற்றும் அறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டு. உடல் அழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடு படுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம். ஈமான் (இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பதுதான் உண்மையில் அருட்கொடை.

இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)

இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும் பேரும் புகழும் சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.
‘எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:

‘நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்’ என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர்.

இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள், நான் ஆமீன் என்றேன். ‘உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)

Related Post