Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்! -1

January 7வ்ஹீதின் அடிப்படை தேவைகளை முழுமைப்படுத்துவதற்கு, படைத்துப் பரிபாலித்தலில் இறைவனை ஒருமைப்படுத்துதல், இறைவனின் பண்புகள் மற்றும் பெயர்கள் ஆகியவற்றில் இறைவனை ஒருமைப்படுத்துதல் ஆகிய இரண்டை மட்டும் உறுதியாக நம்பினால் போதாது.

தவ்ஹீத் முழுமை அடைவதற்கு மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதோடு வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதலையும் உறுதியாக நம்பவேண்டும். இவற்றிற்கு ஆதாரமாக, அல்லாஹ் தான் திருமறையில் மிகத் தெளிவாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த இறைநிராகரிப்பாளர்கள் மேலே சொன்ன இரண்டு வகையான தவ்ஹீதை மட்டும் நம்பினார்கள் என்று கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

‘உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள் ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக” (அல்-குர்ஆன் 10:31)

“மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?”  (அல்-குர்ஆன் 43:87)

“இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?’ என்று நீர் கேட்பீராகில்: ‘அல்லாஹ்’ என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். (அதற்கு நீர்) ‘அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது’ என்று கூறுவீராக. எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்”  (அல்-குர்ஆன் 29:63)

மக்கத்துவாசிகள் அல்லாஹ் தான் படைத்தவன், பாதுகாப்பவன் மற்றும் தங்களுடைய கடவுள் என்று அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அல்லாஹ்வை பொறுத்தவரையில் முஸ்லிம் என்று சொல்வதற்கு இந்த அறிவு மட்டும் போதாது.

அல்லாஹ் கூறுகிறான்: –

“மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை”  (அல்-குர்ஆன் 12:106)

முஜாஹித் (இப்னு அப்பாஸின் மிகச்சிறந்த மாணவர்) அவர்கள் மேற்கண்ட வசனத்துக்கு விளக்கம் அளிக்கையில், அல்லாஹ் தான் தங்களை படைத்தவன், உணவளிப்பவன் மற்றும் தங்களின் உயிர்களை வாங்குபவன் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லாஹ்வோடு மற்ற கடவுள்களை வணங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை. ஆகையால் மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஆட்சியையும் சக்தியையும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்குத் தேவைகள் அல்லது துன்பங்கள் வரும் போதெல்லாம் தங்களுடைய பலவிதமான வணக்க வழிபாடுகளான ஹஜ், தான தர்மங்கள் நேர்ச்சைகள் மற்றும் அறுத்துப் பலியிடுதல் ஆகியவற்றை மற்ற கடவுள்களுக்கு அர்ப்பணித்தனர்.  இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை இப்றாஹீம் நபியின் வழித் தோன்றல்கள் என்றும் கூறிக் கொண்டனர். இவர்களின் இந்த கூற்றுக்காக அல்லாஹ் இந்த வசனத்தை இறக்குகிறான்.

“இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார். அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை”  (அல்-குர்ஆன் 3:67)

சில மக்கத்து காஃபிர்கள் ‘மறுமை நாளையும்’ ‘தீர்ப்பு உண்டென்றும்’ வேறு சிலர் ‘களா கத்ரை’யும் நம்பினர். முந்தைய இஸ்லாமிய கவிதைகளில் இவற்றிற்கு அதிகமான சான்றுகள் காணப்படுகின்றது. உதாரணமாக ஜுஹைர் என்ற கவிஞர் ‘அது தாமதப்படுத்தப்பட்டுள்ளது’ அல்லது ‘மறுமை நாளுக்காக பாதுகாக்கப்பட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார் .

அந்நாரா என்ற கவிஞர் ‘ஓ எபிலே மரணத்தை விட்டு எங்கே தப்பித்து ஓடுகிறாய்? என் இறைவன் அதை ஏற்கனவே நிர்ணயித்துவிட்டான்’ என்று கூறியுள்ளார்.

மக்கத்து காஃபிர்கள் தவ்ஹீதையும் இறைவனையும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவர்கள் இறைவனை விட்டு விட்டு மற்ற கடவுள்களை வழிபட்ட காரணத்தால் இறைவன் அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று விவரிக்கிறான் .

ஆகையால் வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துவதன் முக்கியத்துவம் என்னவெனில் இறைவனை வணங்குவதில் ஒருமையை கட்டிக் காத்தலாகும். வணங்குவதற்கு அவன் ஒருவனே தகுதியுடையவன் ஆதலாலும் அவன் ஒருவனே நமக்கு நன்மை அளிக்கக்கூடியவன் ஆகையாலும் அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும் இறைவன் ஒருவனை முன்னிறுத்தியே செய்ய வேண்டும். மேலும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே எந்தவித இடைத்தரகரும் தேவையில்லை. மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் மேலும் நபிமார்கள் எடுத்துச் சென்ற செய்தியின் முக்கியத்துவம் அனைத்துமே வணக்கவழிபாடுகளில் இறைவன் ஒருவனையே முன்னிறுத்தப்பட வேண்டும் என அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை”  (அல்-குர்ஆன் 51:56)

“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள். வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்” (அல்-குர்ஆன் 16:36)

சகோதரர் M. அன்வர்தீன்

Related Post