இஸ்லாமும் இங்கிதமும்…! ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஓர் அழகிய ‘குளுகுளு’ அரங்கு. சொகுசான இருக்கைகள். கண்களை உறுத்தாத வெளிச்சம். காதுகளை வருடிச் செல்லும் மென்மையான இசை. விரைவில் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. தொழில் அதிபர்கள், பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள், இளம் பெண்கள், வணிக முகவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் என்று குழுமத் தொடங்குகிறார்கள். எல்லாரும் அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டனர். இதில் கலந்துகொள்வதற்காக அவர்கள் செலுத்திய கட்டணம் கொஞ்சமல்ல. ஆயிரக் கணக்கில் பணம் செலுத்தி தங்கள் பெயர்களை முன்பதிவு செய்திருந்தார்கள்.
அப்படியென்ன நிகழ்ச்சி அது?
ஆளுமை வளர்ச்சிக்கான வகுப்பு அது. வணிகத்திலும் தொழில்-துறையிலும் மட்டுமின்றி அன்றாட வாழ்விலும் மற்றவர்களுடன் எப்படி நடந்துகொள்வது, மற்றவர்களின் இதயங்களை எப்படி வெல்வது, கடுமையான நெருக்கடிகளைக்கூட புன்னகை மாறாமல் எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் சொல்லித் தரும் வகுப்பு.
சரி, அங்கு நடத்தப்படும் பாடங்கள் என்ன தெரியுமா? நம்ம ஊர் மதரஸாவில் ஓதுகிற பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் நடத்தும் குர்ஆன்-நபிமொழிப் பாடங்கள்தாம் அவை. “அப்படியா?” என்று உங்கள் விழிப் புருவங்கள் வில்லாய் வளைகின்றன அல்லவா? ஆயினும் அதுதான் உண்மை.
“நீங்கள் உங்கள் சகோதரனைப் புன்முறுவலுடன் பார்ப்பதும் ஓர் அறமே” என்பது நபிகளார் கற்றுத்தந்த அருமையான வாழ்வியல் கலைகளில் ஒன்று. இதை அரபிக் கல்லூரியில் நம்ம ஊர் உஸ்தாத் சொன்னால் அது ஹதீஸ் பாடம். இதையே ஒருவர் கோட்டும் சூட்டும் மாட்டிக் கொண்டு, பத்தாயிரம் ரூபாய் கட்டணம் வாங்கிக்கொண்டு, நட்சத்திர ஹோட்டலின் குளுகுளு அறையில் சற்றே ஆங்கிலம் கலந்து சொன்னால் அது ‘பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோர்ஸ்’.
‘உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது’ என்றோ, ‘அனுமதி பெற்று உள்ளே வருக’ என்றோ பல நிறுவனங்களிலும் அலுவலகங்-களிலும் வீடுகளிலும் பலகைகள் தொங்குவதை நாம் பார்த்திருக்-கலாம். இருபதாம் நூற்றாண்டு கற்றுத்தந்த இனிய நாகரிகம் இது என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் கற்றுத்தந்த அழகிய நடைமுறைதான் இது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ‘மற்றவர்களின் வீடுகளில் நுழைவதற்கு முன்பு அந்த வீட்டாரின் அனுமதியைக் கோருங்கள். அதுதான் உங்களுக்கு மிகச் சிறப்புடையதாகும்’ எனும் திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் (திருக்குர்ஆன் 24: 27) இதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதி-யாகவே ஆக்கிவிட்டான் இறைவன்.
அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட மூன்று நேரங்களில் மட்டும் பெற்றோர்களின் அறைகளில் நுழைவதற்குப் பிள்ளைகள் அனுமதி பெறவேண்டும் எனும் நனிசிறந்த நாகரிகத்தையும் இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. நவீன நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருப்பதாக ஊரறியத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மேலை நாடுகளில்கூட காணப்படாத இங்கிதம் இது. இஸ்லாமிய வாழ்வியல் எத்துணை உயர் நாகரிகச் சிறப்பும் பண்பாட்டுச் செழுமையும் கொண்டது என்பதை அறிய இந்த ஒரு கட்டளையே போதுமானது.
இதுபோல் திருக்குர்ஆனும் திருநபி(ஸல்) அவர்களும் கற்றுத்தரும் இங்கிதங்கள் ஏராளம்… ஏராளம்..! அவற்றை-யெல்லாம் அழகிய வடிவில் தொகுத்து ‘இஸ்லாமும் இங்கிதமும்’ எனும் தலைப்பில் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் ‘சமரசம்’ இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். வாசகர்களின் ஒருமித்த பாராட்டுகளை அந்தத் தொடர் அள்ளிச் சென்றது. நபிமொழிச் சுரங்கத்தில் நுழைந்து மௌலவி அவர்கள் தோண்டித் தோண்டி எடுத்துத் தந்த அந்தக் கருத்துக் கருவூலம்தான் இன்று உங்கள் கைகளில் நூல் வடிவில் தவழ்கிறது.
இந்த நூலில் காணப்படும் இங்கிதங்கள் அனைத்தும் நபிகளாருக்கு இறைவனே கற்றுத் தந்தவை. மனித வாழ்வு எல்லா வகையிலும் மேம்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த இங்கிதங்களை நாமும் பின்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும். அதன் மூலம் நம் வாழ்வு இம்மையிலும் அழகு பெற வேண்டும்; மறுமையிலும் ஒளி பெறவேண்டும் என்பது நமது பேரவா.
ஆசிரியர்: மெளலவி நூஹ் மஹ்ழரி