இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான். (அல்குர்ஆன் 2:208)
ஈடிணையற்ற அருட்கொடை
மனிதன் தன் வாழ்வில் அனுபவிக்கும் அருட்கொடைதான் எத்தனை! எத்தனை! அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கிட்டால் அதனை எண்ணிலடக்க முடியாது. (அல்குர்ஆன் 14:34)
ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல் பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஈமான் முழுமையடைவதுஎப்போது?
ஈமான் என்பது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் சூழ்ந்து நிற்கும் வாழ்க்கைத் திட்டத்தின் பெயராகும். ஏகத்துவக் கொள்கை என்பது ஈமானின் நுழைவாயில். அதனுள் நுழைந்த பிறகு அதில் கடக்க வேண்டிய எத்தனையோ
கட்டங்கள்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமானிற்கு எழுபதிற்கும் அதிகமாக கிளைகள் உள்ளன. அதில் முதன்மையானது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது. வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும். (நூல்: முஸ்லிம்)
எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் மனிதன் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகிறது.
ஆனால் நமது சமுதாயத்தில் ஏகத்துவக் கொள்கையை ஏற்று, தனக்கு ஓர் இஸ்லாமியப் பெயரையும் சூட்டிக்கொண்டதோடு ஈமான் முழுமை அடைந்துவிட்டது என திருப்தியடைபவர் ஒருபுறம். நான் தொழுவேன், நோன்பு நோற்பேன், ஆனால் வரதட்சணை வாங்கிக் கொள்வேன், என்னுடைய தொழிலில் வட்டித் தொடர்பிருக்கும் என சில கடமைகளைப் பேணி, பல கடமைகளை புறக் கணிப்பவர் மற்றொருபுறம், ரமலான்மாதத்தில் மட்டும் பள்ளிவாயிலுடன் தொடர்பு வைத்து, அதற்குப் பிறகு பள்ளி செல்ல அடுத்த ரமலானை எதிர் பார்த்திருக்கும் கூட்டத்தினரோ உலகெங்கிலும் ஏராளம். இவ்வகையினர் மார்க்கத்தைப் பின்பற்றுவதாக எண்ணி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு, பெயர் தாங்கி முஸ்லிமாக வாழ்வது மிக வருத்தத்திற்குரியது.
ஈமானின் பயன்கள்
முழுமையடைந்த ஈமானின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் பல உள்ளன. அவை அம்மனிதனோடு மட்டும் நின்றுவிடாது பிறரையும் சென்றடைகின்றன. அல்லாஹ் கூறுகிறான்:
(லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்)நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் கூறும் உதாரணத்தை (நபியே!)நீர் பார்க்கவில்லையா? அது நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்தும் அதன் கிளைகள் வானளாவியும் இருக்கின்றன. அது தன் இரட்சகனின் அனுமதி கொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. (அல்குர்ஆன் 14:24,25)
ஏகத்துவக் கொள்கையை உள்ளத்தில் ஆழப்பதித்து, அதை வாழ்வின் அனைத்துத் துறையிலும் வெளிப்படுத்தும் மனிதன் காய்த்துக் குலுங்கும் பயனுள்ள மரத்தைப் போன்றவன் என அல்லாஹ் கூறும் உவமையைக் கவனித்தீர்களா!
அது மட்டுமல்ல! அம்மனிதர் மரணிக்கும் போது மலக்குகள் அவரிடம் உரையாடுவதைக் கேளுங்கள்!
நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி, அதில் உறுதியாக நிலைத்து நின்றவர்கள் மீது(அவர்களின் மரண வேளையில்)மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கச் சுபச்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நாங்கள் உங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள். அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு. அதில் நீங்கள் தேடுபவை உங்களுக்குண்டு. மிகவும் மன்னிப்பவனான, கிருபையுடையோனிடமிருந்துள்ள விருந்தாக (அச்சுவனத்தைப்)பெற்றுக் கொள்வீர்கள் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,32)
இந்நிலையில் அவர் தன்வாழ்வின் இறுதி வார்த்தையாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவக் கலிமாவுடன் இவ்வுலகிற்கு விடைதரும் பாக்கியத்தைப் பெறுகிறார்.
குவளையிலிருந்து ஊற்றப்படும் தண்ணீர் போல் மிக எளிதாக அவரின் உயிரை எடுத்து சொர்க்கக் கம்பளத்தில் வைத்து மலக்குகள் எடுத்துச் செல்ல, இவரின் பிரிவால் நல்லோர்கள் கண்ணீர் வடித்து துக்கத்தில் ஆழ்கின்றனர். ஏன்!
அவரின் மரணத்திற்காக வானம், பூமி கூட அழுகிறது. (கருத்து, அல்குர்ஆன் 44:29)
ஏகத்துவக் கொள்கை மற்றும் அது எதிர்பார்க்கும் அமலுஸ் ஸாலிஹ் எனும் நல்லறங்களுடன் வாழ்ந்த அம்மனிதர் நரகம் செல்லாமல் -இறையருளால்- நேரடியாக சொர்க்கம் செல்கிறார். இதுவல்லவா உண்மையான வெற்றி! அல்லாஹ் கூறுகிறான்:
யார் நரகை விட்டும் தூரமாக்கப்பட்டு, சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ நிச்சயமாக அவரே வெற்றி அடைந்தவராவார். (அல்குர்ஆன் 3:185)
ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதுவே உண்மையான வெற்றி!
அன்புச் சகோதர, சகோதரிகளே! நாமும் நம்முடைய வாழ்க்கையை இவ்வாறு ஏன் அமைத்துக் கொள்ளக் கூடாது?! சற்று நிதானமாக, தனிமையில் உங்கள் உள்ளத்துடன் உரையாடுங்கள்! அல்லாஹ் விரும்புவதை உங்கள் விருப்பமாகவும் அவன் வெறுப்பை உங்கள் வெறுப்பாகவும் அவனிடம் கிடைக்கும் நற்பெயரையே உங்கள் இலட்சியமாகவும் ஆக்கிக் கொள்ள நாம் ஏன் முன்வரக் கூடாது?! சிந்தியுங்கள்! சுயபரிசோதனை செய்து, செயல்படத்துவங்குங்கள்! அல்லாஹ் அப்பாதையை உங்களுக்கு நிச்சயமாக எளிதாக்குவான்!