குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-7

http://youtu.be/S8ONJ8kR2-I

(நபியே!) நீர் கூறும்: யாரேனும் ஜிப்ரீலுக்குப் பகைவராக இருந்தால் அவர் அறிந்து கொள்ளட்டும் அல்லாஹ்வின் ஆணைப்படியே ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது (எத்தகைய வேதமெனில்) தனக்கு முன்னுள்ள வேதங்களை மெய்ப்படுத்துவதாகவும், இறைநம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும், வெற்றிக்கான நற்செய்தி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. (ஜிப்ரீல் மீது அவர்கள் பகைமை கொள்வதற்கு இதுவே காரணமெனில், நபியே! நீர் கூறும்:) 2:98 “எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் பகைவராக இருந்தால், நிச்சயமாக அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ்வும் பகைவனாகவே இருப்பான்.” 2:99 இன்னும் (நபியே! சத்தியத்தை) தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்களை நிச்சயமாக உமக்கு நாம் இறக்கி அருளியிருக்கிறோம். ஃபாஸிக்களை (கீழ்ப்படியாதவர்களை)த் தவிர வேறு எவரும் அவற்றை(ப் பின்பற்றுவதை) நிராகரிக்க மாட்டார்கள். 2:100 அவர்கள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்வதும், (பிறகு) அவர்களில் யாராவது ஒரு சாரார் அதனை முறித்து விடுவதும் எப்பொழுதுமே (அவர்களுடைய) வழக்கமாக இருந்து வந்ததில்லையா? தவிரவும் அவர்களில் பெரும்பாலோர் உளமார்ந்த நம்பிக்கை கொள்வதில்லை. 2:101 மேலும், அல்லாஹ்விடமிருந்து யாரேனும் ஓர் இறைத்தூதர் அவர்களிடமிருந்த வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியவராக அவர்களிடம் வந்தபோது, வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் தாம் எதுவும் அறியாதவர்கள் போன்று அல்லாஹ்வின் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டார்கள். 2:102 (இதற்குப் பதிலாக) ஸுலைமானுடைய ஆட்சியின்போது ஷைத்தான்கள் எடுத்தோதி வந்த (சூனியத்)தை அவர்கள் பின்பற்றலானார்கள். ஆனால் ஸுலைமான் (ஒருபோதும்) நிராகரிக்கவில்லை. ஆயினும் மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஷைத்தான்கள்தாம் நிராகரித்தார்கள். மேலும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். (ஆனால்) எவருக்கேனும் சூனியக்கலையைக் கற்றுக் கொடுக்க நேரும்போது அந்த வானவர்கள், “நாங்கள் உங்களுக்கு ஒரு சோதனையாகவே இருக்கிறோம்; ஆகவே, நீங்கள் (இதனைக் கொண்டு) இறை நிராகரிப்பை மேற்கொள்ள வேண்டாம்” என எச்சரித்து விடுவார்கள். ஆனால், இதற்குப் பிறகும், கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிளவை உருவாக்குகின்ற சூனியத்தை அவ்விருவரிடம் இருந்து அவர்கள் கற்று வந்தனர். அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இந்த சூனியத்தைக் கொண்டு எவருக்கும் (எந்த வகையிலும்) அவர்களால் தீங்கிழைக்க முடியாது. உண்மையில் தங்களுக்குப் பலனளிக்காததும், தீங்கிழைக்கக் கூடியதுமானதையே அவர்கள் கற்றனர். மேலும் (சூனியத்தைக் கற்று) அதனை விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்கு மறுமையில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தேயிருந்தனர். தங்கள் உயிர்களை விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணைக் கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? 2:103 உண்மையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கைகொண்டு, இறையச்சமுள்ள வாழ்வை மேற்கொண்டிருந்தால் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலி மேலானதாக இருந்திருக்கும். அந்தோ! இதனை அவர்கள் அறிந்திருக்கவில்லையே!

Related Post