Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்!-4

Oneness 1

வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்!

ல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கே செய்து அவனையே வணங்க வேண்டும் என்றும் நம்பிக்கை கொள்வதற்கு ‘தவ்ஹீதுல் உலுஹிய்யா’ என்று பெயர்.

அல்லாஹ் மடடுமே இப்பேரண்டத்தை படைத்து, பரிபாலித்து உணவளித்துக் கொண்டிப்பவன் ஆகையால் அவன் மட்டுமே வணக்கத்திற்கு முழு தகுதியுடையவன் ஆவான். வணக்கம் என்பது அல்லாஹ்தஆலாவிற்கே முழு உரிமையுள்ள ஒன்றாகும். எனவே அவனுடைய படைப்பினங்களான நாம் அவனை மட்டுமே வணங்க வேண்டும்.

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும், அதாவது தொழுகை, நோன்பு வைத்தல், ஜக்காத் கொடுத்தல், பிரார்த்தனை செய்தல், மன்றாடுதல், உதவி கோருதுல், நேர்ச்சை செய்தல், குர்;பானி கொடுத்தல், பேரச்சம் கொள்ளுதல் இன்னும் பிற அனைத்து வகையான வணக்கக்கங்களையும் அவனுக்கே செய்து அவனையே வழிபடவேண்டும் என நம்பிக்கை கொள்வதற்கு தவ்ஹீதுல் உலூஹிய்யா என்று பெயர்.

இந்த வகை தவ்ஹீதை ஏற்றுக்கொள்வதில் தான் எல்லாக் காலகட்டங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களை முன்னர் வாழ்ந்த முஷ்ரிக்குகளும், இணை வைப்பவர்களும் நிராகரித்து வந்தனர். இந்த முஷ்ரிக்குகள் இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து பரிபாலித்து வருபவன் அல்லாஹ்வே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தனர். ஆனால் அவனுக்கே முழு உரிமையான வணக்கங்களை அவனல்லாது பிறருக்கு செய்து வந்தனர்.

அவர்களாகவே பதிய கடவுளர்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவைகள் அவர்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கி வைக்கும் என்று அவைகளை வழிபட்டு அல்லாஹ்வால் மன்னிக்கப்படமாட்டாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் செய்த குற்றவாளியாகின்றனர்.

தவ்ஹீது உலூஹிய்யாவுக்கான திருக் குர்ஆன் ஆதாரங்கள்: –

அல்குர்ஆன் அத்தியாயம் 27. ஸூரத்துந் நம்ல்(எறும்புகள்), வசனங்கள் 59-65 ல் அல்லாஹ் கூறுகிறான்: –

27:59 (நபியே!) நீர் கூறுவீராக: ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?’

27:60 அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.

27:61 இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

27:62 கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.

27:63 கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ‘ரஹ்மத்’ என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? – அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.

27:64 முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: ‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.’

27:65 (இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’

ஆகையால் தவ்ஹீது உலூஹிய்யா என்பது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே என்று நம்பி அவனையே வணங்கி வழிபடுவதாகும்.

தொடர்புடைய ஆக்கங்கள்:

fff

 

 

 

Related Post