– வலம்புரி ஜான்
வசந்தத்தின் வேர் இஸ்லாம்..!-4
அப்படி என்றால் இறை நெறிநூலின் அடிப்படையில் மாத்திரமே. அவனது வெளிப்பாட்டின் வண்ணம் மாத்திரமே இந்த ஒரே உலகம் சாத்தியமாகும் என்பதற்கான வல்ல அறிகுறிகள் உள்ளன அல்லவா?
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.
அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளை) கேட்டுக் கொள்ளுகிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர் களையும் (ஆதரியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பு உள்ளவனாக இருக்கிறான். (திருகுர்ஆன் 4:1)
என்று இறைவனின் நெறிநூல் உரைக்கின்றது. ஒரே உலகத்திற்கான இஸ்லாம் காட்டும் அடிப்படைகள் எவை என்று பார்த்தால்.
- இறை அச்சம்
- ஒரே மனிதனிலிருந்து உண்டான உலக சமுதாயம்
- ஆண் பெண் சமத்துவம்
- தனிப்பட்டோர், சமுதாய உரிமைகள், கடமைகள்
- கடவுளின் நித்தியக் கண்காணிப்பு
ஒரே உலகத்திற்கான, தள்ள முடியாத, தவிர்க்க முடியாத அடிப்படைகள் இவை. இறைவனின் மீதான இஸ்லாமிய நம்பிக்கை உலக சமுதாயத்தை ஒரு சேரக் கட்டுகிற இணைப்புச் சங்கிலி; இஸ்லாமியத் தொழுகை மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை நிறுவுகிறது.
இஸ்லாத்தின் ரம்சான் மாத நோன்பு முஸ்லிம்களிடத்திலாவது உலக அளவில் ஒருமை காணுகின்றது. முஸ்லிம்களின் ஜகாத் வறிய சகோதர சகோதரிகளுக்கு வலியச் சென்று உதவ முன்வருகிற வழி. ஆதலால் இந்த உலகம் எல்லோருக்கும் உரியது என்றாகிறது.
இஸ்லாத்தின் ஹஜ் புனித யாத்திரை மனிதனுக்கு மனிதன் உள்ள வேறுபாடுகளை முஸ்லிம்கள் மத்தியிலாவது மறக்கடிக்கப் பண்ணுகிறது.
பாழ்பட்டுக் கிடக்கிற உலகத்தை மீட்டு ஒரே உலகமாக இறைவனின் பூந்தோட்டமாக ஆக்குகிற பொறுப்பை இஸ்லாம் மேற்கொண்டுள்ளது.
இல்லாவிட்டால் தனது சமுதாயக் கடமை களைச் சரிவர ஆற்றாத முஸ்லிம், இறைவனை உண்மையாகவே தொழ இயலாது என்கிற அளவிற்கு இஸ்லாம் சொல்லியிருக்காது.
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிரிருந்தே படைத்தோம், நீங்கள் ஒருவரை – ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர், உங்க ளைக் கிளைகளாகவும், கோத்திரங்களாக வும் ஆக்கினோம், (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தி(தக்வா) உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ் விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன் (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருகுர்ஆன் 49:13)
என்கிற திருகுர்ஆனின் வரிகள் ஒரு நாட்டினருக்கோ, மொழியினருக்கோ, இனத்தவருக்கோ உரியது என்று எவரேனும் குறிப்பிட இயலுமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பொறுத்தமட்டில் மனிதர்களில் இரண்டே பிரிவினர்தாம்.
- இறைவனுக்கு அச்சப்படுவோர்
- இறைவனுக்கு அஞ்சாதோர்
நபிகள் நாயகம்(ஸல்) மதீனாவில் உருவாக்கிய முதல் சமுதாயத்திலேயே ஆப்ரிக்கர்களும், பாரசீகர்களும் சகோதரர்களானார்கள். மனம் மாறி முஸ்லிமான பிலால் என்ற ஆப்ரிக்கர் உமர் குறைஷியாலேயே தலைவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
நேர்வழி நடவாத ஒரு அரேபியனை விட நேர்வழி நடக்கிற ஒரு ஆப்ரிக்கன் ஆளத் தகுதி பெற்றவன் என்று நபிகள் நாயகம்(ஸல்) அடிக்கடி எடுத்துக் காட்டுகிறார்கள். வேகமாக மாறிவருகிற உலகத்தின் சுகக்கேடுகளுக்கு இஸ்லாம் ஒன்றுதான் மாமருந்து என்றெனக்குத் தோன்றுகிறது.
இஸ்லாமிய வாழ்க்கையைக் கவனத்தில் கொள்ளாமல், புறந்தள்ளிவிட்டு உலக சகோதரத்துவம் பேசுவதும், ‘ஒரே உலகம்’ அடைவதற்குப் பாடுபடுவதும் மன்னிக்கவே முடியாத குற்றங்களாகும்.
இறைவன் நமது உலகத் தலைவர்களின் உள்ளங்களில் பேசட்டும், அவர்களும் ஆர்வத்தோடு அவனது மொழிகளைக் கேட்கட்டும், அப்போது ஒரே உலகம் தனது தத்துவார்த்த மேடையிலிருந்து இறங்கி, நிதர்சனத்தை நோக்கி உருளத் தொடங்கும்.