Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

மனிதர்குல மாணிக்கம் முஹம்மத் (ஸல்)-ஏன்..?

மனிதர்குல மாணிக்கம் முஹம்மத் (ஸல்)

மனிதர்குல மாணிக்கம் முஹம்மத் (ஸல்)

றுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை  இஸ்லாமிய மக்கள்ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது

சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்… இதை படித்து முடிக்கும் போது “இவர் ஏன் சிறந்தவர்” என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)…

நேர்மை :

இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருக்கும் ஒரு துண்டு பேரிச்சை பழத்தை தனது பேரன் வாயில் போட , இறைத்தூதரோ பதறிப் போய் வாயில் இருந்து பேரிச்சையை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து “அரசு பணத்தில்  எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல” என்று கூறினார்கள்.   கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?

மதினாவில் தொழுவதற்காக பள்ளிவாசல் தேவைப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்காக இரு இளைஞர்கள் இலவசமாகவே இடம்  கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் இறைத்தூதரோ இலவசமாக வேண்டாம் என்று கூறி  பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள். அவர் இலவசமாகவே அந்த இடத்தை பெற்றிருக்க முடியும்… செய்தார்களா?

ஏழ்மை வாழ்க்கை :

இறைத்தூதர் குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று நாட்க்களுக்கு எந்த உணவையும் வயிறாற உண்டதில்லை.  மற்றவர்கள் பரிதாபம் கொண்டு விருந்துக்கு அழைக்கும் நிலையிலேயே  தன் வாழ்நாளை பட்டினியுடன் கழித்துள்ளார்கள்.


இறைத்தூதரிடம் ஒரு பாய் விரிப்பு மட்டுமே இருந்துள்ளது. அதை பகல் நேரத்தில் படுக்கைக்கு விரிப்பாகவும், இரவு நேரத்தில் வீட்டை மறைக்கும் கதவாகவும் பயன்படுத்தினார்கள். பாயின் மீது எவ்வித விரிப்பும் இல்லாமல் படுப்பதால் அவரின் உடலில் பாயின் தடம் பதிந்திருக்கும். சாதாரண தலையணையே பயன்படுத்தினார்கள். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர், மாளிகையில் வாழ்ந்திருக்க முடியும். கருவூல பணத்தில் தன் வாழ்நாளை சுகபோகத்தில் கழித்திருக்க முடியும்… செய்தார்களா?

மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் :

மக்களிடத்தில் எவ்வித மரியாதையையும், தனிப்பட்ட கவனிப்பும், சிறப்பும் பெற அவர்கள் ஒரு போதும் விரும்பியதில்லை. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான இறைத்தூதரை காண்பதும், கேள்வி கேட்பதும், பேசுவதும், பழகுவதும் , ஒன்றாக உணவு அருந்துவதும் அந்தப் பகுதி மக்களுக்கு பெரிய விஷயமாக இருக்கவேயில்லை.

முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க தாமதமானதால் கோபம் கொண்டு நபியை ஏசுகிறார் ஒரு யூதர். ஆனால் இவரோ பொருமையாக கடன்கொடுத்தவருக்கு உரிமை இருக்கிறது, அவரை துன்புறத்த வேண்டாம் என தன் தோழர்களுக்கு கட்டளையிடுகிறார். இறைத்தூதர் நினைத்திருந்தால் ஆட்சிதலைவராக தண்டனை வழங்கியிருக்கலாம். அதற்கான அதிகாரமும் இவருக்கு உண்டு. ஆனாலும் செய்தார்களா?

தனக்கு அன்பளிப்பாக வந்த  ஆட்டை வைத்து ஏற்பாடு செய்த விருந்திற்கு   பொதுமக்கள் அனைவரையும் அழைத்து  மக்களோடு ஒன்றாகவே அமர்ந்து உணவருந்தினார்கள்.
“அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் அல்லாஹ் என்னை ஆக்கவில்லை” என்றார்கள். இத்தகைய ஆட்சியாளரைக் கண்டதுண்டா ? தனக்கு கொடுக்கப்பட்ட பரிசை தானே முழுமையாக அனுபவித்திருக்க முடியும்.  செய்தார்களா?

மரியாதை காரணமாக நடுக்கத்துடன் இறைத்தூதரை காண வந்தார் ஒரு நபர். “சாதாரணமாக இருப்பீராக. சாதாரண குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்” என்று கூறி சகஜ நிலைக்கு அந்த நபரைக் கொண்டுவருகிறார்கள் .

பள்ளிவாசல் கட்ட கல் சுமப்பதும், அகழ் வெட்டுவதும் என மக்களோடு மக்களாக தாமும் இணைந்து செயல்பட்டார் இந்த மாமனிதர்! தன் ஆட்சிக்குட்பட்ட சாதாரண மக்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பவராகவும், குடும்பங்களில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நேராக அவர்கள் வீட்டிற்கே சென்று விஷாரிப்பதுமாக மக்களோடு ஒன்றிணைந்த வாழ்க்கை வாழ்ந்தார் இந்த உத்தம மனிதர்!

நன்றி:இஸ்லாமிய பெண்மணி

தொடர்புடைய ஆக்கங்கள்:

மனிதர்குல மாணிக்கம் முஹம்மத் (ஸல்)-ஏன்..? 2

மனிதர்குல மாணிக்கம் முஹம்மத் (ஸல்)-ஏன்..?-3

 

Related Post